சென்னை, ஜூலை 14 நுழைவுத் தேர்வு பயிற்சி மய்யங்கள் மாணவர்களின் திறமையை வேட்டையாடும் மய்யங்களாக உள்ளன என்று குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் கடுமையாகச் சாடியுள்ளார்.
நாட்டில் புற்றீசல் போல பெருகிவரும் நுழைவு தேர்வு பயிற்சி மய்யங்கள், பெற்றோர் களிடமிருந்து அதிகப்படியான கட்டணங்களைப் பெற்று, செய்தித்தாள்களிலும், விளம்பரப் பலகைகளிலும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு மாணவர்களை ஈர்த்து வரு கின்றன. இந்த மய்யங்கள், மதிப்பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, மாணவர்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடித்து, அவர் களை மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக மாற்றி வருகின்றன என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது. மாணவர்களின் படைப்பாற்றலை அழித்து, அவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் இந்த மனப்பாடக் கலாசாரம், நாட்டின் கல்வி முறைக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
மேலும் பல்வேறு மன அழுத்தங்களால் பாதிக்கப் படும் மாணவர்கள், தற்கொலை செய்து கொள்ளும் கொடு மையும் அரங்கேறுகிறது. இந்திய அளவில் இதுவரை 700 மாணவர்கள் தங்களை மாய்த்துக் கொண்டுள்ளன. இந்தச் சூழலில், ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், ‘நுழைவுத் தேர்வு பயிற்சி மய்யங்கள், மாணவர்களின் திறமைகளை வேட்டையாடும் கூடங்களாக மாறிவிட்டன. அவை நம்முடைய இளைஞர்களின் எதிர்காலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.
இந்த மய்யங்கள் தங்களது உள்கட்டமைப்பைத் திறன் மேம்பாட்டு மய்யங்களாக மாற்ற வேண்டும். இந்த மனப் பாடக் கலாசாரம், பயனில்லா பட்டங்களையும், அர்த்தமில்லாத நினைவுகளையும் மட்டுமே உருவாக்கும். மேலும் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான செயலாகும். இனிமேல் ராணுவத்தை கொண்டு நாடுகளைக் காலனிப்படுத்த முடியாது; தொழில்நுட்பத்தில் தலைமை ஏற்பதே புதிய தேசப்பற்றாக இருக்க முடியும். இந்திய இளைஞர்கள், இந்திய மக்களுக்காக சாதனைகளைப் படைத்து அதனை உலகமயமாக்க வேண்டும்’ என்று கூறினார்.
‘நீட்’ தேர்வைத் திணித்து அதற்குத் துணை செய்ய தேசியக் கல்விக் கொள்கையைக் கொண்டு வந்தது பா.ஜ.க. அரசுதானே!
மாணவர்களின் திறமையை வேட்டையாடுவது நுழைவுத் தேர்வு பயிற்சி மய்யங்களா? அல்லது அவர்களின் வணிகக் கொள்கைக்கு வழி வகுத்துள்ள ‘நீட்’, ‘கியூட்’ என்ற வரிசையாக நுழைவுத் தேர்வுகளைத் திணித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசா? குடியரசுத் துணைத் தலைவர் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக அல்லவா பேச வேண்டும் என்று கல்வி யாளர்களும், சமூக நீதிச் சிந்தனையாளர்களுக்கு கேள்வி எழுப்புகின்றனர்.