மகளிரும் – எதிர்ப்புரட்சியும் (3)
“கணவன் இறந்தவுடன், மனைவி தூய தனி வாழ்க்கை வாழ விரும்பினால் அவளுடைய நகைகள், சீதனம் மட்டுமின்றிச் சுல்கத்தின் எஞ்சிய பகுதியையும் உடன்பெறுவதற்கு அவள் உரிமையுடையவள். இவற்றைப் பெற்றபின் மறுமணம் செய்துகொண்டால், வட்டியுடன் அவற்றைத் திருப்பிக்கொடுக்க வேண்டும். ஒரு பெண் மறுமணம் செய்துகொள்ள விரும்பினால் மறுமணம் செய்யும் நேரத்தில் மாமனாரோ கணவனோ இருவருமோ கொடுத்தப் பொருள்கள் அவளுக்குத் தரப்பட வேண்டும். அவள் தான் மறுமணம் செய்ய அனுமதிக்கப்படும் காலம் பற்றி நீண்ட காலம் பிரிந்திருக்கும் கணவனைப் பற்றிய பகுதியில் கூறப்படும். மாமனாரின் தெரிந்தெடுத்த நபரையன்றிப் பிறிதொருவரை ஒரு கைம்பெண் மறுமணம் புரிந்தால்,மாமனாரும் கணவனும் அவளுக்குக் கொடுத்த பொருள்களை இழந்துவிடுவாள். உறவினனைத் திருமணம் செய்யும்பொழுது எடுத்துச்சென்ற சொத்தை அப்பெண்ணின் உறவினர்கள் பழைய மாமனாருக்குத் திரும்பக் கொடுத்தல் வேண்டும். தம் பாதுகாப்பில் நியாயமான முறையில் ஒரு பெண்ணை வைத்துக் கொள்பவர் அவள் சொத்தையும் பாதுகாக்க வேண்டும். மறுமணம் செய்தபின் இறந்த கணவனின் சொத்துக்களில் மனைவி உரிமை கொண்டாட இயலாது.
“தூய தனி வாழ்வு வாழ்ந்திட்டால், கணவன் சொத்தை மனைவி அனுபவிக்கலாம். மகன் அல்லது மகள்களை உடைய பெண், மறுமணம் செய்தபின், தன் சீதனச் சொத்தைக்கூட விருப்பம் போல் பயன்படுத்த முடியாது. அவளது அச்சொத்தைப் புதல்வர்களே பெறுதற்குரியர்.”
“மறுமணம் செய்துகொண்டபின், முந்தைய கணவனின் குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும் என்று காரணம் காட்டி, தன் சொத்தை அனுபவிக்க முற்படின் அச்சொத்தை அவர்கள் பேருக்கு மாற்றிட வேண்டும். பல கணவருடன் பல மகன்களைப் பெற்றவளாயின் கணவர்களிடமிருந்து பெற்ற சொத்துகளை அதே நிலையில் பராமரித்து வருதல் வேண்டும். முழுச் சுதந்திர உரிமையுடன் அனுபவிக்குமாறு அளிக்கப்பட்ட சொத்துகளைக்கூட மறுமணம் செய்துகொண்ட ஒரு பெண் தன் மகன்கள் பெயருக்கு மாற்றிட வேண்டும்.”
”மாண்ட கணவனுக்கு நம்பிக்கையுடன் தூயவாழ்வு நடத்தும் கைம்பெண், தன் ஆசானின் பாதுகாப்பில், தான் வாழ்நாள் வரை அச்சொத்தை அனுபவித்து வரலாம். ஏனென்றால் அவளுக்கு எத்தகைய இடர்களும் நேரிடக் கூடாது என்பதற்காகவே இந்தச் சொத்து அவளுக்கு உரிமையாக்கப்பட்டுள்ளது. அவரது மரணத்திற்குப் பின் அச்சொத்து அவரது தாயாதிகளைச் சேரும். கணவன் உயிருடனிருந்து மனைவி இறந்துவிட்டால், அவளது புதல்வர்கள், புதல்விகளுக்கு இடையே அவளது சொத்து பகுத்து வழங்கப்படுதல் வேண்டும். புதல்வர்கள் இல்லையென்றால் சொத்து புதல்விகளைச் சேரும். மகளும் இல்லையென்றால் கணவன் அவளுக்குக் கொடுத்த பரிசத் தொகையை அச்சொத்திலிருந்து எடுத்துக் கொள்வான், அவளது உறவினர் தாம் அவளுக்குக் கொடுத்த சீதனங்களையும் பரிசுகளையும் திருப்பி எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு பெண்ணின் சொத்துரிமைகள் நிர்வகிக்கப்படுகிறது.”
மறுமணம் செய்துகொண்டபின், முந்தைய கணவனின் குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும் என்று காரணம் காட்டி, தன் சொத்தை அனுபவிக்க முற்படின் அச்சொத்தை அவர்கள் பேருக்கு மாற்றிட வேண்டும். பல கணவருடன் பல மகன்களைப் பெற்றவளாயின் கணவர்களிடமிருந்து பெற்ற சொத்துகளை அதே நிலையில் பராமரித்து வருதல் வேண்டும். முழுச் சுதந்திர உரிமையுடன் அனுபவிக்குமாறு அளிக்கப்பட்ட சொத்துகளைக்கூட மறுமணம் செய்துகொண்ட ஒரு பெண் தன் மகன்கள் பெயருக்கு மாற்றிட வேண்டும்
“சூத்திர, வைசிய, சத்திரிய, பார்ப்பன வர்க்கத்தைச் சார்ந்த மனைவிகள், குழந்தைகள் பெறவில்லை என்றால் முறையே ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு ஆண்டுகள் வரை, குறுகிய காலம் பிரிந்து சென்ற கணவர் வருகைக்காகக் காத்திருத்தல் வேண்டும். குழந்தைப் பெற்றவராயின் பிரிந்து சென்ற கணவர் வருகைக்காக ஓராண்டு காலத்திற்கு மேல் காத்திருக்க வேண்டும். அவளது வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகள் செய்து தரப்படுமானால், மேலே குறிப்பிட்டக் காலத்தைப்போல் இரண்டு மடங்கு காலம் காத்திருக்க வேண்டும். இத்தகைய வாழ்க்கை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றால் பொருள் வசதியுள்ள அவர்களுடைய உறவினர்கள் அவர்களை நான்கு முதல் எட்டாண்டுகள் வரை பாதுகாத்தல் வேண்டும். பிறகு அவர்கள் அந்தப் பெண்களுக்குத் தாங்கள் அனைத்துப் பொருள்களையும் திரும்ப எடுத்துக்கொண்டு அவர்களை மறுமணம் செய்துகொள்ள விட்டுவிட வேண்டும். அயல் நாட்டில் கல்வி கற்கும் பார்ப்பனக் கணவரென்றால், குழந்தைப் பெறாத மனைவி அவன் வருகைக்காகப் பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டும். குழந்தை பெற்றவளாயின், பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். கணவன் அரசனின் ஊழியனாயின் மனைவி அவனுக்காகச் சாகும் வரை காத்திருக்க வேண்டும். இனவிருத்தியைக் கருத்தில் கொண்டு கணவனுடைய கோத்திரத்தைச் சேர்ந்த வேறொருவனுக்குக் குழந்தைகள் பெற்றாலும், அவளை வெறுத்தலாகாது. தலத்தில் இல்லாத கணவனின் மனைவிக்கு பராமரிப்பு இல்லை என்றாலும், அவளைப் பாதுகாக்கக்கூடிய பணக்கார உறவினர்கள் இல்லை என்றாலும், தான் நேசிக்கும் தன்னைப் பாதுகாத்துத் துயர்தீர்க்கும் வேறொருவனை அவள் மறுமணம் செய்துகொள்ளலாம்.”
மனுவைப் போலன்றி, மணமான பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம் வழங்குவதில் பெரிதும் கவனம் செலுத்தப்பட்டது. மனைவியின் சொத்து, பராமரிப்பு பற்றி, கவுடில்யரின் அர்த்த சாத்திரம் தெளிவாகக் கூறுகிறது.
“பராமரிப்பு வழிவகை, அணிகலன்கள் ஆகியவை ஒரு பெண்ணுக்குரிய சொத்துக்களாகும். ஈராயிரம் பணத்திற்கு மேல் மதிப்புள்ள பராமரிப்புச் சொத்து (அவள் பெயரில்) எழுதப்பட வேண்டும். அணிகலன்களுக்கு இவ்வரையறை ஏதுமில்லை. தலத்தில் இல்லாத கணவன் பராமரிப்புக்கு ஏற்பாடு செய்யவில்லை என்றால் தனக்கும் மகன், மருமகள் ஆகியோருக்கும் ஆகும் வாழ்க்கைச் செலவுக்கு அச்சொத்தைப் பயன்படுத்துவது தவறாகாது. இயற்கைப் பேரிடர்கள் நேரும்போழுது, பஞ்சமும் நோயும் மிகும்பொழுது ஆபத்துகளைத் தவிர்த்திட அறச் செயலாகக் கணவனும்கூட அதனைப் பயன்படுத்தலாம். இரட்டைக் குழந்தைப் பெற்ற தம்பதியினரும் ஒருவருக்கொருவர் உடன்பாட்டின் பேரில் இச்சொத்தைப் பயன்படுத்தத் தடை ஏதுவுமில்லை. முதல் நான்கு வகைத் திருமண மரபுகளின்படி திருமணமாகி மூன்றாண்டுகள் கழிந்த தம்பதியர் இச்சொத்தைப் பயன்படுத்துதல் குற்றமன்று. ஆனால் கந்தருவ, அசுரத் திருமண முறைப்படி மணம் செய்துகொள்ளும் தம்பதியர் இதைப் பயன்படுத்தினால் வட்டியுடன் திருப்பிக்கொடுத்தல் வேண்டும். இராட்சச, பைசாச முறைத் திருமணமாயின் இச்சொத்தைப் பயன்படுத்துவது திருட்டு எனக் கருதப்படும். திருமணம் பற்றிய கடமைகள் இவ்வாறு வரையறுக்கப்படுகின்றன.”
“காலவரையற்ற பராமரிப்புப் பெறும் தகுதியுடையவர்களுக்குத் தேவையான உணவு, உடை முதலியனவும், பராமரிப்புத் தரவேண்டியவனின் வருவாய்க்கேற்ற வாழ்க்கைப் பணமும் பெறும் உரிமை உண்டு. உணவு, உடை முதலியவற்றிற்குரிய தொகை, அதில் பத்திலொரு பங்கு கூடுதல் தொகையுடன் அளிக்க வேண்டிய காலம் வரையறைக்கு உட்பட்டதாயின் பராமரிப்புத் தரவேண்டியவனின் வருவாய்க்கேற்ற ஒரு குறித்தத் தொகையும் அளித்தல் வேண்டும். தன் கணவன் மறுமணம் செய்துகொள்வதற்காக அனுமதிக்கப்பட்ட சுல்கம், சீதனம், இழப்பீடு பெறவில்லை என்றாலும், மேற்கூறியபடியே பராமரிப்பு அளிக்கப்பட வேண்டும். மாமனாரின் குடும்பத்தைச் சார்ந்த ஒருவரின் பாதுகாப்பில் அவள் வாழ்ந்துவந்தால், கணவனிடம் பராமரிப்பு கோருதல் இயலாது பராமரிப்புப் பற்றிய தீர்வுகள் இவ்வாறு கூறப்பட்டுள்ளன.”
தாக்குதலுக்கோ அவதூறுக்கோ உள்ளான ஒரு மனைவி, கணவன் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாமென்னும் கவுடில்யர் காலத்து விதி வியப்பாக இருக்கிறதன்றோ!
சுருங்கக் கூறின், மனுவிற்கு முந்தைய நாட்களில், பெண் சுதந்திரமான, ஆடவனுக்கு இணையான பங்காளியாயிருந்தாள்.
மனு ஏன் பெண்ணைத் தாழ்ந்த நிலைக்குத் தள்ளினார்?
அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள்
‘இந்து மதம்: வரலாறு – ஆய்வு’ (தொகுதி 12) =நூலிலிருந்து