சென்னை, ஜூலை 24- பள்ளிகளில், மாணவர்களின் விளையாட்டு நேரத்தை கடன் வாங்கி பாடம் நடத்த வேண்டாம் என்று ஆசிரியர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விளையாட்டு முக்கியம்
பன்னாட்டு மற்றும் தேசியப் போட்டிகளில் பதக்கங்களை வென்று சாதித்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, நிதி பள்ளி கல்வித்துறை சார்பில் பாராட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் (22.7.2025) நடந்தது.
2024-2025ஆம் கல்வியாண்டில் பல்வேறு பன்னாட்டு போட்டிகளில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 76 தங்கம், 26 வெள்ளி, 24 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர். இதேபோல் தேசியப் போட்டிகளில் 348 தங்கம் உள்பட 917 பதக்கங்களும், மாநில விளையாட்டுப் போட்டி களில் 4,745 பதக்கங்களும் வென்று இருக்கிறார்கள். சாதனை படைத்த மொத்தம் 5,788 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், மாணவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்ட உடற்கல்வி ஆசிரியர் வளநூல் எனும் புத்தகத்தையும் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் இருந்து இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் காண்பதற்கு, இதுபோன்ற நிகழ்ச்சிகள் மிகப்பெரிய அளவில் கைகொடுக்கின்றன. பாடத் திட்டத்தில் இருந்து கிடைக்கின்ற கல்வி மட்டுமல்ல, விளையாட்டின் மூலமும் நிறைய விஷயங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும். கூட்டுறவு, குழுப்பணி, நம்பிக்கை, நட்பு, யுக்தி, திட்டமிடல், செயல்படுத்தல் என வாழ்க்கைக்கு தேவையான அத்தனை குணங் களையும் விளையாட்டு நமக்கு கற்றுக் கொடுக்கிறது.
பரிசுத் தொகை
உங்களுக்கு அனைத்து வகையிலும், துணை நிற்க நம் முடைய முதலமைச்சரும், திராவிட மாடல் அரசும், விளையாட்டுத் துறையும் இருக்கிறது.
நீங்கள் வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு சென்று விளையாடு கின்றபோது, உங்களுக்காக உதவிட தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை என்றைக்குமே உங்களுக்கு துணை நிற்கும்.
இதற்கான இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். உங்களுக்கு உடனடியாக அந்த உதவிகள் செய்யப்படும். அதே மாதிரி இந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை பதிவுகளை தொடங்கி இருக்கிறோம். கிட்டத்தட்ட பரிசுத் தொகை மட்டும் ரூ.36 கோடி தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மூலமாக கொடுக்கப்படுகிறது. அதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும்.
விளையாட்டு நேரத்தை
கடன் வாங்காதீர்
இறுதியாக ஒரே ஒரு விஷயம், மாணவர்களின் சார்பாக ஆசிரியர் களுக்கு ஒரே ஒரு கோரிக்கைதான். விளையாட்டு நேரத்தை எந்த ஆசிரியரும் தயவு செய்து கடன் வாங்கி அதில் பாடம் நடத் தாதீர்கள்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரையும் வைத்துக் கொண்டுதான் இந்த கோரிக்கையை வைக்கிறேன். வேண்டுமென்றால், அறிவியல், கணித ஆசிரியர்கள் உங்களோட பாடநேரத்தில் மாணவர்களுக்கு தயவு செய்து விளையாட்டு பாட நேரத்திற்கு கடன் கொடுங்கள்.
ஏனென்றால் விளையாட்டு பாட நேரம் என்பது ஒவ்வொரு மாணவருடைய உரிமை. அதில் நிச்சயமாக மாணவர்கள் விளையாட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.