திருமணம்… ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழவும், ஒரு குடும்பத்தை உருவாக்கவும், சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஒப்பந்த உறவு. இருவரும் புதிய வாழ்க்கையை தொடங்கும் வசந்த காலத்தின் வாசல்படியாக இருக்க வேண்டிய திருமண பந்தம் ஒரு சிலருக்கு, துன்பத்தின் தொடக்கமாக அமைந்து விடுகிறது. அதற்கு காரணம் வரதட்சணை என்னும் கொடிய நோய்.
வரதட்சணைக் கொடுமை
இந்தியாவில் திருமணம் என்பது பல்வேறு சடங்குகளையும், ஆடம்பரமாக நடத்தப்படக்கூடிய நிகழ்வுகளையும் தாங்கியதாக கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட இந்த திருமண உறவில், பல்வேறு கசப்பான சம்பவங்களும் அரங்கேறுகிறது.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படு கிறது என்று சொல்வார்கள். ஆனால் ரொக்கத்தில் தான் பல திருமணங்கள் முடிவாகின்றன என்று சொன்னால் மிகையல்ல.
வரதட்சணைக்கொடுமையால் பெண்களும், பெண் வீட்டாரும் சொல்லொண்ணாத் துயரத்துக்கு ஆளாகிறார்கள். திருமணத்தின் போது பேரம் பேசுவது போல, மாப்பிள்ளை வீட்டார் தங்க நகை, பணம், இதரப்பொருட்களை பெண்வீட்டாரிடம் கேட்கும் வழக்கம் தொடர்ந்து வருகிறது.
அவ்வாறு பேசிய நகையோ, பணத்தையோ, பொருட்களையோ தராவிட்டால், மணப்பெண்ணை மனதளவிலும், உடல் அளவிலும் கொடுமைப் படுத்தும் நிகழ்வுகள் நடப்பதை அவ்வப்போது செய்திகளில் பார்க்கிறோம்.
6,450 பேர் மரணம்
இது போன்ற கொடுமைகள் இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்து கொண்டு இருக்கின்றன. தினமும் எங்கோ ஒரு பெண் வரதட்சணை கொடுமைக்கு ஆளாகிக்கொண்டு இருக்கிறார். அல்லது உயிரிழந்து இருப்பார். இந்த மரணங்கள் தற்கொலையாகவோ அல்லது கொலையாகவோ கூட இருக்கலாம்.
தற்கொலை தீர்வு அல்ல
– உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சிறீலேகா
தமிழ்நாட்டில் வரதட்சணை கொடுமை புகார்கள் எந்தளவுக்கு இருக்கிறது? என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் எல்.சிறீலேகாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை போன்றவை காலம் காலமாக இருக்கிறது. நாகரிக சமூகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் கூடாது என்பதுதான் அனைவரின் விருப்பமாகும். இதற்காக தான் குடும்ப வன்முறை சட்டம், வரதட்சணை தடுப்பு சட்டம் என பெண்கள் பாதுகாப்புக்காக பல்வேறு சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. பல நேரங்களில் பொய் புகார்கள் மூலம் இந்த சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டாலும் காவல்துறையினர் விசாரணை, நீதிமன்ற விசாரணை மூலம் இதுபோன்ற புகார்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதேவேளையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த சட்டம் பெரிய அளவில் கைகொடுத்து வருகிறது. வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்குகளில் சிக்கினால் நிச்சயம் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு விடுவோம் என்ற விழிப்புணர்வு தமிழ்நாட்டில் அதிகளவில் உள்ளது. அதேவேளையில் சட்டம் மிக கடுமையாக இருப்பதால் வரதட்சணை கேட்பது என்பது தமிழ்நாட்டில் வெகுவாகவே குறைந்துள்ளது.
வரதட்சணை கொடுமைக்கு தற்கொலை தீர்வல்ல என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதேவேளையில் வரதட்சணை கொடுமைக்கு ஆளாகி இருக்கும் பெண்ணுக்கு அவருடைய பெற்றோர் ஆதரவாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி (என். சி.ஆர்.பி.) 2022-ஆம் ஆண்டில் வரதட்சணைக் கொடுமையால், 6,450 பெண்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண் டுள்ளனர். 2021-ஆம் ஆண்டில் 6,753 பேரும், 2020-ஆம் ஆண்டில் 6,966 பேரும் உயிரிழந்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.
இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2,138 பெண்கள் உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்தபடியாக பீகாரில் 1,057 பேரும், மத்திய பிரதேசத்தில் 518 பேரும், ராஜஸ்தானில் 451 பேரும், மேற்கு வங்காளத்தில் 406 பேரும், ஒடிசாவில் 263 பேரும், அரியானாவில் 234 பேரும், ஜார்க்கண்ட்டில் 208 பேரும், கர்நாடகாவில் 165 பேரும், தெலுங்கானாவில் 137 பேரும், ஆந்திராவில் 100 பேரும், தமிழ்நாட்டில் 29 பேரும், கேரளாவில் 11பேரும் இறந்துள்ளனர்.
பதிவான வழக்குகள்…
வரதட்சனை தடைச்சட்டத்தின் கீழ், 2022-ஆம் ஆண்டில் மட்டும் 13,437 வழக்குகள் பதிவாகி யுள்ளன. இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 4,807 வழக்குகளும், அதனைத் தொடர்ந்து பீகாரில் 3,580 வழக்குகளும் பதிவாகி இருக்கின்றன. தமிழ் நாட்டை பொறுத்தவரையில், அந்த ஆண்டில் 220 வழக்குகள் பதிவாகியதாக குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் வரதட்சணைக் கொடுமை தொடர்பான விழிப்புணர்வு பல்வேறு வகைகளில் நடத்தப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த சூழலிலும் அரசு உறுதுணையாக இருந்து வருவதால், மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழப்புகளும், பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கைகளும் குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ ஆயிரம் கனவுகளுடன் திருமண வாழ்வில் நுழையும் பெண்களின் கனவுகளும், வாழ்வும் வரதட்சணை என்ற பெயரில் சிதைக்கப்படுவதை தடுக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. இதை உணர்ந்தால் பெண்களின் வாழ்வு சிறக்கும்.
நன்றி: ‘தினத்தந்தி’ 14.7.2025