இன்று, இராமசாமி முதலியார் நினைவு நாள். நீதிக்கட்சியின் மூளையாகச் செயல்பட்டவரும், சமூக நீதிக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவருமான இராமசாமி முதலியாரின் பங்களிப்புகள் அளப்பரியவை.
இராமசாமி முதலியார், நீதிக்கட்சியினை ஆரம்பித்த தலைவர்களில் ஒருவர். அவர் நீதிக்கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். ஜூலை 1918-இல் இங்கிலாந்து சென்று நீதிக்கட்சி சார்பில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி, அதற்கான பிரித்தானிய நாடாளுமன்றச் சீர்திருத்தச் செயற்குழு முன் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இராமசாமி முதலியார் முக்கியப் பங்காற்றினார்.
1925-இல் சர் பி.டி. தியாகராயரின் மறைவுக்குப் பின், சாகு மஹாராஜின் சத்ய ஷோதக் சமாஜையும், நீதிக்கட்சியையும் இணைக்கும் பாலமாக இராமசாமி முதலியார் மட்டுமே இருந்தார். நீதிக்கட்சியில் ஜஸ்டிஸ் பத்திரிக்கை ஆசிரியராகவும் இயங்கினார்.
1920-இல் சென்னை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1920–1926, 1931–1934 காலகட்டங்களில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் 1928 முதல் 1930 வரை சென்னை நகர மேயராகப் பணியாற்றினார்.
அவர் மேயராக இருந்தபோதுதான் ரயில் வண்டிகளில் பயணிகள் அமரும் இடங்களில் ‘பிராமணர்களுக்கு மட்டும்’ என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததையும், அவர்களுக்கு இடம் தனித்து ஒதுக்கப்பட்டிருந்ததையும் ஒழித்து, அனைத்து பயணிகளும் வேறுபாடின்றி பயணம் செய்ய வைத்தார். இது சமூக சமத்துவத்தை நிலைநாட்டுவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. ‘பிராமணர்களுக்கே எல்லாம்’ என்ற மனுதர்மக் கோட்பாட்டுக்கு நல்ல பதிலடியாக இது அமைந்தது
இராமசாமி முதலியார், தனது தீர்க்கமான பார்வை, அயராத உழைப்பு, மற்றும் சமத்துவத்திற்கான போராட்டம் மூலம் தமிழ்நாட்டு அரசியலிலும், இந்திய சமூகத்திலும் நீங்கா இடம் பிடித்தவர். அவரது நினைவு நாளில், அவரது இலட்சியங்களை நாம் போற்றுவோம்!