இந்தியாவின் தேசிய ரசாயன ஆய்வகமும் (NCL) அயர்லாந்திலுள்ள லிமெரிக் பல்கலையும், இணைந்து ஒரு அசத்தலான கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளன. ‘குமிழிகளை உருக்குதல்’ (cavitation) என்ற வேதியியல் விந்தையைப் பயன்படுத்தி, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்திருக்கிறார்கள்.
அதாவது, கழிவு நீரிலிருந்து உரம் தயாரிப்பதுடன், நீரை சுத்திகரிக்கும் வேலையையும் சேர்த்தே செய்கிறது இந்த கண்டுபிடிப்பு.
இந்த அமைப்பில், ‘சுழல்- டையோடு ஹைட்ரோடைனமிக் கேவிடேஷன் ரியாக்டர்’ என்ற ஒரு கருவி பயன்படுகிறது. இதில் உள்ள சுழலும் கூம்பு, தண்ணீரில் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறிய குமிழிகளைச் சிதைக்கிறது.
நீர்க்குமிழிகள் உடையும்போது, அந்த இடத்தில் மிக அதிக வெப்பமும், அழுத்தமும் மைக்ரோ வினாடி நேரம் உருவாகிறது. இந்த வெப்பமும், அழுத்தமும், காற்றிலுள்ள நைட்ரஜனையும், நீரையும் அம்மோனியாவாக மாற்றுகிறது. மேலும், நீரில் கார்பன் டை ஆக்சைடு இருந்தால், சிறிதளவு யூரியாவும் வேதி வினை மூலமாக உருவாகிறது. இதற்குக் கூடுதலாக வெப்பமோ, அழுத்தமோ, எந்த வினையூக்கிகளோ தேவையில்லை என்பதுதான் இதன் சிறப்பு.
பிரவீன் பாட்டீல் தலைமையிலான குழுவினர், இதே கருவியை வைத்து தொழிற்சாலைக் கழிவுநீரில் இருந்து 80 சதவீதத்திற்கும் அதிகமான அம்மோனியா மற்றும் நைட்ரஜனை வெற்றிகரமாக நீக்கியுள்ளனர்.
இதன் அர்த்தம் என்னவென்றால், இந்தக் கருவி மாசுபட்ட தண்ணீரையும் சுத்தம் செய்யும்; அதே நேரத்தில், விவசாயத்திற்குத் தேவையான உரத்தின் மூலப்பொருட்களையும் உற்பத்தி செய்யும் என்பது தான்.