தஞ்சை, ஜுலை 18– வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு கருவிகள் (GEN AI) மற்றும் விவசாய ஆலோசனை தளங்கள் என்ற பொருண்மையில் ஜுலை 9 முதல் 11 வரை மூன்று நாள் தேசியப் பட்டறை சிறப்பாக நடைபெற்றது.
விவசாயம், தொழில் நுட்பம், கல்வி மற்றும் ஆராய்ச்சி
இப்பட்டறை, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் (TNSCST) உயர் கல்வித் துறை தமிழ்நாடு அரசு சென்னை சார்பில் நிதி உதவி யுடன் (Dissemination of Innovative Technology (DIT) புதுமையான தொழில் நுட்பத்தைப் பரப்புதல் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது. விவசாயம், தொழில் நுட்பம், கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகிய அனைத்தையும் ஒரே தளத்தில் இணைக் கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.
விவசாயத்தில் எதிர்காலத்தை…
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பி.வினோத் (தரவு அறிவியலாளர் மற்றும் IIM திருச்சி பழைய மாணவர்) தனது தெளிந்த உணர்வூட்டும் உரையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் இந்திய விவசாயத்தில் எதிர்காலத்தை வடிவமைக்கக்கூடிய சக்தியை பெற்றுள்ளன. விவசாயம், தரவுகள் மற்றும் நுண்ணறிவின் அடிப்படையில் துல்லியமாக திட்டமிடப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதை விரிவாக விளக்கினார்.
சமூகவழி பயிற்சியாக
இதனைத் தொடர்ந்து தலைமையுரை யாற்றிய பதிவாளர் முனைவர் பி.கே.சிறீவித்யா குறிப்பிடுகையில் விவசாயம் நமது தேசத்தின் உயிரணுவாகும். விவசாயின் கையில் தொழில்நுட்பம் சென்றால் அது ஒரு கலாச்சாரப் புரட்சியை ஏற்படுத்தும் சமூகத்தில் விவசாயம் தன்னிறைவு பெறும் என்று உரையாற்றினார். மேலும் பட்டறையின் முக்கியத்துவம் பற்றி மூன்று நாட்களும் தொழில்நுட்பம் மற்றும் நிலத்தோட்ட அனுபவம் கொண்ட நிகழ்வுகளால் நிரம்பியதாக இருந்தது. உழவன், Plantix, e-Vaadagai, Cropin, Kisan Network போன்ற செயலிகள் குறித்து பயிற்சி, பயன்பாடுகள், மற்றும் நடைமுறை ஒத்திகைகள் போன்றவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. விவசாய நிலங்களுக்கு நேரில் செல்லும் வாய்ப்பு, சந்தை பகுப்பாய்வு, இயந்திர வாடகை செயலிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) வழிநடத்தும் டிஜிட்டல் தீர்வுகள் பற்றிய நேரடி கற்றல், இந்த பட்டறையை மாறுபட்டதாக மாற்றியது.
மேலும் இந்த மூன்று நாள் பட்டறை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை விவசாயத்தின் அடித்தளத்திற்கே கொண்டு செல்லும் சமூகவழி பயிற்சியாக அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்தது.
நிகழ்ச்சியின் இறுதியில் பேராசிரியர் ஆர்.கதிரவன், பேராசிரியர் ஆர்.பூங்குழலி (துறைத்தலைவர் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை), பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ்.அப்பாவு என்ற பாலமுருகன் ஆகியோர் விவசாயிகளின் பங்கேற்பையும், மாணவர்களின் ஆர்வத்தையும் வெகுவாக பாராட்டி நன்றி கூறினார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியில் கருத்தரங் கத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கும் இதர மாணாக்கர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.