மனிதன் தானாக பிறக்க வில்லை; ஆகவே தனக்காக வாழக்கூடாதவன்!
எல்லா வேந்தர்களும் ஈரோட்டு வெண்தாடி வேந்தரால் உருவானவர்களே!
திருப்பத்தூர், ஜூன் 16 – காலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முப்பெரும் விழா! மாலையில் ‘விடுதலை களஞ்சியம்’ வெளியீட்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா இரண்டிலும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், 15.06.2023 அன்று காலை 11 மணியளவில், அரசு மருத்துவ மனையில் கே.கே.சின்னராசு நினைவுக் கூடம் திறப்பு விழா, ரோட்டரி ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கும் விழா, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திறப்பு விழா என ஒரு முப்பெரும் விழாவும், அதே நாளில் திருப்பத்தூரில் உள்ள விஜய சரவண மகாலில் ”விடுதலை களஞ்சியம்” முதல் தொகுதி வெளியீடு, ’விடுதலை’ 89 ஆம் ஆண்டு தொடக்க விழா, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சி. தமிழ்ச்செல்வன் பணி நிறைவு பாராட்டு விழா என முப்பெரும் விழாவாக, இரண்டு முப்பெரும் விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.
ரோட்டரி சங்கத்தின்
நான்கு வழிச் சிந்தனைகள்!
முதல் முப்பெரும் விழாவில், தலைமை மருத்துவ அலு வலர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சுகாதாரப் பணி துணை இயக்குநர் மருத்துவர் மாரிமுத்து தலைமையேற்று உரையாற்றினார். ரோட்டரி சங்க உறுப் பினர்கள், தமிழ்நாடு அரசின் மேனாள் அமைச்சர் கே.சி. வீரமணி, கணேஷ்மல், அருணகிரி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். ரோட்டரி சங்க உறுப்பினரும், திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவருமான கே.சி. எழிலரசன் மருத்துவமனைக்கு வழங்க இருக்கக்கூடிய நலத்திட்டங்களின் திட்ட அறிக்கையை விவரித்துப் பேசினார். அதைத்தொடர்ந்து சுயமரியாதைச் சுடரொளி கே.கே. சின்னராசு நினைவுக்கூடத்தை ஆசிரியர் திறந்து வைத்தார். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவியை ரோட்டரி சங்கம் பொறுப்பாளர் பரணிதரன் துவக்கி வைத்தார். அதேபோல் ரோட்டரி ஆம்புலன்ஸ் வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது. முன்னதாக தமிழர் தலைவர் ஆசிரியர் பேசினார். அதில், தொடக்கத்தில் ரோட்டரி சங்கத்தின் நீலா சுப்பிரமணியம் நான்கு வழி சோதனைகளை வாசித்தார். அதை நினைவு கூர்ந்த ஆசிரியர், ”இது உண்மைதானா?”, ”இது அனைத்து தரப்பினருக்கும் நியாயம் உடையதுதானா?”, “இது நல்லெண்ணத்தையும், சிறந்த நட்பையும் உருவாக்குமா?”, “இது அனைத்து தரப்பினருக்கும் நன்மையை விளைவிக்கக் கூடியதுதானா?” என்று தானும் அதை வாசித்துக்காட்டி, ரோட்டரி சங்கத்தின் குறிக்கோள் உலகளவில் தேவைப் படக்கூடிய ஒன்று என்று குறிப்பிட்டுவிட்டு, நீங்கள் சொல் கிறீர்கள், திராவிடர் கழகம் இதை செயல்படுத்திக் காட்டிக் கொண்டிருக்கிறது என்று உற்சாகத்துடன் சொல்ல, மக்கள் மகிழ்ந்து கையொலி செய்தனர். அதைத்தொடர்ந்து, பெரியா ரின் ‘மனிதன் தானாக பிறக்க வில்லை; ஆகவே அவன் தனக் காக வாழக்கூடாதவன்’ என்ற பொன்மொழியை குறிப்பிட்டு “அதை ரோட்டரி சங்கம் செய்யும் தொண்டுடன் ஒப்பிட்டுப் பேசி, ரோட்டரி சங்கமும், திராவிடர் கழகமும் அனைத்து மக்களையும் இணைக்கின்றன! பிரிக்கவில்லை! ஆகவே இது தொடரவேண்டும்” என்று பலத்த கைதட்டலுக்கிடையே கூறி அனைவரையும் பாராட்டிவிட்டு, மேனாள் அமைச்சரிடம் தான், மக்களின்; முக்கியமாக பெண்களுக்கு இயற்கை தேவை கருதி ஒரு கழிப்பறை கட்டித்தர வேண்டும் என்று கேட்டதும், உடனே அவர் ஒத்துக் கொண்டதற்கு அடையாளமாக தலை யாட்டினார். அதற்குள் ஏ.டி.ஜி.இந்திரஜித் தாமாக முன்வந்து தன் தந்தையார் ஏ.டி.கோபால் நினைவாக தான் கட்டிக் கொடுப்பதாக அறிவித்து மகிழ்ந்தார். இதைக்கண்டு மக்களி டம் உற்சாகம் பெருக்கெடுத்து ஓடியது. இறுதியாக பாரதி நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
ஆசிரியரின் பணி மிகச்சிறந்தது!
இரண்டாம் முப்பெரும் விழாவில் மாவட்டச் செயலாளர் பெ.கலைவாணன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன் தலைமை வகித்து உரையாற்றினார். வெளியிடவிருக்கும் ‘விடுதலை களஞ்சியம்’ நூலை அறிமுகம் செய்வித்து உரையாற்றினார் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன். தலைமைக் கழக அமைப்பாளர் பழ.பிரபு, மண்டல இளைஞரணி செயலாளர் சி.எ.சிற்றரசு, பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் வே.அன்பு, மாநில மகளிர் அணி பொருளாளர் அகிலா எழில ரசன், இளைஞரணித் தலைவர் சோ.சுரேஷ்குமார், துணைச் செயலாளர் மா.பன்னீர்செல்வம், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் அண்ணா. சரவணன், மாவட்டக் காப்பாளர் ஆர்.நரசிம்மன், நகரச் செயலாளர் சித்தார்த்தன், சி.தமிழ்ச்செல்வன், தங்க. அசோகன், பெ.இரா. கனகராஜ், ஊமை ஜெயராமன் உள்ளிட்ட தோழர்கள் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
தொடர்ந்து வி.அய்.டி. பல்கலைக்கழக வேந்தர் முனைவர் கோ.விஸ்வநாதன் ‘விடுதலை களஞ்சியம்’ நூலை வெளியிட்டு உரையாற்றினார். அதில் விடுதலை எப்படி தனது வாழ்க்கை யில் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றும், பெரியார், ஆசிரியர் ஆகியோரின் அருமை பெருமைகளை குறிப் பிட்டும், லயோலா கல்லூரியில் பயிலும் போது வார்டனிடம் தப்பிக்க தனது அறையிலிருந்த பெரியார் படத்தை தனது தாத்தா என்று சொன்னதையும் நினைவுகூர்ந்து, ஆசிரியர் செய்திருக்கும் இப்பணி மிகச் சிறந்தது என்று பாராட்டிவிட்டு அமர்ந்தார்.
‘விடுதலை’யை தாங்கிப்பிடியுங்கள்!
தமிழர் தலைவர் நிறைவுரையாற்றுகையில், அனைவரும் பேசும்போது இரண்டு வேந்தர்கள் என்று தங்களை குறிப் பிட்டதை நினைவு கூர்ந்து, ‘எல்லா வேந்தர்களும் ஈரோட்டு வெண்தாடி வேந்தரால் உருவானார்கள்’ என்று கலகலப்பாகப் பேசி, தொடக்கத்திலேயே பார்வையாளர்களை கட்டிப் போட் டார். தொடர்ந்து ‘விடுதலை களஞ்சியம்’ பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய பணி என்று குறிப்பிட்டு அதன் முக்கியத்து வத்தை புலப்படுத்தினார். விடுதலையின் சாதனைகள் ஒன்றி ரண்டைச் சொல்லி, நாம் திராவிட இயக்கத்தின் விழுதுகள் என்றார். இது புரியாமல் சிலர் சனாதனம் என்று பேசுவதை சுட்டிக்காட்டி, சனாதனம் என்றால் என்ன என்பதை விளக் கினார். அனைத்தும் மாறிக் கொண்டே இருக்கும் போது, மாறாதது சனாதனம் என்று சொல்லும் புரட்டை, சனாதனம் எப்படியெல்லாம் மாறிக் கொண்டே வந்துள்ளது என்பதை போட்டுடைத்தார்.
வேதம் என்பது எழுதாக்கிளவி, அது சீகன்பால் தரங்கம் பாடிக்கு வந்து என்று அச்சு முறையை தொடங்கினாரோ அன்றே சனாதனம் மாறிவிட்டது என்று வரலாற்றை எடுத்துரைத்து விளக்கினார். அறிவியல் வளர்ந்ததால் சனாதனம் எப்படியெல்லாம் மாறியுள்ளது என்பதை புட்டுப் புட்டு வைத்தார். “அக்னி சாட்சியாக என்று சொன்னது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. காணொலி சாட்சியாக என்றுதான் உச்சநீதிமன்றமே சொல்லியிருக்கிறது” என்று சான்று சொல்லி, ஒரே நேரத்தில் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார். இந்த மாற்றங்கள் வருவதற்கு பாடுபட்ட ஏடு ‘விடுதலை’ என்று குறிப்பிட்டுவிட்டு, பெரியார் எப்படியெல்லாம் பாடுபட் டார் என்பதையும் சொல்லத் தவறவில்லை அவர்! விடுதலை இலாபத்திற்காக நடைபெறுவதல்ல, இலட்சியத்திற்காக நடை பெறுகிறது என்பதையும் புரிய வைத்தார். ஆகவே விடுதலை யைத் தாங்கிப் பிடியுங்கள்! அதற்காக வாங்கிப் படியுங்கள்! என்று கூறி உரையை நிறைவு செய்தார். நகரத்தலைவர் துளசிதாஸ் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.