மஞ்சு தூங்கும் மலைத்தொடர்கள். காலைக் கதிரவனின் கதிரொளிகள் பஞ்சு போன்ற மேகக் கூட்டங்களின் ஊடுருவியும், மறைந்தும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்த ஒரு இனிய காலை நேரம். வழமையான பணி நேரம். மருத்துவமனையில் அமர்ந்து நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வரிசையில் நோயாளிகள் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு 20 வயது பெண்ணும், 30 வயது பெண்ணும் உள்ளே வந்தனர். அந்த 20 வயது பெண் தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேசத் துவங்கினார்.
“சார், என் பேரு மகேஷ்வரி. வயது 20. அருகில் உள்ள குன்னக் கொம்பையிலே இருக்கிறேன். எனக்கு கொஞ்ச நாளா கீழ்த் தாடையிலே பின்பக்கம் லேசாக வீக்கம் வந்தது. மத்தபடி வலியோ எதுவுமோ இல்லை. ஆனால், வீக்கம் கொஞ்ச, கொஞ்சமாக பெரிதா ஆயிட்டே வருது.ஏறத்தாழ ஒரு வருடமா இந்த வீக்கம் சின்னதாகத் துவங்கி, இப்போ இவ்வளவு பெரிசா ஆயுடுச்சி. பாக்கறவங்க எல்லாம், “மூஞ்சிலே என்னா வீங்கி இருக்கு” என்று கேக்கறாங்க. இப்ப பெரிசாயிட்டதாலே அந்தப் பக்கம் மூஞ்சே கனமாகத் தெரியுது. வாயையும் பழயபடி முழுசா திறக்க முடியல. அதுதான் தொல்லையே தவிர வேறு பிரச்சினை ஏதுமில்ல. சொந்தக்காரர்களும், உறவினர்களும் “அம்ம கட்டு” என்று கூறி நாட்டு மருந்தெல்லாம் வாங்கிக் கொடுத்தனர். ஆனால், ஒன்னுமே கேட்கல. மந்திரிச்சு, தாயத்தெல்லாம் கட்டிப் பார்த்தோம். எதுவுமே கேட்கல. கட்டி பெரிசாயிட்டே வந்தது. அப்ப எங்க ஊருக்கு பக்கத்திலே இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கிட்டே காட்டினேன். அவர்தான் உங்களிடம் அணுப்பி வச்சாரு. எனக்கு இந்தக் கட்டி இன்னும் பெரிசாகி மூஞ்சையே அசிங்கமாக்கிடுமோன்னு பயமா இருக்கு. எப்படியாவது இதை சரி பன்னீடுங்கோ டாக்டர்” என்று பரிதாபமாகக் கூறினார்.
அவர் அருகில் இருந்த மற்றொரு பெண், “சார், நான் இவளோட அக்கா. கல்யாண வயசிலே மகேஷ் இருக்கா. இந்த குறையால் எங்க கல்யாணமே ஆகாமப் போயிடுமோன்னு பயமா இருக்கு. நீங்கதான் இதற்கு ஒரு வழி பண்ணணும்” என்று சோகத்தோடு கூறினார். நான் அவரை அமரச் சொல்லி சோதிக்கத் தொடங்கினேன். முகத்தின் இடது புறம் வீக்கம் போல் தோற்றத்தோடு, சற்று அழகின்றிதான் இருந்தது. அந்த வீக்கத்தை சோதிக்கத் தொடங்கினேன். இடது புறம் கீழ்நாடியின் கடைசியிலிருந்து வீக்கம் முன் கடைவாய் பற்கள் (Pre molars) இருக்கும் பகுதிவரை பரவி இருந்தது. வீக்கம் கெட்டியாக, கல்போன்ற நிலையில் இருந்தது.
கட்டி சீராக, மேலிருக்கும் மூடிய தோல் மென்மையாக இருந்தது. கீழ்த்தாடை எலும்பின் உட்புறம் நிண நீர் முடிச்சு (Lymph gland) இருக்கும். அது வாயின் உட்புறம் ஏதேனும் குறைபாடோ (புற்றுநோய் போன்ற குறைபாடோ), வாயின் உட்புற நோய்த் தொற்றோ இருந்தால் நிணநீர் முடிச்சு வீங்கி, வலியை உண்டாக்கும். மகேஷ்வரிக்கு அந்த முடிச்சு வீங்கியோ, வலியோ இல்லாமல் இருந்தது. வெளிப்புற சோதனைகளை முடித்து வாயின் உட்புறம் சோதிக்கத் தொடங்கினேன். வாயின் உட்புறமும் பற்களின் கீழ்ப்புறம், நாக்கின் பக்கவாட்டிலும் வீக்கம் பரவி இருந்தது. வீக்கம் கெட்டியாக இருந்தது.
நாக்கின் அசைவை கட்டுப்படுத்தும் அளவிற்கு வீக்கம் பெரிதாக இருந்தது. அந்த வீக்கம் கொஞ்ச காலம் இருந்ததாலும், வலியின்றி இருந்ததாலும் அது ஒருவகைக் கட்டியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தேன். முகத்தில் பலவகையான நீர்க்கட்டிகள் (Cysts), தீங்கற்ற கட்டிகள் (Briga), புற்று நோய்க் கட்டிகள் என்று பலவகை கட்டிகள் வரும். இதில் புற்று நோய்க் கட்டிகள் ஆபத்தானவை. முகத்தையே சிதைத்து விடும். வேகமாக பெரிதாகும். உயிர்க் கொல்லி கட்டிகளான இவை வாய், முகம் மட்டும் அல்லாமல் உடல் முழுதும் பரவிவிடும். கட்டி வரும் இடத்திற்கு அருகில் உள்ள நிணநீர் முடிச்சுகள் வீங்கி, வலியோடு, அடுத்துள்ள பகுதிகளோடு இணைந்து கெட்டியாகி விடும் (Swollen, tender & fixed Lymph nodes). மிகவும் ஆபத்தானவை இவ்வகைக் கட்டிகள். ஆனால், இந்தக் கட்டிகளும் ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால், அதை அகற்றுவதன் மூலம் முழுமையாக நன்றாக்கி விடலாம்.
தீங்கற்ற கட்டிகள் (Benign tumors) மெதுவாகப் பெரிதாகும், ஆபத்தற்றவை. முழுமையாக அறுவை மருத்துவம் செய்து நீக்கிவிட்டால் நோயாளி இயல்பு நிலைக்கு வந்து விடுவார்.
நீர்க் கட்டிகள் (Cysts) மெதுவாக வளரும். தாடை எலும்புகளில் வரும். ஆனால் எலும்பையே அரிக்கும் (Erode) தன்மையுடையவை. மருத்துவம் செய்தால் நன்றாகி விடும். ஒரு சிலவகை நீர்க்கட்டிகள் மீண்டும் வளரும் தன்மையுடையவை (Recurrance).
மகேஷ்வரியைச் சோதித்த பின் அது ஒரு கட்டியாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவு செய்தேன். இரத்தச் சோதனை, ஊடுகதிர் நிழற் படம் போன்ற ஆய்வுகள் செய்யப்பட்டன. ஊடுகதிர் நிழற்படம் அது ஒரு கட்டி என்று உறுதி செய்யும் வகையில் இருந்தது. கீழ்த்தாடை எலும்பின் ஒரு பகுதி அரித்து விட்டிருந்தது. ஆரம்ப ஆய்வுகள் முடிந்ததும், திசு ஆய்வு (Biopsy) செய்து கட்டியின் தன்மையை முடிவு செய்தேன். அது ஒரு நீர்க் கட்டி என்று ஆய்வு முடிவுகள் வந்தன. “அமிலோபிளாஸ்டோமா” (Ameloblastoma) என்ற வகையைச் சேர்ந்த கட்டி என்ற முடிவு வந்தது. அந்த வகை நீர்க்கட்டிகள் மெதுவாக வளரும். மிகப் பெரியதாக வளரக் கூடியவை. எலும்பை அரிக்கும் தன்மையுடையவை. ஆனால், மருத்துவம் செய்தாலும் மீண்டும் வரக்கூடியத் தன்மையுடையவை. அந்த தன்மையுடைய கட்டியானதால், எலும்பு முழுமையாக அரித்து விடுவதால், அந்த கட்டி இருக்கும் தாடை எலும்பை முழுவதும் அறுவை மருத்துவம் செய்து அகற்றிவிடுவதுதான் சரியான, பரிந்துரைக்கப்படும் மருத்துவமுறை.
மகேஷ்வரி 20 வயது இளம் பெண், திருமணமாகாதவர். முகத்தின் பாதிக்கப்பட்ட கீழ்த்தாடையின் முழு எலும்பின் இடது புறத்தில் அகற்றி எடுப்பதுதான் சரியான மருத்துவ முறை. அந்தப் பெண்ணிற்கு அந்த மருத்துவம் செய்தால் இடதுமுகம் சப்பையாகி விடும். முகத்தின் அழகே கெட்டுவிடும். திருமணம் கூட செய்யாத அந்தப் பெண்ணின் முகத்தை கோரப்படுத்தி – அவரின் வாழ்வே பாதிக்கப்பட்டு விடும் என்று, வேறு என்ன செய்யலாம் என்று சிந்தித்தேன்.
மீண்டும், மீண்டும் வரும் தன்மையுடையதால், வழக்கமான மருத்துவ முறையை மாற்றி வேறு முறை மருத்துவம் செய்ய முடிவெடுத்தேன். மற்ற உடல் இயக்கம் சீராக இருந்ததால் அறுவை மருத்துவத்திற்கு நாள் குறித்தேன். நோயாளியிடமும், அவருடன் வந்த அவர் அக்காவிடமும் நான் செய்யப்போகும் புதிய முறை மருத்துவத்தைப் பற்றி விளக்கினேன். இப்போதுள்ள கட்டியை அறுவை மருத்துவம் செய்து சீராக்கி விடுகிறேன். ஆனால், இரண்டு, மூன்று ஆண்டுகளில் அது திரும்ப வரும். அப்போது மீண்டும் அறுவை மருத்துவம் செய்ய வேண்டி வரும். இது போன்று மீண்டும், மீண்டும் செய்வதால் முக எலும்பை அகற்றும் நிலை ஏற்படாது. திருமணம் போன்ற சமூக வாழ்க்கை பாதிக்காது என்று கூறினேன்.
அவர்களும் நான் சொன்னதை தெளிவாகப் புரிந்து கொண்டு, அறுவை மருத்துவம் செய்து கொள்ள சம்மதித்தனர். வாயின் உள்புறம் அறுவை மருத்துவம் செய்ய முடிவெடுத்தேன். அது போன்று செய்வதால் முகத்தில் வடு இருக்காது. அறுவை மருத்துவம் வழமை போல் துவக்கப்பட்டது. வாயில் அறுவை மருத்துவம் செய்ய வேண்டியிருப்பதால் மூக்கு வழியாகவே மயக்க மருந்து குழாய், மூச்சுக் குழாய் செலுத்திப்பட்டது. வாயைத் திறந்து வைக்கும் கருவியைப் பொருத்தி, கட்டி இருந்த பகுதியை அடைந்தேன். பற்களின் கீழ்ப் பகுதியில் இருந்த சவ்வுப் படலத்தில் (Mucous Membrane) கீறி, கட்டியின் மேல் புறத்தில் உள்ள எலும்பை அடைந்தேன்.
அதில் ஒரு துளை போட்டேன். அந்த துளையை அகலமாக்கி, நீர்க்கட்டி இருக்கும் பகுதியை அடைந்தேன். மிகவும் மென்மையாக அந்தக் கட்டியை சிதைக்காமல் எலும்போடு ஒட்டியிருந்த அதன் உறையை மெதுவாகப் பிரித்தேன். அப்படியே கட்டியின் முழுப் பகுதியையும் எலும்பில் இருந்து அகற்றினேன். பின் சவ்வுப் பகுதியை தையலிட்டு மூடினேன். நோயாளியின் உடல் இயக்கம் சீராக இருந்ததால் மூச்சுக் குழாயிலிருந்து, மயக்க மருந்துக் குழாய் அகற்றப்பட்டது. நோயாளி அறுவை அரங்கத்திலிருந்து, படுக்கைப் பகுதிக்கு மாற்றப்பட்டார். ஒரு வாரத்தில் தையல்கள் அகற்றப்பட்டு, மகேஷ்வரி வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
ஓராண்டில் திருமணம் நடந்தது. நானும் சென்று வாழ்த்தினேன். ஆனால், எதிர் பார்த்தது போல் 4 ஆண்டுகளில் நீர்க்கட்டி மீண்டும் வந்து விட்டது. இம்முறை கணவரோடும், ஒரு சிறு குழந்தையோடும் மருத்துவமனைக்கு வந்தார். கட்டி சிறியதாக வரத் துவங்கி இருந்தது. மீண்டும் அறுவை மருத்துவம் செய்தேன். இதுபோன்று ஒவ்வொரு 3 ஆண்டுகள், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டி வரும். வந்து அறுவை மருத்துவம் செய்து கொண்டு, நலமடைந்து செல்வார். 8 முறை அவருக்கு இதே அறுவை மருத்துவம் செய்தேன். கடைசியாக பேரக் குழந்தையோடும், மகளோடும், கணவரோடும் 5 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் வந்தார். 20 வயதில் முதல் முறை வந்த மகேஸ்வரி, இப்போது 51 வயதான பெண்ணாக வந்தார்.
இந்த முறை நான் வழக்கமான அறுவை மருத்துவத்தை செய்யாமல், கீழ்த் தாடை எலும்பை அகற்றிவிடலாம் என்ற அறுவை மருத்துவம் செய்யலாம் என்றேன். மீண்டும், மீண்டும் பல முறை அறுவை மருத்துவம் செய்து சலிப்படைந்த அவரும் அதற்கு ஒத்துக் கொண்டார். இந்த முறை வழமையான ஏற்பாடுகளோடு நீர்க்கட்டியால் பாதித்த இடது புற கீழ்த்தாடை எலும்பை முழுமையாக அகற்றினேன். முகம் இடதுபுறம் சப்பையாகத் தெரியாமல் இருக்க எலும்பு அகற்றப்பட்ட இடத்தில் ஒரு எவர்சில்வர் பட்டையை (stainless steel) வைத்துப் பொருத்தினேன். நோயாளி அதிக அளவு சப்பையாகத் தெரியாத முகத்தோற்றத்தோடு, மகிழ்ச்சியாக வீட்டிற்குச் சென்றார்.
ஒரு இளம் பெண்ணிற்கு, திருமணம் என்ற சமூக ஒப்புதல் கிடைக்க இந்த முறை பயன்பட்டது. ஆனால் இந்த நோய்க்கு முதல் முறையாக செய்யப்பட்ட மருத்துவமுறை இது. ஆனால் இன்று பரவலாக செய்யப்படுகிறது. முன்னோடியாக இதை நான் செய்தது என்ற பெருமை எனக்குண்டு.
யாரும் செய்யாத செயல்களை, வழக்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல் புதிய சிந்தனையோடு, புத்தாக்கத்தோடு செய்து சாதனை புரிந்த தந்தை பெரியாரை நன்றியோடு நினைக்கிறேன். அவரே பல புதுமைகளுக்கும் முன்னோடி!