தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
காது தொற்றுக் காரணமாக கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் இருந்தாலும் எனது சிந்தனையெல்லாம் ‘பெரியார் உலகம்’ மீதுதான் என்றும், இதற்காக நிதி திரட்டுவதில் கழகத் தோழர்கள் ஊக்கத்துடன் செயல்பட வேண்டும் என்றும் விரைவில் நலமுடன் தானும் இணைவேன் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பாசத்திற்கும் நம்பிக்கைக்கும் உரிய எமது கொள்கைக் குடும்ப உறவுகளே, எங்கும் பரந்து விரிந்துள்ள அன்பு, ஆதரவு காட்டி வரும் ‘கண்ணுக்குத் தெரியாத’ பெரியார் பற்றாளர்களே, உணர்வுப் பூர்வமான இன உணர்ச்சியாளர்களே,
பெருமைக்குரிய பகுத்தறிவாளர்களான அன்பர்களே,
உங்கள் அனைவருக்கும் எனது பாசம் மாறா அன்பு வணக்கம்.
15 நாட்களாக மருத்துவமனையில் இருந்து வருகிறேன்!
கடந்த 15 நாள்களாகத் தொடர் மருத்துவ சிகிச்சைக்கு ஆளானேன் என்றாலும்,
மருத்துவமனைகளில் இருந்தபோதும், மருத்துவ ஆலோசனைப் படியும், எனது உடல் நலம் காரணமாகப் பெரியார் திடல் அன்றாட வருகை, உங்கள் அனைவரையும் வழமைபோல் சந்திப்பது, தொலைப்பேசி மூலம் உரையாடுவது போன்ற நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டியுள்ள நிலையில்,
எனக்கு ஏற்பட்ட காது தொற்றுக்கான சிகிச்சை பிரபல காது, மூக்கு, தொண்டை மருத்துவர் டாக்டர் மோகன் காமேசுவரன் அவர்களது சீரிய சிகிச்சை நடவடிக்கைகள் மூலம் தொற்று பெரிதும் குறைந்துள்ளது என்பது நல்ல மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்கக் கூடிய ஒன்றாகும்.
இந்தக் கால கட்டத்தில் எனது சுற்றுப்பயணங்களைத் தள்ளி வைப்பது என்பது உடல் உபாதையைத் தாண்டி, எனக்கு மிகவும் மனவலியைத் தருகிறது!
எனது சிந்தனையெல்லாம் ‘பெரியார் உலகம்’’ தான்!
எனது சிந்தனையெல்லாம் பெரியார் உலகப் பணி, நமது பேரார்வப் பெரும் பணித் திட்டம் தவக்கப்படக் கூடாது; தற்போது ஏற்கெனவே அறிவித்ததுபோல கழகப் பொதுச் செயலாளர் அன்புராஜ் பொறுப்பில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் பணிகள் நடைபெற்றுள்ளன என்பது உற்சாகமூட்டும் செய்தியாக உள்ளது.
மருத்துவமனையில் இருந்தாலும்கூட எனது அன்றாட எழுத்துப் பணிகளைச் செய்யாமல் இருக்க முடியவில்லை. ‘விடுதலை’ எனது உயிர் மூச்சல்லவா?
அறிக்கைகளும், அறிவிக்க வேண்டிய செய்தியையும் பற்றி அவ்வப்போது எழுதி, விடுதலைக்கான அன்றாடப் பணிகளை நடத்தி வருகிறேன்.
எனது இலக்கை நிறைவு செய்யும் வகையில் இதுவரை
‘பெரியார் உலகி’ற்குக் கிடைத்த நன்கொடை ரூ.46 லட்சம்
எனது இலக்கை நிறைவு செய்ய நான் வைத்த அன்பு வேண்டுகோளுக்கிணங்க, தனித்தனியே தோழர்கள் அனுப்பிய தொகை 46 லட்சம் ரூபாய் அளவு சேர்ந்துள்ளது. இவை பெரிதும் பெரியார் உலகப் பணிகளை விரைவாக்க உதவுகின்றன.
உங்கள் ஊக்கம் தொடர வேண்டும். நான் பங்கேற்கும் கூட்டத்தில் வந்து சந்தித்து, உரையாடி, நேரில் தருவதற்குத் தயாராக இருக்கும் பல ஊர் தோழர்கள், நான் நேரில் வந்து பெற்றதாகவே கருதி, அவற்றை அனுப்பினால் பெரிதும் உதவும்.
எல்லாக் கழகக் குடும்பத்தினரும் முனைப்புடன் இதற்குக் முன்னுரிமை தாருங்கள்.
மற்றபடி, வழக்கமான கழகக் கடமைகளை ‘விடுதலையை’ப் பரப்புங்கள் – பரப்புரைகளை அடைமழைபோல் தொடருங்கள்!
நமது இளம் கொள்கைச் சிங்கங்கள் தங்களது பணிகளை வேகமாக முடுக்குங்கள்!
விரைவில் நலமுடன் உங்களோடு இணைவேன்!
‘விடுதலை’ ஏட்டில் கழகத் தோழர்களின் தொடர் பணிகள், என்னை விரைவில் குணமாக்கும் என்பது நீங்கள் அறியாததல்லவே!
நமது இலக்கை – கொள்கை வெற்றியை நாம் அடையாமல் விட்டதில்லை! தொடரட்டும் கொள்கைப் பயணங்கள்! நலமுடன் விரைவில் வந்து மீண்டு(ம்) உங்களோடு இணைவேன்.
உங்கள் தொண்டன் தோழன்
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
23.7.2025