சென்னை, ஜூலை 18 கோடைகால வெளிச்செல்லும் தொழில் முறை உறுப்பினர்கள் திட்டத்தின் (பிஎப்பி) கீழ் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு புகழ்பெற்ற நிபுணர்களின் குழு தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது. அந்த குழு தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சந்தரமோகனை தலைமைச் செயலகத்தில் நேற்றுமுன்தினம் சந்தித்தது.
இந்த குழுவில் பிலடெல்பியா செவன்டி குழு தலைமை நிர்வாக அதிகாரி லாரன் கிறிஸ்டெல்லா, கிளீவ்லேண்ட், கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழக சட்டப் பள்ளியின் பேராசிரியர் ஜூலியட் கோஸ்ட்ரிட்ஸ்கி, கொலம்பஸ் ஓகியோ பிரதிநிதிகள் அவையின் சட்ட மன்ற உதவியாளர் பிரியாமெய்ஸ் இடம் பெற்றிருந்தனர்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப் படும் காலை உணவுத் திட்டம், குழந்தைகள் பள்ளிகளில் இருந்து இடைநிற்றலை குறைத்தது, அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு, சமத்துவம் மற்றும் சமூக உணர்வுகளை உள்ளடக்கிய பாடத்திட்ட சீர்திருத்தம் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.
ஆதாரம் சார்ந்த கொள்கைகள் மற்றும் குழந்தைகளை மய்யப்படுத்திய உத்திகள் மூலம் பொதுக்கல்வியை மாணவர்களுக்கு வழங்கும், பள்ளிக்கல்வித்துறையின் உறுதிப்பாட்டை அமெரிக்க பிரதிநிதிகள் பாராட்டினர். உள்ளூர் பாரம்பரியத்தை ஒருங்கிணைப்பதற்கும், சமூகத்தை மய்யப்படுத்திய கற்றலை ஊக்குவிப்பதற்கும், அனைத்து மட்டங்களிலும் பள்ளித் தலைமையை வலுப்படுத்துவதற்கும் தமிழ்நாடு மேற்கொள்ளும் முயற்சிகளை குழுவினர் மிகவும் பாராட்டினர்.
முன்பதிவில்லாத பெட்டிகளில்
கூட்டத்தை கட்டுப்படுத்த ரயில்வே புதிய திட்டம்
‘இனி ஒரு பெட்டிக்கு
150 டிக்கெட்டுகளே வழங்கப்படும்’
150 டிக்கெட்டுகளே வழங்கப்படும்’
சென்னை, ஜூலை 18 முன்பதிவில்லாத பெட்டிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஒரு புதிய திட்டத்தை ரயில்வே கொண்டுவர உள்ளது. இந்த திட்டம் தற்போது சோதனை அடிப்படையில் புதுடில்லியில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது, நீண்ட தூர ரயில்களில் இணைக்கப்பட்டுள்ள முன்பதிவில்லாத ஒரு பெட்டிக்கு தலா 150 டிக்கெட்டுகள் மட்டும் வழங்கும் திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
எடுத்துக்காட்டாக, எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்கள் செல்லும் கொல்லம், அனந்தபுரி, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களில் தலா 4 பெட்டிகள் என மொத்தம் 12 முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்படுகிறது. ஒரு பெட்டிக்கு 150 டிக்கெட்டுகள் என மொத்தம் 1,800 டிக்கெட்டுகள் மட்டும் குறிப்பிட்ட நேரத்துக்குள் வழங்கப்படும்.
முன்பதிவில்லாத பெட்டியில் 90 முதல் 100 பேர் வரை பயணிக்க இருக்கை வசதி உள்ளது. ஆனால், நாள்தோறும் ஒவ்வொரு ரயிலிலும் முன்பதிவில்லாத பெட்டிகளில் 300 முதல் 350 பேர் மூச்சுத் திணறல் ஏற்படும் வகையில் நெருக்கியவாறு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பயணிகள் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் இந்த புதிய திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. இதுகுறித்து சாதக, பாதகங்களை பரிசீலனை செய்து நடைமுறைகள் வகுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறினர்.