மறு உத்தரவு வரும் வரை பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றக்கூடாது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

1 Min Read

மதுரை, ஜூலை 24- மறு உத்தரவு வரும் வரை பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றக்கூடாது என உயர்நீதிமன்ற கிளையின் 3 நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் 3 நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் அமைக்கப் பட்டுள்ள அனைத்துக் கட்சி, சமுதாய அமைப்புகளின் நிரந்தர கட்சிக் கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட கட்சிக்கு தாக்கீது அளித்து அடுத்த 2 வாரங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும். இதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட கட்சி அல்லது அமைப்பிடம் வசூலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வும் உறுதி செய்தது. இந்த வழக்கில், தங்களையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற, தலைமை நீதிபதிக்கு பரிந் துரைத்தார். அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி எஸ்.எஸ்.சவுந்தர், நீதிபதி ஆர்.விஜயகுமார் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என, தலைமை நீதிபதி கே.ஆர்.சிறீராம் அறிவித்தார்.

இந்நிலையில், மறு உத்தரவு வரும் வரை பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றக் கூடாது என உயர்நீதிமன்ற கிளையின் 3 நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொடிக் கம்பங்கள் அகற்றும் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *