செம்பியம், ஜூலை 19– கல்வி வள்ளல் காமராசர் 123ஆம் ஆண்டு பிறந்த நாள் – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ ஏட்டின் நூற்றாண்டு நிறைவு என முப்பெரும் விழா பொதுக்கூட்டம், வடசென்னை மாவட்டக் கழகத்தின் சார்பாக 15.7.2025 மாலை 6.30 மணிக்கு செம்பியம் – பெரவள்ளூர் சதுக்கம் காமராசர் சிலை அருகில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டக் காப்பாளர் கி.இராமலிங்கம் வரவேற்புரையாற்றினார். கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மாநில மகளிரணி துணைச் செயலாளர் க.இறைவி, பொதுக்குழு உறுப்பினர்கள் தி.செ.கணேசன், தங்க.தனலட்சுமி, மாவட்ட துணைத் தலைவர் நா.பார்த்திபன், அமைப்பாளர் சி.பாசுகர், திராவிட மாணவர் கழக விளையாட்டு அணி மாநில அமைப்பாளர் ம.பூவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத் தலைவர் புரசை சு.அன்புச் செல்வன் இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்து உரையாற்றினார். செம்பியம் பகுதி கழக தலைவர் ப.கோபாலகிருஷ்ணன் மற்றும் தோழர்கள் உரையாற்றினர்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் தொடக்கவுரையாற்றினார். மாவட்ட இளைஞரணித் துணைச் செயலாளர் த.பரிதின் இணைப்புரை வழங்கினார்.
நிறைவாக கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:
காமராசர் அவர்களின் 123ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.7.2025) அண்ணாசாலை ஜிம்கானா கிளப் அருகில் உள்ள காமராசர் சிலைக்கு மாலை அணிவிக்கத் தோழர்களுடன் சென்றிருந்தோம்.
கழகத்தின் பார்வை வேறு!
கடந்த ஆண்டுகளைப் போல் அல்லாது இந்த ஆண்டு அங்கே பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்கத் திரளாக வந்திருந்தார்கள். இன்னும் எட்டு மாதங்களில் தேர்தல் வரப் போகிறது என்பதுதான் அதற்குக் காரணமாக இருக்க முடியும்.
ஆனால் திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை காமராசரை அந்த அளவில் பார்க்கக் கூடிய இயக்கம் அல்ல.
வைக்கத்தில் தந்தை பெரியார் தலைமை வகித்து நடத்திய தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் சாதாரணத் தொண்டராகக் கலந்து கொண்டவர்தான் காமராசர். அதிலிருந்துதான் தன்னுடைய பொது வாழ்க்கையை அவர் தொடங்கினார். அவருடைய ஆட்சிக்குக் கடைசி காலகட்டம் வரை பாதுகாப்பாக இருந்தவர் தான் தந்தை பெரியார்.
ஜாதி அமைப்பை ஏற்றுக் கொண்டுள்ள அரசியல் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்தினார் தந்தை பெரியார். அப்போது காமராசர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். கடுந்தண்டனையும், சிறைக் கொடுமையையும், சித்திரவதைகளையும் அடுக்கடுக்காக அனுபவிக்க நேர்ந்த போதும், ‘கல்வி வள்ளல் காமராசர் வாழ்க’ என்றுதான் கருஞ்சட்டைத் தோழர்கள் முழங்கினார்களே தவிர – வேறெந்த எதிர்ப்பையும் அவருடைய ஆட்சிக்குத் தெரிவிக்கவில்லை.
இராஜாஜிக்குக் கடும் எதிர்ப்பு
1938, 1954 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்புக்கு வந்த இராஜாஜி பார்ப்பனரல்லாதாரின் கல்வி உரிமையைப் பறிப்பதிலேயே கவனம் செலுத்தியவராக இருந்ததால் அவருக்கு கடும் எதிர்ப்பைக் காட்டியவர் காமராசர் ஆவார்கள்.
தமிழ்நாட்டில் மாணவர்களின் கல்விக்கென்று அவர்களின் கல்விக் கான தேவைகள் பலவற்றையும் இலவசமாகவே வழங்கி அவர்களை ஊக்குவித்து வருகின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடாகத்தான் இருக்க முடியும்.
ஜாதியைக் கடந்த மக்கள்
ஜாதியைக் கடந்து எல்லா மக்களையும் ஒருவரை ஒருவர் நேசிக் கின்ற நிலையை உருவாக்கியது இந்த இயக்கம் – சுயமரியாதை இயக்கம், உயர்ஜாதிக்காரர்களும், பணக்காரர் களுமே படிக்கலாம் என்றிருந்த நிலையை மாற்றியது சுயமரியாதை இயக்கமும் – நீதிக்கட்சியும் – இன்றைய திராவிட மாடல் அரசுமாகும்.
மருத்துவக் கல்வியில் சிறந்து, மருத்துவமனைகள் எங்கெங்கும் காணப்படக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது. இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் – வளர்ந்த நாடுகளில் கூட மருத்துவர்களை சந்திப்பதற்கு 10 நாள்கள் கூட காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எளிதல் சந்திக்கக்கூடிய அளவிற்கு அதிகமான மருத்துவர்கள் இங்கு உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.
சுயமரியாதை இயக்கம் என்பது நாயினும் கீழாய் தடுக்கப்பட்டு, தடை ஏற்படுத்தப்பட்ட மனிதனுக்காகப் போராடி – போராட்ட உணர்வை அம்மனிதர்களுக்குள் ஏற்படுத்தித் தலைநிமிரச் செய்த இயக்கம். அந்த இயக்கத்திற்கு ஓர் உடை வாளைப்போல் படைக்கலனாகத் திகழ்ந்துதான் இன்றைக்கு நூற்றாண்டை நிறைவு செய்துள்ள தந்தை பெரியார் தொடங்கிய பச்சை அட்டை ‘குடிஅரசு’ ஏடாகும்.
95 வயது வரை தந்தை பெரியார் இடைவிடாது பாடுபட்டதின் விளைவாகத்தான் நாம் உரிமைகளைப் பெற்றிருக்கிறோம். அவர் விட்டுச் சென்ற அந்தப் பணிகளை அவர் போட்டுத் தந்த பாதையில் எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல் இடையறாது பணி செய்து கொண்டிருப்பவர்தான் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் என்று தமது உரையில் குறிப்பிட்டார்.
அயன்புரம் துரைராசுக்கு வாழ்த்து
இம் முப்பெரும் விழா பொதுக் கூட்டத்தில் – கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் பொறுப்பாளர்களுக்குப் பயனாடை அணிவித்துச் சிறப்பு செய்யப் பட்டது.
அயன்புரம் கழக அமைப்பாளர் சு.துரைராசு 78ஆம் ஆண்டு பிறந்த நாளுக்கு அனைத்து கழகத் தோழர்களும் அவருக்கு வாழ்த்துக் கூறினர். பிரின்சு என்னாரெசு பெரியார் பயனாடை அணிவித்து சு.துரைராசுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
காமராசர் சிலைக்கு மாலை
பெரவள்ளூர் சதுக்கத்தில் உள்ள கல்வி வள்ளல் காமராசர் சிலைக்குத் தோழர்கள் மாலை அணிவித்து வாழ்த்து முழக்கமிட்டனர். இம் முப்பெரும் விழாவினை முன்னிட்டு பெரவள்ளூர் சதுக்கம் மற்றும் பேப்பர் மில்ஸ் சாலையில் கழகக் கொடி கம்பங்கள் எழுச்சியூட்டும் வகையில் நடப்பட்டிருந்தன.
இவ்விழாவுக்கென மறைவுற்ற செம்பியம் பகுதி கழகத் தோழர் கேப்டன் இரமேசு நினைவு மேடை என அமைக்கப்பட்டிருந்தது. அவரின் சகோதரர் சரவணன் மற்றும் குடும்பத் தினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண் டனர்.
கலந்து கொண்டோர்
இந்நிகழ்ச்சியில் தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கொளத்தூர் அமைப்பாளர் ச.இராசேந் திரன், கொடுங்கையூர் தலைவர் கோ.தங்கமணி, செம்பியம் செயலாளர் டி.ஜி.அரசு, பாவேந்தர் பகுத்தறிவுப் பாசறை செயலாளர் ஓவியர் கிருபா, மங்களபுரம் அமைப்பாளர் மா.டில்லிபாபு, கண்ணதாசன் நகர் கழக அமைப்பாளர் க.துரை, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் த.மரகதமணி, கிஅதிரா, அரும்பாக்கம் சா.தாமோதரன், புதுமை இலக்கியத் தென்றல் செயலாளர் வை.கலையரசன், ஆவடி நகர செயலாளர் தமிழ்மணி, துணைத் தலைவர் சி.வச்சிர வேலு, ஓ.இராமச்சந்திரன், க.செல்லப்பன், ச.க.கோதண்டபாணி மற்றும் கழகத் தோழர்களும், பொதுமக்களும் ஏராள மான அளவில் கலந்து கொண்டனர்.
நிறைவாக வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.கார்த்திக் நன்றி கூறினார்.