சென்னை, ஜூலை 17 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ தள பதிவில் கூறியிருப்பதாவது:
பெருந்தலைவர் காமராசரைப் ‘பச்சைத்தமிழர்’ என்று போற்றியவர் தந்தை பெரியார்.
குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா.
பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் தமிழினத் தலைவர் கலைஞர்.
உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு!
அத்தகைய பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல. மரியாதைக்குரிய தலைவர்க ளின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும்.
சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நா ளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறை வேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசியலாக்க முயற்சிக்கவேண்டாம்!
பெருந்தலைவர் காமராசர்பற்றி மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ஆற்றிய உரையில், முத்தமிழறிஞர் கலைஞருக்கும், பெருந்தலைவர் காமராசருக்கும் இடையிலான அன்பையும், அரசியல் புரிதலையும் வெளிப்படுத்தி இருந்தார். அதனை அரசியலாக்கி ஆதாயம் தேட சிலர் முயற்சித்து வருகின்றனர். இதற்கு சமூகநீதி உணர்வாளர்கள், மதச்சார்பற்ற சக்திகள் பலியாகக் கூடாது என்பதே அனைவரின் கருத்தாகும்.
முத்தமிழறிஞர் கலைஞர், பெருந்தலைவர் காமராசர் இடையிலான அந்த நெகிழ்ச்சியான சந்திப்புக் குறித்து தனது ‘‘நெஞ்சுக்கு நீதி’’ புத்தகத்தில் (தொகுதி 2, பக்கம் 470–இல்) விரிவாக எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
17.7.2025