நாசா ஆய்வு மய்யம், வருகிற 2026ஆம் ஆண்டு பிப்ரவரியில், 4 வீரர்களை நிலவின் சுற்றுப்பாதைக்கு அனுப்ப திட்டமிட்டு உள்ளது.
பன்னாட்டு விண்வெளி நிலையப் பயணம்
அமெரிக்காவின் நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆகிய 2 விண்வெளி நிறுவனங்களும், சமீபத்தில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி சாதனை படைத்தது. அவர்கள் 18 நாள் ஆய்வுப்பயணத்துக்குப் பின் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினர்.
இதனை தொடர்ந்து, நாசா ஆர்ட்டெமிஸ்-2 என்ற அடுத்த மனித விண்வெளிப் பயணத்தை தொடங்க இருக்கிறது. இது விண்வெளி ஏவுதள அமைப்பு மற்றும் ஓரியன் விண்கலத்தின் குழுவினருடன் கூடிய ராக்கெட் சோதனையாகும். இது வருகிற 2026ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஏவப்பட உள்ளது.t
நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு
இந்த பணியில் 4 விண்வெளி வீரர்கள் 10 நாட்கள் நிலவு சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பி, மீண்டும் பூமிக்கு அழைத்து வரப்பட உள்ளனர். இது எதிர்காலத்தில் நிலவில் தரையிறங்குவதை நோக்கமாக கொண்ட சோதனையாகும்.
கடந்த 1972ஆம் ஆண்டு அப்பல்லோ-17 க்குப் பிறகு, பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையைத் தாண்டி நிலவுக்குப் பயணிக்கும் முதல் பணியாளர்களைக் கொண்ட பணி இதுவாகும். நிலவு சுற்றுப்பாதையில் உள்ள ஒரு சிறு கோளை ஆய்வு செய்வதுடன், விண்வெளி வீரர்கள் விண்வெளி நடைப்பயணங்களைச் செய்து மாதிரிகளைச் சேகரிப்பதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
யார் செல்கிறார்கள்?
இந்த திட்டத்தின் தளபதி ரீட் வைஸ்மேன், விமானி விக்டர் குளோவர். பணி வல்லுநர் கிறிஸ்டினா கோச் ஆகிய 3 பேரும் அமெரிக்கா நாசாவை சேர்ந்த விஞ்ஞானிகள். இது இவர்களுக்கு 2ஆவது விண்வெளிப் பயணமாகும். இவர்களுடன் செல்ல இருக்கும் மற்றொரு பணி நிபுணர் கனடாவை சேர்ந்த ஜெர்மி ஹேன்சன். இது இவருக்கு முதல் விண்வெளிப் பயணமாகும்.
இவர்கள் செல்லும் ராக்கெட் கென்னடி விண்வெளி மய்யத்தில் உள்ள 39-பி ஏவுதள வளாகத்தில் இருந்து ஏவப்படுகிறது. இது ஆரம்ப சுற்றுப்பாதையை அடைய சுமார் 8 நிமிடங்கள் எடுத்து கொள்ளும். நிலவின் மேற்பரப்பில் இருந்து சுமார் 7 ஆயிரம் 400 கிலோமீட்டர் தொலைவில் மிக நெருக்கமான அணுகுமுறையுடன் ஆய்வுப் பணியில் ஈடுபடும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறினர்.