தற்கொலை என்பது விரக்தி, வேதனை, மன அழுத்தம் முதலியவற்றால் ஏற்படுவது – அம் மனப்பான்மை தூண்டப்படும் போது அதிலிருந்துத் தப்பிக்க, கடலில் வேகமாக அலைகள் வரும்போது அதைத் தாண்டி நின்று சமாளிப்பது போன்றுதான் தப்பிக்க வேண்டும். இல்லையேல், ஒரு க்ஷணம் என்பார்களே, அப்படி ஒரு நொடிதான் உடனே செயலாக்கம் பெற்று விடுகிறது.
அதற்கு மாணவர்களானாலும், மற்ற மற்ற நிலையில் உள்ள பிரிவினர்களானாலும் அவர்களை அந்த மனபலவீனம் தாக்காமல் இருக்க,
மூளையை வளப்படுத்தல்,
இதயத்தைப் பலப்படுத்தல்
என்கிற இரண்டையும் – குழந்தைப் பருவத்திலிருந்தே – இளமை முதலே கற்றுத் தர வேண்டும்.
வெற்றி – தோல்விபற்றி சம மனப்பான்மை ஏற்படுவது பெரும் பக்குவக்காரர்களுக்கு மட்டும்தான் என்றாலும் – வெற்றி பெற்றவர்களை பாராட்டுகளின் உச்சத்தில் கொண்டு செல்வது, ஓரளவுத் தேவைதான் என்றாலும், அளவுக்கு மீறிய வெற்றிக் கொண்டாட்டங்கள் தோல்வி யடைந்தவர்கள் எதற்கும் லாயக்கற்றவர்கள் என்பதுபோன்று தோற்றுவிக்கும் சிந்தனைகளை நாம் அகற்ற வேண்டும்.
வெற்றி, தோல்வியின் கன பரிமாணத்தைக்கூட கணக்கிடாமல், தோற்றவர்களின் திறமை, ஆற்றல் இவற்றைக் கணக்கிட்டுப் பாராட்ட வேண்டும். வெற்றி பெற்றவரைவிட வாழ்க்கையில் தோல்வி பெற்றவர்களுக்கு ஆறுதலாக மட்டுமல்ல – அறிவுரை கூறப்படுகையில் ‘‘வாழ்க்கை என்பதே வெற்றி, தோல்வி இரண்டும் இணைந்ததுதான்’’ என்பதை குழந்தைப் பருவமான இளம் பருவத்திலேயே வீட்டுப் பாடமாகத் தொடங்கி, நாட்டுப் பாடமாக மாற வேண்டும்.
குழந்தைகளுக்கு மூளை வளம் ஏற்படும் படிச் செய்ய, கூண்டில் அடைத்த புறாக்களின் ஆற்றலை வளர்த்து விட்டால் கூண்டுக்கு அப்பாலே சென்று தனக்கெனத் தனிக் கூடு கட்டும் வகையில், பறந்து திரும்பும் பக்குவத்தைத் தாய்ப் புறா மற்ற புறாக்களுக்குக் கற்றுத் தரும். அத் தாய்ப் புறாவிடம் பாச உணர்வும், பொறுப்பும், கடமையும் உள்ளபோது ஆறாம் அறிவு பெற்ற மனிதர்களுக்கு ஏன் இல்லை?
சரியானபடி, குழந்தை வளர்ப்பை நாம் கற்கவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. அச்சம், பயமுறுத்தல், அளவற்ற கட்டுப்பாடு, அவர்களது மனநிலை – விருப்பு, வெறுப்புபற்றி நன்கு தெரிந்து கொண்டு ஆணை யிடுகிற தாய், தந்தை, ஆசிரியர்கள் போன்றோர் பிள்ளைகளுக்குப் பற்பல கட்டங்களில் தோல்வியை ஏற்கவும், ‘‘பரவாயில்லை, நாம் அடுத்த முறையில் வெற்றி பெறுவது எளிய திண்ணமானது’’ என்பதை உணர்த்தவும், ஊக்கப்படுத்தவும் வேண்டும்.
ஒரு முறை தந்தை பெரியார் அவர்களுக்கு அரசியல்வாதி ஒருவர் தனது அரசியல் தோல்வி காரணமாக விரக்தியுடன் கடிதம் எழுதியபோது பெரியார் அதற்குப் பதில் எழுதினார். அதில் இரண்டு வரிகள் வைர வரிகளாகக் கருதப்பட வேண்டியனவாகும்.
‘‘தேர்தலில் தோல்வியுற்றால் ஒரு போதும் வாழ்க்கையில் அவர் தோற்றவராக ஆக மாட்டார்’’ என்பதுதான் அவரது ஆறுதலும், ஊக்கமுறையும் ஆகும்.
கடனைத் திருப்பித் தர நமக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. உழைத்துக் கடனை அடைத்து முடிக்கலாம் – அதற்கிடையில் கடன் கொடுத்தவரின் அடாவடித்தனத்தை யூகித்து, நாணயத்தை நிரூபித்துக் காட்டியே தீருவேன் என்ற உறுதியான நமது நிலை தான் இதயத்தைப் பலப்படுத்துவது என்பது!
ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு Chicken – Hearted (People) என்பார்கள். அப்படி கோழிக்குஞ்சு இதயமாக இல்லாது அதனைப் பலப்படுத்திப் பருந்து ஆக முயற்சிக்கலாம்.