திருவெறும்பூர், ஜூலை 21- பெரியார் பேசுகிறார் 10 ஆவது நிகழ்ச்சி 20.07.2025 அன்று திருவெறும்பூர் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு க.புனிதா தலைமை வகித்தார். மாவட்ட மகளிரணி தலைவர் பா. ரெஜினா, சி. நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் பாசறைத் துணைத் தலைவர் கரு.புனிதவதி வரவேற்புரை ஆற்றினார்.
வி.சி.வில்வம் எழுதிய “கொள்கை வீராங்கனைகள்” நூல் குறித்து திருச்சி மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் வெ.ரூபியா பேசினார். அவர் பேசும்போது, “35 வயது மகளிர் முதல் 90 வயது மகளிர் வரை இந்நூலில் பேட்டி கொடுத்திருக்கிறார்கள். இவ்வளவு தலைமுறை இடைவெளி இருந்தாலும், அனைவரும் ஒன்று சேர்ந்து நம் இயக்கத்தில் எப்படி உழைக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டினார்.
இந்நூலில் உள்ள 54 நேர்காண லும் ஒவ்வொன்றும் ஒரு விதமாக இருக்கிறது. மருத்துவர்கள், பொறியாளர்கள், அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள், சுயதொழில் செய்வோர், விவசாயம் பார்ப்போர், அன்றாடம் வேலைக்குச் செல் வோர் என அனைத்துத் தரப்பு மகளிரும் இதில் இருக்கிறார்கள். அனைவருக்கும் சம வாய்ப்புக் கொடுத்து, அனைவரையும் உயரிய நிலையில் எழுதி இருக்கிறார்கள்.
சில நேர்காணலை நம்மால் படிக்க இயலவில்லை. அந்த அளவிற்கு துயரக் கதைகளைச் சுமந்து இருக்கிறார்கள். படிக்கும் போதே நடுக்கம் ஏற்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் சொல்லொணா துயரங்கள் இருந்தாலும், குடும்பத்தில் திடீரென மரணங்கள் ஏற்பட்டாலும் நம் இயக்க மகளிர் அதை எப்படி எதிர்கொண்டார்கள், களத்தில் எப்படி செயல்படுகிறார்கள் என்ப தையும் ரூபியா எடுத்துக் காட்டினார்.
பிள்ளைகளுக்குப் பெரியளவில் சொத்துகள் சேர்த்து வைக்காவிட்டாலும், போதுமான அளவு கல்வியை நம் மகளிர் வழங்கியுள்ளனர். கூடுதலாகப் பகுத்தறிவுச் சிந்தனையையும், சுயமரியாதையையும் கற்றுக் கொடுத்துள்ளனர். இது நம் இயக்கத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் பெரும் மாற்றமாக நிகழ்ந்துள்ளது.
குறிப்பாக இயக்க மகளிர் பலரும் ஆசிரியர் அவர்களை அப்பா என்றும், தலைவர் என்றும், அண்ணன் என்றும் உணர்வோடு விழித்துப் பேசியது மெய்சிலிர்க்க வைத்தது. ஏனெனில் திடீரென்று அப்படி யாரும் பேசிவிட முடியாது. இயக்க உணர்வு, கொள்கை உணர்வு, தலைமை மீதான பற்று, நம்பிக்கை இவையே அதற்குக் முக்கியக் காரணமாக இருக்கிறது.
எங்களைப் போன்ற இளம் மகளிருக்கு இந்த நேர்காணல்கள் உத்வேகம் கொடுக்கின்றன. அந்தக் காலத்திலேயே போராட்டம், சிறை வாசம், அதிலும் கைக் குழந்தையுடன் சிறை, கர்ப்பக் காலத்தில் சிறை என்பதெல்லாம் உணர்ச்சிப் பெருக்கை அதிகரிக்கின்றன. இன்னும் அதிகமான மகளிர் நம் இயக்கத்தில் இருக்கின்றனர். அவர்களையும் பதிவு செய்ய வேண்டும்”, வெ.ரூபியா பேசினார். இறுதியில் திருவெறும்பூர் ஒன்றியச் செயலாளர் இரா.தமிழ்ச்சுடர் நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் திராவிடர் தொழிலாளர் கழக மாநிலச் செயலாளர் மு.சேகர், பி.இர.அரசெழிலன், ம.பி.அனுராதா, மேக்னா ஸ்டாலின், அ.தமிழ்க்கவி, அ.அன்புலதா, மு.சேகர், போ.ஜெகதீஸ்வரன், விடுதலை க.கிருட்டிணன், ச.கணேசன், ஆ.அசோக்குமார், அ.சிவானந்தம், ஆ.பாண்டிக்குமார், பு.வி.கியூபா, வி.சி.வில்வம் உள்ளிட்ட தோழர்கள் பங்கு பெற்றனர்.