சென்னை, ஜூலை 21- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி 11.70 லட்சம் பேரின் ரூ.4,904 கோடி அளவுக்கான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.
கூட்டுறவு துறையில் கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சாதனை குறித்து பெருமிதத்துடன் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதலமைச்சர் ஆணை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு குடும்பத்தில் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்று 31.3.2021 வரை நிலுவையில் இருந்த நகைக்கடன் தொகை ஏறத்தாழ ரூ.6 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்து ஆணையிட்டார். அதன்படி, 11.70 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.4,904 கோடி அளவிற்கு தள்ளுபடி சான்றிதழுடன், அவர்கள் அடமானம் வைத்த நகைகளும் திருப்பி வழங்கப்பட்டு உள்ளன.
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கடன்களில், 31.3.2021 அன்று நிலுவையில் இருந்த கடன் தொகை ரூ.2,118.80 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு 1,01,963 மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த 10 லட்சத்து 56 ஆயிரத்து 816 மகளிர் பயன்பெற்றுள்ளனர்.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் உச்ச வரம்பு ரூ.20 லட்சம் என்பதை ரூ.30 லட்சமாக உயர்த்தி 1,90,499 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.10,997.07 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது.
நிதி சுதந்திரம்
பயிர்க்கடன்களை உரிய கெடு தேதிக்குள் திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு செலுத்தி வட்டியில்லா பயிர்க்கடன்களாக 66 லட்சத்து 24 ஆயிரத்து 955 விவசாயிகளுக்கு ரூ.53,340.60 கோடி வழங்கப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் 19 ஆயிரத்து 358 கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ரூ.63.22 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மாற்றுத்திறனாளிகளை சுயசார்புடையவர்களாக மாற்றவும், நிதி சுதந்திரத்தை வளர்க்கவும் 47 ஆயிரத்து 221 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.225.94 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது.
நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு…
சமூக நீதியை மேம்படுத்தும் வண்ணம் 16 ஆயிரத்து 578 பணிபுரியும் பெண்களுக்கு ரூ.470.01 கோடியும், 49 ஆயிரம் மகளிர் தொழில் முனைவோருக்கு ரூ.283.27 கோடியும் கடன் வழங்கப்பட்டு உள்ளன. நாட்டுப்புற கலைகளை வாழ்வாதாரமாக கொண்டு தொழில் புரிகின்ற கலைஞர்கள் நலிவடையாமல் காத்திட அந்த கலைஞர்களின் சமூக, பொருளாதார, நிதிநிலையை மேம்படுத்தும் வண்ணம், இதுவரை 4 ஆயிரத்து 494 நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.18.80 கோடி அளவிலான கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வாடகைக்கு விடப்படும் வேளாண் எந்திரங்களை கூட்டுறவுத்துறையின் ‘கோஆப் இ-வாடகை’ செயலி வேளாண்துறையின் “உழவர்” ஆகியவற்றிலும், நேரிலும் முன்பதிவு செய்து கொண்டு, ஏறத்தாழ 2 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்து உள்ளனர்.
பாராட்டு, விருது
வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் ரூ.392.52 கோடி அளவிற்கு தானிய ஈட்டு கடன்களும், ரூ.2,089.90 கோடி அளவுக்கு நகைக்கடன்களும் வழங்கி உள்ளன. இந்த சங்கங்கள் ரூ.10,283.21 கோடி அளவுக்கு வணிகமும் செய்துள்ளன.
தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்கள் திட்டத்தை 24.2.2025 அன்று சென்னை மாநகரில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் அரசின் கொள்கைப்படி கூட்டுறவு அமைப்புகள் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுகின்றன.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான உணவு பாதுகாப்பை உறுதி செய்கின்றன. விவசாயிகளுக்கு தேவையான பயிர்க்கடன்கள் முதலான இடுபொருள்களை வழங்கி, அவர்களின் உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதையும் உறுதி செய்து ஒன்றிய அரசின் பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்று கூட்டுறவுத் துறை மூலம் தமிழ்நாடு இந்திய திருநாட்டில் உயர்ந்து சிறந்து விளங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.