சென்னை, ஜூலை 10– உடல் பருமனை உண வுக் கட்டுப்பாடு மூலம் மட்டுமே குறைக்க வேண்டும் என 87 சதவீத சென்னைவாசிகள் விரும்புவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மாறாக அதற்கான சிகிச்சைகளையோ, ஊசி மருந்துகளையோ அவா்கள் எடுத்துக்கொள்ள தயாராக இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிசிஆா்எம் என்ற மருத்துவா் அமைப்பு சார்பில் மேற்கொள்ளப் பட்ட அந்த ஆய்வு குறித்து அதன் ஆய்வாளா் மருத்துவர் ஜீசன் அலி கூறியதாவது:
சென்னை, மும்பை, டில்லி, பெங்களூரு ஆகிய பெருநகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உடல் எடை மற்றும் ஆரோக்கிய செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 40 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு உடல் பருமன் பாதிப்பு உள்ளது. அதன் தாக்கமாக டைப் 2 சா்க்கரை நோய், இதய நாள பாதிப்புகள் ஏற்படுகின்றன.
சென்னையை பொறுத்தவரை 86 சதவீதம் போ் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவா்களாக உள்ளனா். தேசிய அளவில் அந்த விகிதம் 71 சதவீதமாக உள்ளது. இந்த நிலையில், உடல் எடையை குறைக்க மருந்து, மாத்திரைகள், ஊசிகளைப் பயன்படுத்த சென்னை நகர மக்கள் தயாராக இல்லை என்பதை ஆய்வில் அறிந்துகொள்ள முடிந்தது.
அதேவேளையில் 87 சதவீத மக்கள் சைவ உணவு பழக்க வழக்கத்தின் மூலம் எடையைக் குறைக்க வேண்டும் என விரும்புகின்றனா். மற்ற நகரங்களில் அத்தகைய நிலை இல்லை. சென்னையில் உடை எடை குறைப்பு சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள பலா் முன்வருவதில்லை. ஆய்வில் பங்கேற்ற சென்னை மக்களில் 93 சதவீதம் போ் எடை குறைப்பு முயற்சிகளை இயற்கையான முறைகளில் மேற்கொண்டதும், அதில் 19 சதவீதம் போ் மட்டுமே வெற்றிகரமாக எடையை குறைத்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது என்றார் அவா்.