சென்னை, ஜூலை 21- முதல் சுற்று பொறியியல் கலந்தாய்வில் கணினி அறிவியல் (கம்ப்யூட்டர் சயின்ஸ்), மின்னணு தொடர்பியல் (இ.சி.இ.) படிப்புகளில் சேர அதிகம் பேர் விருப்பம் தெரிவித்ததாகவும், செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் படிப்புகள் பின்னுக்கு சென்றதாகவும் கல்வியாளர்கள் கூறினர்.
பொறியியல் படிப்புகள்
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில், பொது கலந்தாய்வு கடந்த 14ஆம் தேதி தொடங்கியது
மொத்தம் 3 சுற்றுகளாக இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் முதல் சுற்று கலந்தாய்வுக்கு 39,145 மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டு இருந்தனர். இணைய வழி வாயிலாக நடந்த இந்த கலந்தாய்வில் மாணவ- மாணவிகள் எந்தெந்த கல்லூரிகளில், என்னென்ன படிப்புகளில் சேர விருப்பம் இருக்கிறதோ? அதை பதிவிட 14, 15, 16ஆம் தேதிகளில் அவகாசம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்பட்டு, அதனை 18ஆம் தேதிக்குள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது.
முதல் சுற்று கலந்தாய்வு
அவ்வாறு உறுதி செய்த 30,552 மாணவ- மாணவிகளுக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை ஏற்றுக்கொண்டதற்கும், என்ன தேதியில் கல்லூரிகளில் சேர வேண்டும் என்பது குறித்தும், இடங்களை உறுதி செய்தவர்களில் அதற்கு முந்தைய விருப்பத்தில் ஏதாவது காலி இடம் ஏற்பட்டால் அந்த இடத்தை தங்களுக்கு வழங்க சேவை மய்யத்தில் பணம் செலுத்துவது குறித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கு வருகிற 23ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப் பட்டிருக்கிறது.
அதன்படி, தேர்வு செய்த படிப்புகளில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு வருகிற 26ஆம் தேதி (சனிக்கிழமை) இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். முதல் சுற்று கலந்தாய்வில் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் படிப்புகளுக்கு கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், கணினி அறிவியல் (கம்ப்யூட்டர் சயின்ஸ்), மின்னணு தொடர்பியல் (இ.சி.இ.) படிப்புகளில் சேர அதிகம் பேர் விருப்பம் தெரிவித்ததாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னணியில்
எலக்ட்ரானிக்ஸ் கல்லூரிகள்
எலக்ட்ரானிக்ஸ் கல்லூரிகள்
கடந்த ஆண்டில் விருப்பப் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டிருந்த மின்னணு தொடர்பியல் படிப்புக்கு இந்த ஆண்டு கடும் போட்டி ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதே போல், கணினி அறிவியல் படிப்பில் சேரவும் மாணவ-மாணவிகள் அதிக ஆர்வம் காட்டி இருப்பதாக கூறப்படுகிறது.
‘ரோபோட்டிக் உள்ளிட்ட எல்லா துறைகளுக்கும் மின்னணு தொடர்பியல் படிப்பை படித்தால் செல்ல முடியும்.
ஆனால் அதுவே செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியலை பொறுத்தவரையில் அந்த குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே பயணிக்க இயலும். எனவே முதல் சுற்று பொறியியல் கலந்தாய்வில், மாணவ-மாணவிகளின் விருப்பத் தேர்வாக மின்னணு தொடர்பியல் படிப்பும், அதற்கடுத்தபடியாக கணினி அறிவியல் படிப்பும் உள்ளது என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர்.