விடுதலை சிறுத்தைகள் கட்சி ஓட்டுகள் சிந்தாமல் சிதறாமல் தி.மு.க. கூட்டணிக்கு விழும் திருமாவளவன் நம்பிக்கை

viduthalai

கடலூர், ஜூலை 16– கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம் திறப்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் திராவிட மாடல் என்று சொல்லக்கூடிய தி.மு.க. அரசு மறுபடியும் மலரக்கூடிய அணியாக அமையும். அதற்கு விடுதலை சிறுத்தை கட்சி உற்ற துணையாக தமிழ்நாடு தழுவிய அளவில் இருக்கும். தி.மு.க.விற்கு விழும் 4 ஓட்டுகளில் ஒரு வாக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஓட்டாக இருக்கும்.

100 ஓட்டுகளில் 25 ஓட்டுகள் விடுதலை சிறுத்தை கட்சியின் ஓட்டுகளாக இருக்கும். ஒரு ஓட்டு கூட சிந்தாமல் சிதறாமல், தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு கொத்து கொத்தாக விழும் என்கிற அளவிற்கு நாங்கள் களப்பணி ஆற்றுவோம். கைகோர்த்து நிற்கிறோம். களத்தில் நிற்கிறோம் என்பதற்கு இதுதான் முதன்மை காரணம்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகச்சிறந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பார்கள். முத்தமிழறிஞர் கலைஞரை விட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைக்கு தோழமைக் கட்சிகளை எல்லாம் வெற்றிகரமாக ஒன்றிணைத்து வழி நடத்தி வருகிறார். முத்தமிழறிஞர் கலைஞரை விட என்று சொன்னால் அவரை குறைத்து மதிப்பிடுவது அல்ல. அவரால் உருவாக்கப்பெற்ற முதலமைச்சர் எவ்வளவு வலிமையோடு இருக்கிறார், ஆற்றல் மிக்கவராக இருக்கிறார். நிர்வாகத்திலும் கெட்டிக்காரராக இருக்கிறார் என்பதற்கு இவையெல்லாம் சான்று.

பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி முன்மாதிரியாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்றைக்கும் நாம் உற்ற துணையாக இருப்போம்.

மீண்டும் தி.மு.க., ஆட்சியே தமிழ்நாட்டில் அமையும். தொலைநோக்கு பார்வை கொண்ட முதல்-அமைச்சருக்கு நாம் உற்ற துணையாக இருக்கிறோம். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், ஓரணியில் தமிழ்நாடு. அதுதான் தி.மு.க. அணியில் தமிழ்நாடு. மற்றவர்கள் எல்லாம் கட்சிகளாக இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *