மதுரை, ஜூலை 11 கல்லூரி வளாகத்தினுள் ஜாதி அடையாளம் கொண்ட பேனர்கள் வைக்கக் கூடாது என உயர்நீதிமன்ற கிளை உத்தர விட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த பூமிநாதன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த விழாவில், மேனாள் நிர்வாகியும் தற்போது ஒரு கட்சி பிரமுகராகவும் இருப்பவை முன்னிலைப்படுத்தி, அவரது ஒளிப்படம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்களை மாணவிகள் அணியுமாறு கட்டாயப்படுத்தினர். பதாகைகள், சுவரொட்டிகள் போன்றவையும் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இது மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் வகையில் உள்ளது. கல்லூரி மாணவர்களின் அமைதி மற்றும் மனநிலையை பாதிக்காத வகையிலும், மாணவர்களை தொந்தரவு செய்யாத வகையிலும், கல்லூரி வளாகத்தினுள் சுவரொட்டிகள், பதாகைகள் போன் றவை வைத்து தனிநபர்களை முன்னி லைப்படுத்துவதை தடுத்து உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
ஜாதி அடையாள பதாகைகள் வைக்கக் கூடாது
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. கல்லூரி நிர்வாகம் தரப்பில், ஒவ்வொரு ஆண்டும் விழாவை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘எந்த கல்லூரியும் ஜாதி, மதம் என கல்வித்துறையால் அனுமதிக்கப்படாத நிகழ்வில் மாணவர்களை கலந்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது. கல்லூரி நிர்வாகம் தரப்பில், விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், மாணவர்களை கலந்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது. அது முழுக்க மாணவர்களின் விருப்பம் சார்ந்தது. கட்டாயப்படுத்தியது உறுதியானால், உயர் கல்வித்துறை இயக்குநர் கல்லூரிக்கு வழங்கப்படும் அரசு உதவியை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கல்லூரி வளாகத்தினுள் ஜாதிய அடையாளம் கொண்ட பேனர்கள் வைக்கப்படக்கூடாது. மீறினால் காவல்துறை மற்றும் கல்வித்துறை தரப்பில் கல்லூரி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம்’என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.