கிருஷ்ணகிரி, ஜூலை 16– கிருஷ்ணகிரியில் காரை திருடி கன்டெய்னர் லாரியில் கடத்திய வடமாநில கும்பலை சேர்ந்த 3 பேர் கேரளாவில் சிக்கினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது காரை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (14.7.2025) அதிகாலை அடையாளம் தெரியாத நபர்கள் காரை திருடிச் சென்றனர்.
இதுதொடர்பாக கிருஷ்ணன் குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
இதில் முதல்கட்டமாக கார் நிறுத்தி இருந்த இடத்தின் அருகில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
வடமாநில கொள்ளையர்கள்
அதில் ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட லாரி ஒன்று காரின் அருகில் நிறுத்தப்பட்டு இருந்ததும், அதில் இருந்து இறங்கிய அடையாளம் தெரியாத நபர்கள் காரை திருடி கன்டெய்னர் லாரியின் உள்ளே மறைத்து கொண்டு சென்றதும் தெரியவந்தது.
தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், காரை திருடிய நபர்கள் வட மாநில கொள்ளையர்கள் என்றும், அவர்கள் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை கடந்து சென்றதும் தெரியவந்தது.
எர்ணாகுளம் அருகே சிக்கினர்
இதற்கிடையே காரை திருடிய கும்பல் லாரியில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு. பெருந்துறை, கோவை வழியாக கேரள மாநிலத்திற்குள் நுழைந்தது தெரியவந்தது. இதையடுத்து கிருஷ்ணகிரி காவல் துறையினர் கேரள மாநில காவல் துறையினரை எச்சரிக்கைபடுத்தினார்கள். அதன் படி எர்ணாகுளம் அருகே பனங்காடு காவல் துறையினர் அந்த வழியாக வந்த லாரியை நேற்று சுற்றிவளைத்து பிடித்தனர்.
கார் மீட்பு
அதில் 3 பேரை பிடித்து நடத்திய விசாரணையில், அவர்கள் அரியானா மாநி லத்தை சேர்ந்த அகமத், சாஹித் என்றும், மற்றொருவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சர்குல் என தெரிய வந்தது. அவர்கள் 3 பேரும் வட மாநில கொள்ளையர்கள் ஆவார்கள்.
இவர்கள் கன்டெய்னர் லாரியில் வந்து ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து திருடும் கும்பல் என தெரியவந்தது.
உடனே அவர்களை கைது செய்து நடத்திய விசாரணை யில் திருடப்பட்ட காரை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே ஒருஇடத்தில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதை யடுத்து காவல் துறையினர் அந்த காரை மீட்டனர். கைதான 3 பேரிடமும் கேரள மாநில காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.