‘‘அறிவை மயக்கும் அட்சய திரிதியை’’ புத்தக வெளியீடு
தூத்துக்குடி மாவட்டக் காப்பாளர் மா.பால் ராசேந்திரம் எழுதிய, “அறிவை மயக்கும் அட்சய திரிதியை” புத்தகத்தை குற்றாலம் பயிற்சிப் பட்டறையில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வெளியிட, பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். 70 ரூபாய் விலையுள்ள இப்புத்தகம் வெளியீட்டுச் சலுகையாக ரூபாய் 50 க்கு கிடைக்கும் என்று பயிற்சிப்பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் அறிவித்தார். அதைத்தொடர்ந்து, கழகப் பொருளாளர் வீ.குமரேசன், சமூக ஊடகப் பிரிவின் மாநிலத் தலைவர் அழகிரிசாமி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வா,நேரு, தலைமை செயற்குழு உறுப்பினர் இல.திருப்பதி, துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கும்பகோணம் மாவட்டக் காப்பாளர் தாராசுரம் இளங்கோவன், உடுமலை வடிவேல் ஆகியோர் புத்தகங்களை உரிய விலை கொடுத்து பெற்றுக் கொண்டனர்.
தென்காசி, ஜூலை 12 குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப்பட்டறையின் இரண்டாம் நாளில் தமிழர் – திராவிடர் – ஆரியர், திராவிடர் இயக்க வரலாறு, சமூக நீதி வரலாறு – பெரியாருக்குப் பின் உள்ளிட்ட தலைப்புகளில் வகுப்புகள் நடைபெற்றன.
எட்டு வகுப்புகள்
தென்காசி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் குற்றாலத்தில் உள்ள வள்ளல் வீகேயென் மாளிகையில் ஜூலை 10 முதல் 13 வரை நான்கு நாட்கள் நடைபெற்று வரும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறையின் இரண்டாம் நாளில் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடக்கூடிய, “பெரியார்” திரைப்படம் திரையிடல் உள்ளிட்ட 8 வகுப்புகள் நடைபெற்றன. மாணவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் வகுப்புகளில் பாடங்களை கவனித்தனர். நம்மை மற்றவர்கள் ஒழுங்குபடுத்தக் கூடாது. நாமே நம்மை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். அந்த ஒழுங்கையும் கட்டுப்பாடுகளையும் தான் இந்த பெரியாரியல் பயிற்சிப்பட்டறை மாணவர்களுக்கு வழங்குகிறது.
சீரிய தலைப்புகளும், சிறந்த வகுப்பாசிரியர்களும்!
இரண்டாம் நாள் முதல் வகுப்பில், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், ”தமிழர் – திராவிடர் – ஆரியர்”, துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், “திராவிடர் இயக்க வரலாறு (நீதிக்கட்சி – சுயமரியாதை இயக்கம் – திராவிடர் கழகம்)”, கழகப் பொருளாளர் வீ.குமரேசன், “சமூகநீதி வரலாறு – பெரியாருக்குப் பின்”, துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், “தந்தை பெரியாரின் மீதான அவதூறுகளுக்கு பதிலடி”, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வா.நேரு, “சமூகநீதிக்கான சவால்களும், தனியார் துறை இடஒதுக்கீடும்”, ‘‘பெரியார் திரைப்படம்”, பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், “பயிற்சி முகாமின் அவசியம்”, “தந்தை பெரியாரின் தொண்டில் விஞ்சி நிற்பது இனநலமா? பகுத்தறிவா? பெண் விடுதலையா?” எனும் தலைப்பில் நடைபெறவுள்ள பட்டிமன்றத்தின் பயிற்சி வகுப்பு என மொத்தம் 8 வகுப்புகள் காலை 9:30 மணிக்குத் தொடங்கி இரவு 9:30 வரையிலும் வகுப்புகள் நடைபெற்றன. பெரியார் திரைப்படத்தை மாணவர்களும் பார்வையாளர்களும் முழுமையாக கண்டு களித்தனர்.
பயிற்சி முகாமில் தெறித்த
கருத்து முத்துக்கள்!
கருத்து முத்துக்கள்!
தென்னிந்தியாவில் இருக்கும் மக்கள் தான் இராமாயணத்தில் குரங்குகள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்று பண்டிதர் நேரு தனது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆரியர் என்கிற பதம் இந்தியாவின் மூத்த குடி மக்களிடமிருந்து தங்களைப் பிரித்துக் காட்டுவதற்கு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. 1938 இல் மெட்ராஸ் பிரசிடென்சி (சென்னை) நடைபெற்ற பெண்கள் மாநாட்டில், ஹிந்தியை எதிர்த்துப் போராட பெண்களைத் தூண்டினார் என்று பெரியார் கைது செய்யப்பட்டார். இந்த மாநாட்டில்தான் பெண்கள் சமூகத்தால் ஈ.வெ.ராமசாமி என்ற பெயருக்கு பதிலாக இனிமேல், வாக்காலும், எழுத்தாலும் “பெரியார்” என்றே அழைக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1957 ஆம் ஆண்டு பெரியாருக்கு எடைக்கு எடை வெள்ளி நாணயம் கொடுக்கப்பட்ட மாநாட்டில்தான், “இந்தியா சுதந்திரம் அடைந்ததாகச் சொல்கிறார்கள். சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருந்தால் அது சுதந்திர நாடாகுமா?” என்று தந்தை பெரியார் கேள்வி கேட்டார். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே இல்லாத திராவிடர் கழகம் தான், இந்திய அரசியலமைப்பின் முதலாம் சட்ட திருத்தமான 15(4), 76 ஆம் சட்டத் திருத்தமான 9 ஆம் அட்டவனை பாதுகாப்பு, 93 ஆம் சட்டத் திருத்தமான 15(5) ஆகிய சமூகநீதியில் முக்கியமான மூன்று சட்டத் திருத்தங்களுக்கும் காரணம் எனப் பலத் தகவல்கள் மாணவர்களிடம் பகிரப்பட்டன.
பயிற்சி பெறும்
மாணவர்களுக்கான கடமைகள்!
மாணவர்களுக்கான கடமைகள்!
அறியாமை நோயிலிருந்து விடுபடவும், சுயமரியாதையுடன் கல்வியில் சிறந்து உரிய வேலை வாய்ப்புகளைப் பெற்று பயிற்சி பெறும் மாணவர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் கருஞ்சட்டைப் படையினர் இத்தனை பேரின் உழைப்பும், பொருளும் செலவழிக்கப்படுகிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட கருத்துகள் வகுப்புகளில் கற்றுக்கொடுக்கப்பட்டன.
‘‘பெரியாரியல் வாழ்வியல்” என்னும் தலைப்பில் இரா.ஜெயக்குமார், ”நம் குடும்பத்தினர் நமக்கே தெரியாமல் மூடநம்பிக்கையால் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், அதிலிருந்து விடுபட்டு மாணவர்கள் இளைஞர்கள் புரட்சிகரமான தந்தை பெரியார் சிந்தனையை ஏற்று தங்கள் பகுதிகளுக்கு சென்று களப்பணியில் ஈடுபட வேண்டும் என்றும், ஆர்எஸ்எஸ் – பிஜேபி, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற மதவாத அமைப்புகளால் நம்முடைய சமுதாய இளைஞர்கள், மாணவர்கள் பலியாகாமல் இருப்பதற்கும், அவர்களைத் தெளிவுபடுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் மாணவர்களுக்கு உண்டு என்றும் விளக்கமாக எடுத்து கூறி உரையாற்றினார். இறுதியாக, நடைபெற வேண்டிய பட்டிமன்றத்திற்காக மாணவர்களே ஒருவரோடு ஒருவர் கருத்துகளை பரிமாறிக்கொண்டு தயாராவதற்கான பயிற்சியை எடுத்துக் கொண்டனர்.
பயிற்சிப் பட்டறை சிறக்கப் பணியாற்றியவர்கள்!
தலைமை செயற்குழு உறுப்பினர் இல.திருப்பதி, பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் கே.டி.சி.குருசாமி, தென்காசி மாவட்டக் காப்பாளர் சீ.டேவிட் செல்லத்துரை, பொதுக்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட துணைச் செயலாளர் அ.சவுந்திரபாண்டியன், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, ஒரத்தநாடு திருநாவுக்கரசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன், மாவட்டச் செயலாளர் சண்முகம், மதுரை சுப்பய்யா, ராக்கு தங்கம் மற்றும் கழகத் தோழர்கள் பின்னணியில் பயிற்சி முகாம் சிறக்க பணியாற்றினர்.