சென்னை, ஜூலை 21 சென்னை வடபழனி சோமசுந்தர பாரதியார் நகர், 4-ஆவது தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 51). கால்நடைகளுக்கான மருந்துகள் விற்பனை செய்யும் கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று (20.7.2025) காலை வீட்டில் இருந்து எழுந்து வெளியே வந்து பார்த்தபோது, வீட்டின் வாசலில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கிடந்ததை கண்டதும் அதிர்ச்சி அடைந்து அலறி கூச்சலிட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் வசித்து வந்த பொதுமக்களும், சிறுவர்களும் வெளியே ஓடி வந்து பார்த்தனர். அப்போது பில்லி சூனியம் வைத்தது போல் கிடந்த மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகளை கண்டு பீதியில் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கருணாகரன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், வடபழனி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
கருணாகரன் வசிக்கும் வீட்டின் அருகே சிறிது தொலைவில் சுடுகாடு உள்ளதும், அங்கிருந்து மண்டை ஓடு மற்றும் எலும்பு களை எடுத்து வந்து அடையாளம் தெரியாத நபர்கள் யாரோ கருணாகரன் வீட்டு வாசல் முன்பு வைத்து விட்டுச் சென்று இருப்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
முன்விரோதத்தில் கருணாகரனை அச்சுறுத்தி பீதியடைய செய்வதற்காக மனித மண்டை ஓடு-எலும்புகள் வைத்து பில்லி சூனியம் செய்து யாரேனும் வீசிச் சென்றார்களா? என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.