ஜூன் 22, 2025 அன்று, “தி நியூஸ் மினிட் (The News Minute – TNM)” ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டது. அதில், 2022 முதல் தமிழ்நாட்டில் 24 காவல் மரணங்கள் காவல்துறையின் துன்புறுத்தல் காரணமாக நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டது. கமல் ராஜ் மற்றும் எட்கர் கைசர் ஆகியோர் எழுதிய இக்கட்டுரை, 24 லாக்-அப் மரணங்கள் காவல் துறையின் துன்புறுத்தலால் ஏற்பட்டவை என்று கூறி, “கூகுள் ஆவணத்தை” ஆதாரமாகக் காட்டியது.
அவசர கதியில் வெளியிட்டனர்
கூகுள் நிறுவனம் தனது விதிமுறைகளில், கூகுள் ஆவணத்தில் சேர்க்கப்படும் தகவல்களின் உண்மைத் தன்மையைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டியது அதைப் பயன்படுத்தும் நபர்களின் பொறுப்பு என்பதைத் தெளிவாகக் கூறுகிறது. ஆனால், அந்தக் கட்டுரையாளர்கள் தங்கள் பட்டியலில் “நீதித்துறை காவல் மரணங்களையும் (சிறை மரணங்கள்)” சேர்த்திருந்தனர்.
காவல் நிலையத்தில் நிகழும், லாக் அப் மரணங்கள் (Lockup deaths) என்பவை வேறு. நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்கப்பட்டிருப்போரின் மரணம் என்பது வேறு.
தவறான தகவல் பரவலும் ஊடகப் பொறுப்பும்:
அண்மைக்கால சர்ச்சை
லாக்கப் மரணங்கள் என்பவை, விசாரணைக்காக அடித்துத் துன்புறுத்தியோ, வன்கொடுமை செய்தோ, காவலர்களின் கடுமை காரணமாகவோ ஏற்படும் மரணங்கள் ஆகும். நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்கப்பட்டிருப்போர் மரணம் என்பது விசாரணையின்போது நிகழ்த்தப்படும் வன்முறைகளால் ஏற்படுபவை அல்ல.
“கட்டுரை ஆசிரியர்களின் கருத்துகள் அவர்களுடையவை” என்று TNM குறிப்பிட்டிருந்தாலும், தங்கள் பெயரில் வெளியிடப்படும் கட்டுரைகளுக்குத் தரவுகளைச் சரிபார்க்க வேண்டிய அடிப்படைப் பொறுப்பு அந்த ஊடகத்திற்கு உள்ளது. அவர்கள் விவரங்களைச் சரிபார்க்காமல், ஏதோ ஓர் அழுத்தம் காரணமாக அவசரகதியில் வெளியிட்டுள்ளனர் என்றே சந்தேகிக்க வேண்டியுள்ளது.
அதே நாளில், “TNM ஊழியர்கள்” என்ற பெயரில் மற்றொரு கட்டுரையை ‘தி நியூஸ் மினிட்’ வெளியிட்டது. இதில், “25க்கும் மேற்பட்டோர் காவல்துறையின் துன்புறுத்தலால் உயிரிழந்துள்ளனர்” என்று கூறப்பட்டது. ஆனால், இந்த எண்ணிக்கையை உயர்த்துவதற்கு முன்னர் அவர்கள் தகவல்களை ஒப்பிட்டுச் சரிபார்க்கவில்லை.
அவர்கள் சரிபார்க்காமல் வெளியிட்ட இந்தச் செய்தி உடனடியாகக் கோடிக் கணக்கானவர்களிடம் பரவியது. ஒரு வழக்கை விசாரித்து வந்த நீதிபதி கூட இந்த எண்ணிக்கையை நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர் ஒப்புதல்
ஜூன் 29 முதல், ‘தி நியூஸ் மினிட்’ இந்த விவகாரம் குறித்து “டி.என்.எம் ஊழியர்கள்” என்ற பெயரில் தொடர் கட்டுரைகளை வெளியிட்டது. குறிப்பாக, அவர்கள் “கூறப்படும்” (alleged) என்ற வார்த்தையை மெதுவாகச் சேர்க்கத் தொடங்கினர். ஆனால், அதற்குள் தவறான செய்தி பரவிவிட்டது.
ஜூலை 13 வரை, TNM 24 மரணங்களையும் “காவல் மரணங்கள்” என்று வகைப்படுத்தியது. இறுதியாக, இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், இந்த எண்ணிக்கையில் நீதித்துறை காவல் மரணங்களும் (சிறை மரணங்கள்) அடங்கும் என்று நியூஸ் மினிட் ஊடகவியலாளர் ஒப்புக்கொண்டார்.
நீதித்துறை காவல் மரணங்களையும் (சிறை மரணங்கள்) லாக்-அப் மரணங்களையும் ஒன்றாகக் கலந்து, தவறான செய்தி என்று தெரிந்தும் அதனை வெளியிட்டது தவறான செயலாகும்.
எதிர்க்கட்சிகள் திட்டம் முடங்கியது
லாக்-அப் மரணங்கள் மனித உரிமை மீறல்களின் உச்சம். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இவை ஒருபோதும் நடக்கக்கூடாதவை. தமிழ்நாடு அரசும் உடனடியாக இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஒன்றிய புலனாய்வு விசாரணைக்கும் அனுமதி அளித்துள்ளது.
இந்தச் சூழலில், அரசுக்கு எதிராகத் தொடர்ந்து கருத்துக்களைப் பதிவு செய்யும் பிரபலங்கள் கூட இந்த விவகாரத்தில் அரசியல் செய்யும் வாய்ப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடக்கிவிட்டார்.
எடப்பாடி பழனிசாமியும் பாஜகவும் “கைக்கு கிடைத்தும் வாய்க்கு எட்டாத” நிலையில் உள்ளனர். உண்மையில், இந்த லாக்-அப் மரணங்களை வைத்துப் பல மாதங்கள் கதை ஓட்டலாம் என்று நினைத்தவர்களுக்குப் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. அதே நேரத்தில், இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கும் கற்பனைக் கதைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தத் தவறுக்கு ‘தி நியூஸ் மினிட்’ பொது மன்னிப்பு கோரி, தங்கள் கட்டுரைகளில் திருத்தம் அல்லது மறுப்பு வெளியிடுமா? சந்தேகம் தான்! ஆனால் ஒன்று, அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த ஏதாவது சிறு காரணம் கிடைத்தாலும் அதனை எவ்வாறு ஊதிப் பெரிதாக்கலாம் என்று பெரிய ஒரு குழுவே கிளம்பியுள்ளது.
இந்தக் குழுக்கள் சங்கிலி வலைப் பின்னலில் உள்ளன. ஒருவர்க்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் உடனடியாக மாற்றவர் தனது பாணியில் களமிறங்குகிறார். ஊடகத்தில் இது போன்ற போலியான தகவல்களைப் பரப்பும் வலைப்பின்னல்கள் ஜனநாயகத்திற்கே மிகவும் ஆபத்தானவை.