தாம்பரத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் அமைச்சர் தா.மோ. அன்பரசன் தகவல்

viduthalai

தாம்பரம், ஜூலை 12- தாம்பரத்தில் ரூ.110 கோடியில் கட்டப்பட்டு வரும் மாவட்ட தலைமை மருத்துவமனையை இம்மாத இறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறக்க உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

தாம்பரம் அரசு பொது மருத்துவமனை, குரோம் பேட்டையில் இயங்கி வருகிறது. இங்கு, சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் நாள்தோறும் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையை பல்வேறு வசதிகளுடன் தரம் உயர்த்த வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி, கடந்த 2021ஆம் ஆண்டு இந்த மருத்துவ மனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி, அதற்கான கட்டடம் கட்டுவதற்கு ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டது. பின்னர், தாம்பரம் சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில் தேசிய சித்த மருத்துவமனை வளாகம் அருகே உள்ள அரசு காசநோய் மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத் துறைக்கு சொந்தமான இடத்தில், சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியது.

6 தளங்கள், 4 அறுவை சிகிச்சை அரங்கம், 3 அவசர அறுவை சிகிச்சை அரங்கம், 111 தீவிர சிகிச்சை படுக்கை அறைகள், 289 படுக்கைகள் கொண்ட பொது பிரிவு, என மொத்தம் 400 படுக்கைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.  இந்த மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், புதிய மருத்துவமனை கட்டிடத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன்,   அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தாம்பரம் அரசு மருத்துவமனை ஏற்கனவே குரோம்பேட்டையில் 1971ம் ஆண்டு கலைஞர் திறந்து வைத்தார். 213 படுக்கைகள் உள்ள மருத்துவமனையில், அன்றாடம் 1500க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் மருத்துவ சிகிச்சை பெற்றனர். தாம்பரம் அரசு மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த திட்டமிட்டு அதற்காக ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2 லட்சத்து, 27 ஆயிரத்து, 318 சதுர அடியில் 6 தளங்களாக இந்த புதிய மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டது. இம்மாத இறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளார் என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *