பரந்தூர் விமான நிலையத்திற்கு 17.52 ஏக்கர் நிலம் பதிவு நிலம் கொடுத்த 19 பேருக்கு ஒரே நாளில் ரூ.9.22 கோடி இழப்பீட்டுத் தொகை

viduthalai
2 Min Read

சென்னை, ஜூலை 10 பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலம் எடுப்பிற்கு சம்மதம் தெரிவித்து 17.52 ஏக்கர் பரப்பு நிலத்தை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு  19 உரிமையாளர்கள் நேற்று பதிவு செய்து கொடுத்தனர். இந்த நில உரிமையாளர்கள் இழப்பீடு தொகை ரூ.9.22 கோடி அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக காஞ்சிபுரம் ஆட்சியர் தெரிவித்தார்.

இரண்டாவது விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அதிகரித்து வருவதால், கூடுதல் பயணியர் விமானம் மற்றும் சரக்கு விமானங்களை கையாளுவதில் வருங்காலத்தில் சிக்கல் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில், சென்னையில் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டன. இறுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் அறிவித்தன. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மறுபுறம் விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளது. பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு திட்ட செலவு ரூ.29,150 கோடி என கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் ‘டிட்கோ’ நிறுவனம் மூலமாக இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. பரந்தூர் விமான நிலையம் பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் 5,750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஏகனாபுரம், நாகப்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் மொத்தமாக இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்காக விமான நிலையத்திற்காக முதற்கட்டமாக சுமார் 3331.25 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக நிலம் வழங்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இழப்பீட்டுத் தொகை

அதன்படி, பரந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் உள்ள நிலங்களுக்கான விலை ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.2.57 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிலத்தின் வகை, தரம், பயன்பாடு, சந்தை மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலைகள் வேறுபடும். இந்த நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. நிலம் இழக்கும் மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள், வேலைவாய்ப்புகள், புதிய வீட்டுத் திட்டங்கள், மறுவாழ்வாதார வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தமிழ்நாடு  அரசு தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளன.

விமான நிலையத்திற்கு தேவையான நிலம் வழங்குவதற்கான பத்திரப்பதிவு நேற்று (9.7.2025) முதல் தொடங்கியது.   நிலம் எடுப்பிற்கு சம்மதம் தெரிவித்து நேற்று 17.52 ஏக்கர் பரப்பு நிலத்தை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு 19 உரிமையாளர்கள் பதிவு செய்து கொடுத்தனர். இந்த நில உரிமையாளர்கள் அனைவருக்கும் நேற்றே நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகை ரூ.9.22 கோடி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டது என காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *