பச்சைத் தமிழர், கல்வி வள்ளல், கர்மவீரர் என்று தந்தை பெரியார் அவர்களால் போற்றப்பட்ட காமராசர் அவர்களின் 123ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள் (1903).
காங்கிரஸ்காரராக காமராசர் இருந்தாலும், எந்தக் காரணங் களுக்காக தந்தை பெரியார் காங்கிரசை விட்டுப் பிரிந்தாரோ அந்தக் காரணங்களை உள் வாங்கிக் கொண்டு, காங்கிரசில் பணியாற்றினார்.
காமராசர் தன் கருத்தாகக் கூறியிருப்பது என்ன?
‘‘எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று பேசவும் ஆரம்பித் திருக்கிறார்கள். யார் பேசுகிறார்கள் என்று தெரியுமா? இதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு ஏழை மக்களை மேலும் ஏழையாக்குபவர்களே இதைக் கூறுகிறார்கள். ‘நீ ஏழையாய் இருப்பது, ஏழையாய் இருக்க வேண்டும் என்பது உன் தலை எழுத்து’ (கடவுள் கட்டளை) என்று கூறி ஏமாற்றுகிறார்கள். தங்க ளின் நிலையை உயர்த்திக் கொண்டே இருக்கும் சூழ்ச்சியே அது.
தலையெழுத்தை அழித்து எழுதுவோம்.
… உழைக்க வேண்டியதே, ஏழையாய் இருப்பதே தலையெழுத்து என்றால் அந்தத் தலையெழுத்தை மாற்றி எழுது வோம். எழுத வேண்டியது அவசியம் என்றுதான் சொல்லுகிறேன். எனவே கடவுள் பெயரை சொல்லி உங்களை ஏமாற்றுகிறவர்கள் தான் என்னை கடவுள் நம்பிக்கையில்லாதவன் என்று சொல்லு கிறார்கள்.
ரஷ்யாவிலும், அமெரிக்காவிலும் செல்வம் செழித்து வருகிறது. அங்கு இவை எல்லாம் குறுக்கிடவில்லை. அந்த நாடுகளைப் போன்று நம்முடைய நாட்டிலும் செல்வம் பெருக வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை இருந்தால் மட்டும் போதாது. அதற்காகப் பாடுபட வேண்டும். அதிகம் உழைக்க வேண்டும். சோம்பேறித்தனமாக இருந்தால் பயன்படாது. கடவுள் எண்ணிக் கொண்டு கை கட்டிக் கொண்டிருந்தால் எப்படிச் சாப்பிடுவது?’’ – இராயக்கோட்டையில் 26.4.1966இல் காமராசர் உரை (‘விடுதலை’ 27.4.1966).
‘நான் எனது இலட்சியத்தில் மனக் குறைவடைய வேண்டிய நிலையில்லாதவனாக இருக்கிறேன். இதை 4,5 மாதங்களுக்கு முன் காமராசர் மகிழ்ச்சியோடு வெளியிட்டார். அதாவது,
‘பெரியாருக்கு இன்று என்ன குறை? அவர் போட்ட பாதையில்தான் இன்று காங்கிரஸ் போய்க் கொண்டிருக்கிறது; அவர் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை’ என்பதாகப் பேசினார். இனி, எனக்கேதாவது குறைகள் இருக்குமானால், அது மக்கள் இடையில் காணப்படும். கவலையற்ற தன்மையும், எதிரிகளின் சூழ்ச்சிக்கு ஆளாகும் தன்மையும் பற்றித்தான்’’
– தந்தை பெரியார் (தந்தை பெரியார் 88ஆம் ஆண்டு (17.9.1966) பிறந்த நாள் ‘விடுதலை’ மலரிலிருந்து)
‘மனு தர்மத்தைத் தள்ளி மனித தர்மம் ஏற்கப்பட்டது காமராசரால் தான். மக்களுக்கோ புத்தி இல்லை; தற்குறிகள் இருக்கும் இந்த நிலையில் எப்படி ஜனநாயகம் உருப்பட முடியும்? எனவேதான் நாட்டு மக்களின் கல்வியில் நாட்டம் செலுத்தலானார் காமராசர்’’
– தந்தை பெரியார் (‘விடுதலை’ 23.1.1965)
‘திரு. காமராசர் போன்று பற்றற்றவர்களுக்கு உதவி செய் தால் நமக்கு நன்மை ஏற்படும் என்று நினைக்கிறேன். ஏன்? ஆச்சாரியார் இருந்து நமக்குக் கொடுத்த தொல்லைகள் நீங்கள் அறிந்ததேயாகும். குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து நம்மீது திணித்தார். உத்யோகத்தில் நமக்கு கிடைக்க வேண்டியதை எல்லாம் அவர் இனத்திற்குக் கொடுத்தார். திரு. காமராசர் வந்ததும் அதை அப்படியே மாற்றி ஆச்சாரியார் தன் இனத்திற்குச் செய்ததுபோல் இவர் நம் இனத்திற்குச் செய்கிறார் என்ற காரணத்தை வைத்துக் கொண்டு இந்தப் பார்ப்பனர்கள் அவரை எப்படியாவது ஒழித்துக் கட்டத் திட்டமிட்டு அவருக்கு எவ்வளவு தொல்லைகள் உண்டாக்க முடியுமோ அவ்வளவும் கொடுத்து வருகிறார்கள். ஆகவே தான் நாம் திரு. காமராசரை ஆதரிக்கும் நோக்கம் கொண்டிருக்கிறோமே தவிர வேறு ஒன்றும் இல்லை.
(ஈரோட்டில் தந்தை பெரியார் உரை ‘விடுதலை’ 17.1.1964)
தந்தை பெரியார், காமராசர் சிந்தனைகள் எத்தகையதாக இருந் தன என்பதற்கு மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் போதுமானவை.
காமராசரைக் ‘கருப்புக் காக்கை’ என்று சொல்லி அதைக் கல்லால் அடிக்க வேண்டும் என்று சென்னைக் கடற்கரையில் பேசியவர் ஆச்சாரியார் (ராஜாஜி).
‘கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டை’ என்று காமராசர் பற்றி ‘கல்கி’ இதழ் கார்ட்டூன் போட்டதுண்டே!
‘அரை நேரம் படித்தால் ேபாதும், அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும்’ என்றார் முதலமைச்சர் ராஜாஜி. ‘குலக்கல்வித் திட்டம்’ என்று அதற்குப் பெயர் சூட்டினார் தந்தை பெரியார். தமிழ்நாடே தந்தை பெரியார் தலைமையில் பொங்கி எழுந்தது.
‘உடல் முழுவதும் மூளை உள்ளவர்’ என்று பார்ப்பனர்களால் போற்றிப் புகழ் பாடப்பட்ட ஆச்சாரியார் முதலமைச்சர் பதவியி லிருந்து விரட்டியடிக்கப்பட்டார்.
அந்த இடத்திற்கு யாரைக் கொண்டு வருவது என்ற பிரச்சினை எழுந்த போது, தந்தை பெரியார், டாக்டர் வரதராசலு நாயுடு ஆகியோரின் முயற்சியாலும், அழுத்தத்தாலும் காமராசர் முதலமைச்சர் ஆனார்.
ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்துக் கட்டினார். ஆச்சரியார் மூடிய 6,000 பள்ளிகளை மீண்டும் திறந்ததுடன் மேலும் 6,000 பள்ளிகள் சேர்த்து 12 ஆயிரம் பள்ளிகளையும் திறந்தார். பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். பச்சைத் தமிழர் என்று அவரை அடையாளம் காட்டினார் அறிவுலக ஆசான் தந்தை பெரியார்.
கல்வி வெள்ளம் நாடெங்கும் புரண்டு ஓடியது. குழந்தை களுக்குக் காமராசர் என்று பெயர் சூட்டினார் பெரியார்.
எல்லாமே சரியாகப் போய் கொண்டிருந்தது. தமிழ்நாட்டு அரசியலிலிருந்து விலகி அகில இந்திய காங்கிரசின் தலைவராக எப்பொழுது சென்றாரோ அன்று முதலே கீழிறக்கம் ஏற்பட்டது.
‘உங்கள் முடிவு உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும், தமிழ்நாட்டுக்கும் தற்கொலைக்கும் ஒப்பந்தம்’ என்று காமராசருக்குத் தந்தி கொடுத்தார் தந்தை பெரியார்.
அதுதானே நடந்தது.
சமதர்ம சங்கநாதம் செய்தார். பசுவதைத் தடை சட்டம் வேண்டும் என்று கோரினர் ஹிந்துமத வெறியர்கள் (அவர்கள் தான்் இன்றைய ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார், ஜனசங்கம், சங்கராச் சாரியார்கள், நிர்வாணச் சாமியார்கள்).
பசுவதைத் தடைச் சட்டத்திற்கு மாறாக கருத்துக் கூறிய, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காமராசரை அவர் டில்லியில் (7.11.1966) வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது மேற்கண்ட சங்பரிவார் கும்பல், அவர் தங்கியிருந்த வீட்டுக்கு ஒரு பட்டப் பகலில் தீயிட்டு உயிரோடு காமராசரைக் கொல்ல முயன்றனர் என்றால், அதன் தன்மையைப் புரிந்து கொள்ளலாமே!
‘காமராசர் கொலை முயற்சி சரித்திரம்’ என்று ஒரு தொகுப்பு நூலையே படங்களுடன் வெளியிட்டு, நாடெங்கும் பரப்பினார் தந்தை பெரியார்.
காமராசரைப் படுகொலை செய்ய முன்ற அந்தக் காவிக் கும்பல்தான் இன்றைக்கு இந்திய ஒன்றிய அரசின் அதிகார பீடத்தில் அமர்ந்து, பசுவதைத் தடுப்பு முதல் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்னும் ஹிந்து ராஜ்ஜியத்தை உருவாக்கிட ஆயுதங்களுடன் வீதிக்கு வந்துள்ளது.
கர்ம வீரர் காமராசரின் இந்த 123ஆம் ஆண்டு பிறந்த நாளில், இந்த வரலாற்றுத் தடயங்களை எல்லாம் உள் வாங்கி, மீண்டும் ஹிந்து ராஜ்ஜியம் என்னும் பார்ப்பன வல்லாண்மை ஆதிக்கத்தை முறியடிக்க உறுதி கொள்வோம்!
இளந் தலைவர் ராகுல்காந்தியின் சமூகநீதிக் குரலை வரவேற்போம்!
வாழ்க தந்தை பெரியார்! வாழ்க காமராசர்!!