சென்னை, ஜூலை 11 திமுக கூட்டணியில் தான் மதிமுக இருக்கும். திமுக வெற்றிக்கு பாடுபடுவோம் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.
சென்னை மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் பூவிருந்தவல்லி வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட செயலர் மு.பாபு தலைமை வகித்தார். பூவிருந்தவல்லி நகரச்செயலர் சங்கர் வரவேற்றார். இதில், மதிமுக பொதுச்செயலர் வைகோ, முதன்மைச் செயலர் துரை வைகோ எம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. கூட்டணியில் மதிமுக நீடிக்கும்
இந்தக் கூட்டத்தில் வைகோ பேசியதாவது, “நம்மை குறிவைத்து தாக்குகிறார்கள். நமது இயக்கம் இருக்க கூடாது என நினைக்கிறார்கள். மதிமுக காணாமல் போய்விட்டது, கரைந்து போய்விட்டது, வைகோ அரசியல் முடிந்துவிட்டது என செய்தி போடுகிறார்கள்.
சாத்தூரில் நடந்த கூட்டத்தில் 15 நிமிடம் மின்சாரம் வரவில்லை. 4 மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் காற்றுக்காக வெளியே போனார்கள். அப்போது காலியான நாற்காலிகளை பார்த்து பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்தார்கள். நான் பத்திரிகையாளர்களுக்கு விரோதி அல்ல. பத்திரிகையாளர்களை மிசாவில் அடைக்கலாம் என்ற கருத்தை சட்டத்தில் இருந்து அகற்றுங்கள் என கூறினேன்.
பத்திரிகை சுதந்திரத்திற்காக நான் பாடுபட்டவன். அரங்கம் நிறைந்த போது ஏன் ஒளிப்படம் எடுக்கவில்லை? எனவே அரங்கத்தை விட்டு வெளியே செல்லுங்கள் என கூறினேன். உடனடியாக பத்திரிகையாளர்களிடம் தொண்டர்கள் வாக்குவாதம் செய்தார்கள். மல்லை சத்யா எதிரிகள், துரோகிகளோடு நமது கட்சியை அழிக்க வேண்டும் என வெளியே போனவர்களோடு தொடர்பு வைத்திருக்கிறார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது மதிமுக. அதைத் தடுத்து நிறுத்தியவர் பெயர்தான் வைகோ. திமுக கூட்டணியில் தான் மதிமுக இருக்கும், திமுக வெற்றிக்கு பாடுபடுவோம் இது என் கட்டளை. இவ்வாறு வைகோ பேசினார்.