சென்னை, ஜூலை.14- சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஏரிகள், நீர் நிலைகள் செயற்கைக் கோள் மூலம் கண்காணிக்கப்பட்டு அதன் ஆக்கிரமிப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.
செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு
மத்திய நீர்வள ஆணையம், இந்திய வானிலை மய்யம் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இணைந்து புதிதாக இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் நீர் தேவை,கிராமங்களில் தண்ணீர் வரவு- செலவு, குடிநீர் பற்றாக்குறை நிலவரம், அணைகளுக்கு நீர்வரத்து முன்னறிவிப்பு, நிலத்தடி நீர் தகவல், ஆறுகளுக்கு இடையே நீர் பரிமாற்றம் போன்ற தகவல்களும் இந்த இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த இணையதளத்திற்காக அரசு ரூ.30 கோடி செலவிட்டுள்ளது. இதேபோல, செயற்கைக் கோள் அடிப்படையிலான நீர்நிலைகளின் தகவல், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பதற்கு ‘tnwip.tn.gov. in’என்ற இணையதள சேவை ரூ.2.55 கோடியும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீர் நிலைகளின் கொள்ளளவு இழப்பையும் கண்டறிய முடியும். நீர்நிலைகளில் ஏற்படும் ஆக்கிரமிப்புகள் குறித்து, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல்களையும் அனுப்ப முடியும். இந்த 2 இணையதள சேவைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
9 ஆயிரம் ஏரிகள்
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் செயற்கைக்கோள் வாயிலாக புதிய தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் நீரின் இருப்பு, தரம் ஆகியவற்றையும் கண்காணிக்க முடியும். அத்துடன் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பையும் தடுக்கவும், மறுசீரமைப்பு செய் யவும் உதவும்.
அத்துடன் நீர்நிலைகளை புனரமைக்க முன்கூட்டியே திட்டமிட உதவுகிறது. ஏரிகளில் நீர் இருப்பு மற்றும் நீர்பி டிப்பு பரப்பளவு ஆண்டுதோறும் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து, ஆதாரபூர்வ முடிவெடுக்க உதவுகிறது. மழை காலங்களில் அதிகாரிகளுக்கு தானாக எச்சரிக்கை அறிவிப்புகள் அனுப்பி விரைவான நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பை உருவாக்குகிறது. மேற்கண்ட தகவல்களை நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.