‘துக்ளக்’குக்குப் பதிலடி! சங்கராச்சாரியாரைக் கேலிப்படம் போட்டால் ‘துக்ளக்’ குருமூர்த்திக்கு இனிக்குமா?

8 Min Read

(23.7.2025 நாளிட்ட ‘துக்ளக்’ இதழ்
கேள்விகளுக்குப் பதிலடிகள்)

கேள்வி 1: வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறாரே முதல்வர் மு.க.ஸ்டாலின்?

பதில்: முன்பு கட்சிக் கூட்டங்களுக்குத் திரண்டு வந்த மக்கள் இப்போது வருவதில்லை. ஸ்டாலின் என்ன செய்வார் பாவம். அவர்கள் வீடுகளுக்குப் போகிறார்.

பதிலடி: வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திப்பது கேவலமா?

விவசாயம் பாவத் தொழில் என்று சொல்லிக் கொண்டு, அந்த விவசாயத்தை செய்பவர்களால் வயிறு முட்டத் தின்று, தொந்தியில் சந்தனத்தைக் குழைத்துத் தடவும் கூட்டம் அல்லவா? – மக்கள் என்றால் அவ்வளவுக் கேவலம் இந்தப் புல்லேந்திகளுக்கு!

– – – – –

கேள்வி 2 : அ.தி.மு.க.வுக்கு இனி ‘அமித்ஷா முன்னேற்றக் கழகம்’ என்று பெயர் சூட்டலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கிண்டலடித்துள்ளது பற்றி?

பதில்: அப்படியென்றால் திராவிடர் கழகத்துக்கும் கூட, ‘கோபாலபுரக் கிளைக் கழகம்’ என்று பெயரிடலாமே.

பதிலடிப் பக்கம், மின்சாரம்

பதிலடி: “நேற்றும் சரி, இன்றும் சரி, நாளையும் சரி எங்களை வழிநடத்துவது திராவிடர் கழகம் தான் (முரசொலி, 2.12.2018)- நாங்கள் செல்லும் பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடல்தான்” (24.2.2019) என்று செவிளில் அறைந்தது மாதிரி தளபதி மு.க.ஸ்டாலின் சொன்னாரே – இன்னும் புத்தி வரவில்லையா?

– – – – –

கேள்வி 3: ‘நான் பாராட்டுகளில் மட்டும் மயங்கி விடாமல், விமர்சனங்களையும் வரவேற்கிறேன்’ என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருப்பது பற்றி?

பதில்: பின் ஏன் 9.7.2025 துக்ளக் அட்டைப்படத்தில், அவர் முருகனுக்கு காவடி எடுப்பது போல போட்ட கேலி விமர்சனத்தை வரவேற்காமல், “அது பல ஆண்டு வன்மம்” என்று பொருமினார் அவர்?

பதிலடி: பழைய காலத்தில் பிராம்மணன் தான் பிச்சை எடுப்பான். மற்ற ஜாதிக்காரர்கள் நாமாகக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். “பிச்சைக்காரப் பார்ப்பான் தெரு” என்று கும்பகோணத்தில் ஒரு தெரு கூட இருக்கிறது. பிராம்மண சந்நியாசிகள் அன்னப் பிச்சை வாங்குவார்கள். பிராம்மணர்கள் உஞ்சி விருத்தி செய்வார்கள் (காஞ்சி காமகோடி சங்கராச்சாரியார் உபந்நியாசங்கள்).

இதை வைத்துக் கொண்டு காஞ்சி சங்கராச்சாரியார் கோவணம் கட்டிக்கொண்டு, கையில் திருவோடு கொடுத்து பிச்சை எடுப்பது போல் கார்ட்டூன் போட்டால் கேலி விமர்சனம் என்று திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் கூட்டம் சந்தோஷப்படுவாளோ!

பதிலடிப் பக்கம், மின்சாரம்

– – – – –

கேள்வி 4:  ‘நாங்கள் ஆரியத்துக்குதான் எதிரி, ஆன்மீகத்துக்கு அல்ல’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது எதைக் காட்டுகிறது ?

பதில்: ஆரியம் என்றால் வெள்ளை இனம் என்று 19-ஆம் நூற்றாண்டு இறுதியில் ஆங்கிலேயர்கள்தான் பரப்பினர். அதற்கு முன் ஹிந்து அல்லாத சமயங்களில், சங்க இலக்கியங்களில் ஆரியம் என்பதற்கு அர்த்தம் என்ன? இலங்கை, கம்போடியா, மியன்மார் நாடுகளில் பிரபலமான “தெரவாடா பௌத்தம்” (தெற்கு (திராவிட) பௌத்தம்), ‘ஆர்ய’ என்றால் ‘முனி/ஞானி’ என்கிறது (1) பாரதம் “ஆர்ய பூமி” (ஞானிகள்/முனிகள் பூமி) “தான் அதன் சீடன்” என்று வழிபடுகிறது திபெத் பௌத்தம் (2) ஜைன மதமும் ஆர்ய என்றால் “ஞானி” என்கிறது. “ஆர்ய ரக்ஷ” சூரி என்று ஒரு ஜைன முனிவரே இருந்தார் (3) ஈரான் அவெஸ்தா சமயமும், ஆர்ய என்றால் ஞானி என்கிறது. (4) சங்கநூல் பதிற்றுப்பத்து 2-ஆவதில் 11-ஆவது செய்யுள் பிரபல இமயமலை ‘ஆரியர்களால்’ – முனிகள்/ரிஷிகளால் நிறைந்துள்ளது என்கிறது. (5) எனவே ஆரியம் என்றால் ஞானம். இனம் அல்ல. இவை எல்லாவற்றையும் ஒதுக்கி வெள்ளைக்காரர்கள் கூறுவதை நம்பித்தான், ஆரியத்துக்கு எதிரி என்று கூறுகிறார் ஸ்டாலின். முனிகள், ஞானிகள் உங்கள் எதிரிகளா மிஸ்டர் ஸ்டாலின்?

பதிலடிப் பக்கம், மின்சாரம்

பதிலடி: ஆரியராவது, திராவிடராவது – அதெல்லாம் வெள்ளைக்காரன் பிரித்தாளக் கட்டி விட்டது என்று சொல்லி வந்தவர்கள். இப்பொழுது நெருக்கடி வரும் போது ஆரியர் என்பதற்கு ஆதாரங்களைக் காட்ட ஆரம்பித்து விட்டனர் பார்த்தீர்களா?

ஆரியர்கள் என்றால் ஞானமாம் – வயிறு குலுங்கச் சிரிக்கலாம். மாட்டு மூத்திரம், சாணி, பால், நெய், தயிர் ஆகியவற்றைக் கலக்கி பஞ்சகவ்யம் என்று குடிக்கும் – குடிக்கச் சொல்லும் கூட்டத்தின் ஞானமோ ஞானம்!

– – – – –

கேள்வி 5: முருகன் தமிழ் கடவுள், வினாயகர் ஹிந்தி கடவுளா என்று கேட்கும் திருமாவைப் பற்றி இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் என்ன நினைப்பார்கள்?

பதில்: இஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு கவலை வேண்டாம். அவர்களின் கடவுள்களுக்கு அரசியல் சாஸனம் பாதுகாப்பளிக்கிறது. ஹிந்து கடவுள்களுக்கு மட்டுமே அந்தப் பாதுகாப்பு இல்லை.

பதிலடி: அந்தோ பரிதாபம்! இவர்களின் கடவுள்களை அரசியல் சாசனம்தான் பாதுகாக்க வேண்டியுள்ளதோ! அந்தோ பரிதாபம். இவர்களின் கடவுள்களுக்கென்று சக்தியும் கிடையாது – ஒரு வெங்காயமும் கிடையாது என்று ஒப்புக் கொணட்தற்குச் சந்தோசம்!

– – – – –

கேள்வி 6: அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை கூறும், மத்தியஸ்தம் செய்யும் நீங்கள், வடகலை, தென்கலை சிக்கலைச் சீர்படுத்த தீர்வு சொல்லலாமே?

பதில்: கேட்பவர்களுக்கு மட்டுமே ஆலோசனை கூறுகிறேன். இரு தரப்பும் கோரினால் மத்தியஸ்தம் கூடச் செய்கிறேன். வடகலை, தென்கலை யாரும் என்னை ஆலோசனை கேட்கவில்லை. மத்தியஸ்தம் செய்யக் கோரவில்லை.

பதிலடிப் பக்கம், மின்சாரம்

பதிலடி: பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு என்ன விலை என்று சொன்னானாம் – அந்தக் கிறுக்கர்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்று போதும்.

இந்து மதத்தில் வடகலை, தென்கலை என்று கூறி தெருச் சண்டைப் போடுவது பற்றிக் கொஞ்சமும் வெட்கம் இல்லை. (இதில் ‘இந்துக்களே ஒன்று சேருங்கள்!’ என்று அழைப்பு வேறு) பிரச்சினையைத் திசை திருப்புவதைப் பார்த்தேளா! இதற்குப் பெயர்தான் திரிபு வேலை. திரிநூலார்கள் என்றுபெயர் (‘நூல் எனிலோ கோல் சாயும்!’ என்று அவ்வையாரும் பாடியுள்ளாரே!).

கூடுதல் தகவல்: குருமூர்த்தியின் குருநாதர் ‘சோ’ எனன சொன்னார்? ‘என் ஆலோசனையைக் கேட்ட யாரும் உருப்பட்டதில்லை. என்னிடம் ஆலோசனை கேட்பவர்கள் என்ன ஆனார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். (The Name is Rajiv Gandhi நூல் வெளியிட்டு விழா 2008, மார்ச்)

குருமூர்த்தியின் குருநாதர் சோ ஆலோசனையைக் கேட்டே, யாரும் உருப்பட்டதில்லை. இந்தக் குருமூர்த்தியின் ஆலோசனையைக் கேட்டால் அதல பாதாளம் தான்!

– – – – –

கேள்வி 7: தி.மு.க.வின் ‘ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்’ பற்றி ?

பதில்: ஈ.வெ.ரா. துதி, அண்ணா போற்றுதல், ஹிந்தி துவேஷம், நீட் விரோதம், மும்மொழி எதிர்ப்பு, சிறுபான்மையினர் தாஜா எல்லாவற்றிலும் தி.மு.க. ஓரணியில்தானே இருக்கிறது. பின் ஏன் அதற்கு ஸ்டாலின் இயக்கம் நடத்துகிறார்?

பதிலடி: தி.மு.க.வைப் பற்றி குற்றச்சாட்டுகள் எல்லாம், திமுகவைப் பாராட்டும் கொள்கைகள் தான் – திமுக தன் கொள்கையில் சரியாகவே இருக்கிறது என்பதற்கான நற்சான்று பத்திரம்தான் – ஆத்திரக்காரனுக்கு அறிவு மட்டு என்று சொல்லுவார்களே அதற்கு இது எடுத்துக்காட்டு! ‘எனக்குப் பைத்தியம் தெளிந்து விட்டது, உலக்கையைக் கொண்டு வா, கோவணங்கட்டிக் கொள்கிறேன்!’ என்றானாம் – அந்தக் கதையாக அல்லவா இருக்கிறது ‘துக்ளக்’கின் புத்தி.

– – – – –

கேள்வி 8: ‘நெருக்கடி காலக் கொடுமைகளை மறப்பது நாட்டுக்கே ஆபத்து’ என்கிறாரே அமித் ஷா. கொடுமைகளை மறப்பதுதானே மனஅமைதி தரும்?

பதில்: திரும்பவர வாய்ப்பில்லாத கொடுமைகளை மறக்கவேண்டும். ‘தேவை ஏற்பட்டால் மீண்டும் நெருக்கடி நிலை கொண்டு வருவோம்’ என்று (ஜூலை-1985) நாடாளுமன்றத்தில் கூறினார் பிரதமர் ராஜிவ். இன்று வரை சோனியா, ராஹுல் இருவரும் நெருக்கடி நிலைக்கு மன்னிப்புக் கேட்கவில்லை. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பிருப்பதால், நெருக்கடி நிலை மீண்டும் வரலாம். நெருக்கடிக்கு மன்னிப்புக் கூடக் கேட்காத அவர்கள் கையில்காங்கிரஸ் இருக்கும் வரை, நெருக்கடி காலத்தை மறப்பது ஆபத்து. அமித் ஷா கூறுவது சரியே.

பதிலடி: நெருக்கடி காலக் கொடுமை என்பது உண்மைதான்! அப்பொழுது தணிக்கை அதிகாரிகள் என்ற பெயரால் பார்ப்பனர்கள் போட்ட ஆட்ட பாட்டம் கொஞ்சமா என்ன?

தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட ‘விடுதலை’யில் தந்தை பெரியார் அவர்கள் என்று போடக் கூடாது என்று சிகப்பு மையில் சுழித்ததும், அதே நேரத்தில் சங்கராச்சாரி என்று எழுதினால், சங்கராச்சாரியார் என்று ‘யாரை’ சேர்த்ததும் இந்தப் பார்ப்பன சிண்டுகள் தானே!

நெருக்கடி நிலை காலத்தில் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் அடிப்படை என்று ‘செக்குலர்’, “சோசலிஸ்ட்’ என்ற ஆழமான அவசியமான இரு கொள்கைகள் சேர்க்கப்பட்ட (42ஆவது திருத்தம்) அந்த நல்ல காரியத்தை பூணூலை முறுக்கிக் கொண்டு எதிர்க்கிறதே பிஜேபி – சங் பரிவார்க் கூட்டமும், குருமூர்த்தி வகையறாக்களும்! நெருக்கடி நிலையை எதிர்ப்பதில் கூட பார்ப்பனர்களின் கண்ணோட்டம் வித்தியாசமானதே!

அது ஒரு புறம் இருக்கட்டும். கடந்த 11 ஆண்டு காலமாக நடைபெற்றுவரும் மோடி தலைமையிலான ஒன்றிய பிஜேபி அரசு – நெருக்கடி நிலைக்கு அப்பன்தானே!

பன்னாட்டுத் தர வரிசை என்ற அடிப்படையில் ஊடகச் சுதந்திரம் பற்றிய கணிப்பின் Reporters Index Frontiers (PIF) தரவுகளின்படி ஆண்டுவாரியாக உலகின் 180 நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் இருக்கிறது?

2014-140, 2018-138, 2021-142, 2023-180, 2024-180

180 நாடுகளில் 138ஆவது இடம் முதல் கடைசி இடம் வரை ஒன்றிய பிஜேபி ஆட்சியில் ஊடகத் சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்று சொல்லுவது இந்தியா கூட்டணிக் கட்சிகள் அல்ல; பன்னாட்டுத் தரவு அமைப்புப் பட்டியலிடுகிறது.

இந்த வகையில் பார்த்தால்கூட நெருக்கடி நிலையைப் பற்றிக் குறைகூற ‘துக்ளக்’ பார்ப்பன வகையறாக்களுக்கு யோக்கியதை இல்லை என்பது நினைவில் இருக்கட்டும்!

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் கூட்டம், பட்டப் பகலில் காமராசரை தீயிட்டுக் கொளுத்த முயன்ற கும்பல் எல்லாம், ஒரு சூலம் கிறித்தவர்களையும், இன்னொரு சூலம் முஸ்லிம்களையும் மூன்றாவது சூலம் மதச் சார்பின்மைப் பேசுபவர்களையும் பதம் பார்க்கும் என்று பொது மக்களுக்குத் திரிசூலங்களை வழங்கும் விஸ்வஹிந்து பரிஷத் என்னும் ஆர்.எஸ்.எஸ். விரியனின் குட்டிகள் எல்லாம் நியாய தர்மத்தையும், மக்கள் நல்வாழ்வையும், சமூக நல்லிணக்கத்தையும் பற்றி வாய்த் திறக்க அல்லது எழுதுகோலைப் பிடிக்க யோக்கியதை உண்டா?

என்ன குருமூர்த்தி அய்யர்வாளே பதில் உண்டா?

என்றைக்குப் பதில் சொல்லியிருக்கிறார்கள் – இன்றைக்குப் பதில் சொல்ல?.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *