சென்னை ஜூலை 15 எழுத்தாளரும் மதுரை தொகுதி எம்பியுமான சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ புத்தக வெற்றி விழாவில் அய்ஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் கீழடி குறித்து பேசியது கவனம் பெற்றுள்ளது.
கீழடி அகழாய்வு முடிவுகளை ஒன்றிய அரசு ஏற்க மறுக்கும் நிலையில் உதயசந்திரன் பேச்சு கவனம் பெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அமைந்துள்ளது. இங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடந்து வருகிறது. 3 கட்ட அகழ்வாராய்ச்சி ப்பணியின்போது ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளன. மண்டை ஓடு, பழங்கால ஓடுகள், குடுவைகள், மணிக்குண்டுகள் உள்பட ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளன. ஆனால் தமிழர் பாரம்பரியத்தை முன்னிறுத்தும் இந்த அகழாய்வு முடிவுகளை ஒன்றிய அரசு ஏற்க மறுக்கிறது.
இந்த நிலையில் ‘வேள்பாரி’ புத்தக வெற்றி விழாவில் அய்ஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் கீழடி குறித்து பேசுகையில், கீழடிக்கு நான் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்று பார்த்தேன். சங்க காலத்தில் மக்கள் பயன்படுத்திய அஞ்சனக்கோல் மூலம் மக்கள் எழுதிய ஆதன் என்ற பெயர் உள்ள மட்பாண்டத்தை பார்த்தேன். அப்போது வயதான நபர் ஒருவர் எங்களை சுற்றி சுற்றி வந்தார். அவர் யார் என்று கேட்டேன். அவர் கீழடி ஊராட்சி ஒன்றிய பள்ளியின் தமிழ் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்.
கீழடி வரலாறு
நான் 25 ஆண்டுகளுக்கு கீழடி பாரம்பரியத்தை முன்னாடியே நான் கண்டுபிடித்துவிட்டேன். இந்திய தொல்லியல்துறைக்கு அதை பற்றி எழுதினேன். 25 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய பின் இப்போதுதான் இங்கே அகழாய்வு செய்கிறார்கள். எனக்கு கேட்கவே வியப்பாக இருந்தது. அந்த ஆசிரியர் மற்றும் அவரது மாணவர்கள் இணைந்து இதை கண்டுபிடித்து உள்ளனர். நான் பள்ளிக்கல்வித்துறையில் இருந்து தொல்லியல் துறைக்கு தூக்கி அடிக்கப்பட்ட பின்.. அங்கே அகழாய்வு பணிகளை கவனித்து வந்தேன். தமிழ்நாடு முழுக்க இருந்து ஆசிரியர்கள் பலர் எனக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பி வந்தனர். அப்படி ஒரு குறுஞ்செய்தியில் எனக்கு.. தமிழ்நாட்டின் தென்கோடியில் ஒரு இடத்தில் அகழாய்வு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த குறுஞ்செய்தியின் அடிப்படையில் நாங்கள் மாணிக்கம் என்பவரை சந்திக்க சென்றோம்.
நாங்கள் மாணிக்கம் வீட்டிற்கு சென்ற போது மாணிக்கம் அங்கே இல்லை. அவரின் மனைவி எங்களிடம்.. அவர் இங்கே இல்லைங்க.. அவர் எங்காவது சுடுகாட்டில் இருப்பார் என்றார். நாங்கள் தேனீக்காட்டில் உள்ள முதுமக்கள் தாழி இருக்கிற இடத்தில்தான் அவரை கண்டுபிடித்தோம். அந்த இடம் தொல்லியல் துறையில் மிக முக்கியமான இடமாக இருக்கும் என்பதை பின்னர் கண்டுபிடித்தோம். அங்கே அகழாய்வு செய்து முதுமக்கள் தாழியை கண்டுபிடித்தோம். அந்த முதுமக்கள் தாழியில் இருந்த கனிமத்தை அமெரிக்காவின் ப்ளோரிடா வரை கொண்டு சென்றோம். அதில்தான் தமிழ்நாட்டில்தான் இந்தியாவிலேயே முதலில் இரும்பு பயன்படுத்தப்பட்டது என்பதை உறுதி செய்தோம்.
தென்கோடி பற்றி எனக்கு ஆசிரியர் ஒருவர் மூலம் வந்த ஒரு செய்திதான் இதற்கு காரணமாக அமைந்தது.
கீழடியில்தான் மருத்துவரின் இதயம்
இதை இன்னும் நீட்டித்து சொல்ல வேண்டும் என்றால்.. சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துவிட்டு நான் மருத்துவர் ஒருவரை பார்த்தேன். அவர் என் மருத்துவர் அறிக்கைகளை பார்த்தார். எனக்கு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் பேனாவின் மூடியை மூடி வைக்கிறார். அடுத்து என்னிடம் கீழடி பற்றி கேட்டார். இவ்வளவு ஆராய்ச்சி செய்த பின்பும் ஏன் ஏற்க மறுக்கிறார்கள் என்று கேட்டார். என் இதய நலனுக்கு இடையே அவரின் இதயம் சென்றது கீழடிக்குத்தான். தமிழ்நாட்டின் தென் கோடியில் உள்ள பகுதிநேர ஆசிரியர் தொடங்கி உலகம் சுற்றும் புகழ்பெற்ற மருத்துவர் வரை பலரின் இதயம் செல்வது கீழடிக்குத்தான். இந்த ஏக்கம்தான், சிந்தனைதான் நம்முடைய பலம்.
இந்த வேள்பாரி புதினம் அப்படிப்பட்டதுதான். கவிதை நடையில் படைக்கப்பட்ட ஒரு புதினம். அறிவியல், காதல், வீரம், துரோகம், அன்பு, நட்பு எல்லாம் இருக்கிறது. எனக்கு தெரிந்து திரை மொழிக்கு மிக நெருக்கமாக படைக்கப்பட்ட புதினம் வேள்பாரிதான். தமிழர் வரலாற்றை பதிவு செய்யும்.. முக்கியமாக தமிழரின் அற பின்னணியை பதிவு செய்யும் முக்கியமான நூல் இந்த வேள்பாரி. வென்றவர் எழுதுவதுதான் வரலாறு. அதில் வீழ்த்தப்பட்டவர்களுக்கு இடம் இல்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட நாயகர்கள் மக்கள் மத்தியில் இருக்கிறார்கள். மக்கள் அவர்களை எப்போதும் நினைவு கூறுகிறார்கள், இவ்வாறு உதயசந்திரன் அய்.ஏ.எஸ். தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.