சமூக அறிவியல் ஊற்று – 13- அறிய வேண்டிய அண்ணல் அம்பேத்கர்

viduthalai
6 Min Read

இந்தியாவில் ஜாதிகள் – 2

நம் கருத்தை விளக்க இந்த வரையறைகளை ஆய்வது இன்றியமையாதது. தனித்தனியே நோக்கினால், இந்த ஆராய்ச்சியாளர்களில் மூவரின் விளக்கம் மிக அதிகப்படியாகவோ மிகக் குறுகியதாகவோ உள்ளது என்பதைக் காணலாம். இவற்றில் எதுவும் முழுமையாகவோ சரியாகவோ இல்லை; அது மட்டுமின்றி ஜாதி அமைப்பின் இயங்கியலில் உள்ள மய்யக் கருத்தை இவை மூன்றுமே தவறவிட்டிருக்கின்றன. ஜாதி என்பதனைத் துண்டிக்கப்பட்ட தனிமைப்பட்டிருக்கும் அலகாக வரையறுக்க முற்பட்டிருப்பதால் இந்தத் தவறு நேர்ந்துள்ளது. ஒரு ஜாதி என்பது ஜாதி அமைப்பு என்ற முழுமைக்குள் அமைந்த அதனுடன் திட்டமான உறவுகளைக் கொண்ட ஒரு குழு என்று பார்க்க இந்த வரையறைகள் தவறியுள்ளன. எனினும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இவை ஒன்றின் குறையை மற்றொன்று நிறைவுசெய்வதாக அமைந்துள்ளன. ஒவ்வொன்றும் மற்றொன்று புறக்கணித்துவிட்ட கூறை வலியுறுத்துகின்றன. எனவே, விமர்சன அணுகுமுறையாக, மேலே தந்துள்ள ஒவ்வொரு வரையறையிலும் உள்ள அனைத்து ஜாதிகளுக்கும் பொதுவான அம்சங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அவற்றை அந்த அளவில் நான் மதிப்பிடுகிறேன். இந்த வரையறைகள் இந்த அம்சங்களை ஜாதியின் தனித்தன்மைகளாக முன்வைக்கின்றன.

ஜாதி அமைப்பு எனும் விடை கண்டிராத புதிரை திறப்பதற்குரிய திறவுகோலாக நான் ஏன் அகமணமுறையைக் குறிப்பிடுகின்றேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதாக இருக்காது.

முதலில் திரு. செனார்ட்டை எடுத்துக் கொள்வோம். ஜாதியின் ஒரு பண்பியல்பாக ‘தீட்டு’ என்ற கருத்தினைச் சொல்வதால் இவர் நம் கவனத்தை ஈர்க்கின்றார். இந்தக் கருத்தைப் பொறுத்தவரை இது எந்த வகையிலும் ஜாதியின் தனித்தன்மை அல்ல எனக் கூறிவிடலாம். இந்தப் பண்பு வழக்கமான புரோகிதச் சடங்கு முறையிலேயே தோன்றுகிறது.தூய்மை பற்றிய பொதுவான நம்பிக்கையின் குறிப்பான நேர்வு இது. எனவே ஜாதியின் செயல்பாட்டை பாதிக்காமலேயே ‘தீட்டு’க்கும் ஜாதிக்கும் இடையேயான தொடர்பின் தேவையை முழுமையாக மறுக்கலாம். புரோகிதச் ஜாதியே உயர்நிலையில் இருக்கும் வாய்ப்பினைப் பெற்று இருப்பதாலேயே ஜாதி என்ற நிறுவனத்தோடு ‘தீட்டு என்ற கருத்து’ பிணைக்கப்பட்டுள்ளது. புரோகிதரும் தூய்மையும் தொன்றுதொட்டு வரும் கூட்டாளிகள் என்பதை நாம் அறிவோம். ஆகையால் ஜாதி என்பது மதத்தின் சாயல் கொண்டிருக்கும் அளவில் மட்டுமே ‘தீட்டு என்ற கருத்து’ ஜாதியின் ஒரு பண்பியல்பாகும் என நாம் முடிவுசெய்யலாம்

திரு நெஸ்பில்ட் தனது வழியில், ஜாதிக்கு வெளியில் உள்ளவர்களுடன் ஒன்றாக உணவு உண்ணாமையைச் ஜாதியின் பண்பியல்களுள் ஒன்றாக வலியுறுத்துகின்றார். இந்தக் கருத்து புதியதாக இருந்தபோதிலும் திரு தெஸ்பீல்ட் காரணத்தை விளைவாக எடுத்துக்கொண்டுள்ளார் என்று சொல்ல வேண்டும். தனக்குத்தானே வேலியிட்டுக்கொண்ட அலகு என்ற முறையில் ஜாதியானது இயல்பாகவே சேர்ந்து உண்ணுதல் உள்ளிட்ட சமூக உறவாடல்களைத் தனது உறுப்பினர்களுக்குள்ளாக வரம்பிடுகிறது. எனவே, வெளியாருடன் கலந்து உணவு உண்ணாமை என்பது நேர்மறையான தடையினால் ஏற்பட்டதல்ல. அது ஜாதியின் அதாவது தனிமைப்படுத்திக்கொள்ளுதலின் இயற்கை விளைவாக உள்ளது. இவ்வாறு தனிமைப்படுத்திக்கொள்வதால் ஏற்பட்ட பிறருடன் கலந்து உணவு அருந்தாமை என்பது மதக் கட்டளையால் தடைசெய்யப்பட்ட தன்மையைப் பெற்றுவிட்டது என்பதில் அய்யமில்லை. ஆனால், அதனை ஒரு பிற்கால வளர்ச்சி என்றே கொள்ள வேண்டும். சர். எச். ரிஸ்லி சிறப்பாக குறிப்பிடத்தக்க புதுக்கருத்து எதனையும் சொல்லவில்லை.

எடுத்துக்கொண்ட பொருளைத் தெளிவாக விளக்கப் பெரிதும் முயன்றுள்ள முனைவர் கெட்கரின் வரையறையைக் காண்போம். அவர் இந்தியர் என்பது மட்டுமல்ல; ஜாதி பற்றிய தனது ஆய்வில் நுட்பமான அறிவுத் திறத்தையும் திறந்த மனத்தையும் செலுத்தியுள்ளார். அவரது வரையறை நமது கருதுதலுக்கு உரியது. ஏனெனில் அவர் ஜாதிகளின் ஓர் அமைப்புடனான உறவில் ஜாதியை வரையறுத்துள்ளார். ஜாதிகளின் ஓர் அமைப்பில் ஒரு ஜாதி இருப்பதற்கு முற்றிலும் இன்றியமையாத பண்பியல்புகள் மீது மட்டும் தம் கவனத்தைச் செலுத்தி இருக்கிறார். பிற இயல்புகள் அனைத்தையும் இரண்டாம் நிலையான அல்லது தருவிக்கப்பட்ட பண்புகள் என்று சரியாகவே ஒதுக்கி வைக்கிறார். அவருடைய வரையறை தெளிவாகவும் நயமாகவும் இருந்தபோதிலும் அதில் சிறிதளவு சிந்தனைக் குழப்பம் உள்ளது என்பதைச் சொல்லியே ஆக வேண்டும்.ஜாதியின் இரு பண்பியல்புகளாக கலப்பு மணத்தின் மீதான தடையையும் பிறப்பின்வழி உறுப்பினராவதையும் அவர் குறிப்பிடுகிறார். ஆயின், இவை இரண்டும் ஒரே பொருளின் இரு அம்சங்களே என நான் கூற விரும்புகின்றேன். திரு கெட்கர் கருதுவது போல இரண்டு வெவ்வேறு பொருட்கள் அல்ல. கலப்பு மணத்தைத் தடை செய்துவிட்டால், குழுவிற்குள் பிறந்தவர்களுக்கே உறுப்பினராகும் உரிமை என வரம்பிடப்படுகிறது. இதனால் இவ்விரு இயல்புகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக உள்ளன.

ஜாதியின் பல்வேறு பண்பியல்புகளை விமர்சனக் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து பார்க்கும்போது, அதைச் சரியாகப் புரிந்துகொண்டால், கலப்பு மணத்தின் மீதான தடையே, அல்லது கலப்பு மணம் இல்லாததே – சுருக்கமாகச் சொன்னால் அகமணமுறையே ஜாதியின் சாராம்சம் என்று கூறலாம். ஆனால், பொதுப்படையான மானிடவியல் அடிப்படையில் சிலர் இதை மறுக்கலாம். ஏனென்றால், ஜாதி எனும் சிக்கலை உருவாக்காமலே அகமணமுறை குழுக்கள் இருக்கின்றன. பொதுவாக இது உண்மையாக இருக்கலாம். பண்பாட்டு வகையில் வேறுபட்ட அகமண குழுக்கள் அருகிலோ தொலைவிலோ வாழ்ந்துவந்தாலும் ஒருவரோடு ஒருவர் தொடர்பே இல்லாமல் இருக்கத்தான் செய்கின்றன. இந்தக் கருத்துக்கு ஆதரவாக அமெரிக்காவில் கருப்பின மக்களும் வெள்ளையர்களும் அமெரிக்க இந்தியர்கள் எனப்படும் பல்வேறு பழங்குடியினரும் ஒருவருக்கொருவர் தொடர்பின்றி இருப்பதை இதற்கு பொருத்தமான எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

ஆனால், இந்தியாவில் உள்ள நிலைமை வேறுவிதமானது. எனவே, இந்தச் சிக்கலை குழப்பிக்கொள்ளக்கூடாது. ஏற்கெனவே குறிப்பிட்டவாறு இந்திய மக்கள் ஒருபடித்தான முழுமையாக அமைந்துள்ளனர். இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ள பல்வேறு இனத்தவரான இந்திய மக்கள் பெரும்பாலும் ஒன்றுகலந்து ஒருபடித்தான பண்பாட்டு ஒருமைப்பாட்டை அடைந்துள்ளனர். இது மட்டுமே ஒருபடித்தான மக்களுக்கான ஒரே அளவுகோல். இந்த ஒருபடித்தான தன்மையை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது ஜாதி என்பது முற்றிலும் புதிய தன்மையிலான சிக்கலாக ஆகிறது. அகமணமுறை அடிப்படையிலான சமூகக் குழுக்கள் அல்லது குலக்குழுக்கள் வெறுமனே அருகருகே வாழ்வதால் ஏற்படும் நிலையில் இந்தத் தன்மை இல்லவே இல்லை.

இந்தியாவில் ஜாதி என்பதன் பொருள் மக்களை நிலையான, திட்டமான குழுக்களாக செயற்கையாகக் கூறுபோட்டு அகமணமுறை என்ற வழக்கத்தின் மூலம் அந்தக் குழுக்கள் ஒன்று மற்றொன்றுடன் இணைவதைத் தடுப்பதாகும். எனவே, ஜாதிக்கு உள்ள ஒரே தனித்தன்மையான பண்பியல்பு அகமணமுறையே என்ற முடிவு தவிர்க்க இயலாததாகிறது. ஆகையால் அகமணமுறை எவ்வாறு கட்டிக் காப்பாற்றப்படுகிறது என்பதை நிறுவுவதில் நாம் வெற்றிபெற்றால் ஜாதியின் தோற்றத்தையும் இயங்கியலையும் நடைமுறையில் மெய்ப்பித்திருப்போம்.

ஜாதி அமைப்பு எனும் விடை கண்டிராத புதிரை திறப்பதற்குரிய திறவுகோலாக நான் ஏன் அகமணமுறையைக் குறிப்பிடுகின்றேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதாக இருக்காது. ஆகையால், உங்களுக்கு அதிக இன்னல் கொடுக்காமல் அதற்கான எனது காரணங்களை முன்வைக்கின்றேன்.

இந்தியச் சமூகத்தைவிட அதிகமாக வேறு எந்த நாகரிக சமூகமும் தொல்பழங்காலத்தின் மிச்சமீதங்களைக் கொண்டிருக்கவில்லை. இதனை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதே. இந்தியச் சமூகத்தின் மதம் சாராம்சத்தில் தொல்பழங்காலத் தன்மையிலானது, காலமும் நாகரிகமும் எவ்வளவு முன்னேறியிருந்தபோதும் அதன் பழங்குடி சட்டநெறிகள் தொடக்ககால வீரியத்துடனேயே இன்றும் செயல்படுகின்றன. இந்தத் தொல்பழங்கால மிச்சமீதங்களில் ஒன்று புறமணமுறை என்ற வழக்கம். அதனை நான் குறிப்பாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தொல்பழங்காலச் சமூகங்களில் புறமணமுறை பரவியிருந்தது என்பது அனைவரும் நன்கறிந்த உண்மை. அதைப் பற்றி மேலும் விளக்கத் தேவையில்லை. வரலாற்றின் போக்கில் புறமணமுறை தனது செயல்திறனை இழந்தது. நெருங்கிய இரத்த உறவுகள் கொண்டவர்களைத் தவிர பிறருடன் திருமணத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கும் சமூகத் தடைகள் எதுவும் இப்போது இல்லை.

– தொடரும்

‘அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள்’ சாதியம்: வரலாறு – ஆய்வு  (தொகுதி 1)

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *