சென்னை, ஜூலை 9- தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தவர்கள் என சென்னையில் கடந்த ஒரே ஆண்டில் 1,002 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி சென்னையில் அவரது வீட்டருகே கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சென்னையின் புதிய காவல் ஆணையராக அருண் கடந்த ஆண்டு ஜூலை 8ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையை முடுக்கிவிடப்பட்டது. கொடுங்குற்றங்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தவர்கள், தொடர்ச்சியாக திருட்டு, நகை பறிப்பு, வழிப்பறி, பண மோசடி குற்றங்களில் ஈடுபட்டவர்கள், போதைப் பொருள் வியாபாரிகள், சைபர் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் உட்பட பல்வேறு வகையான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
1,002 பேர் குண்டர் சட்டத்தில் கைது
மேலும், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு ஜூலை 8ஆம் தேதி முதல் இந்த ஆண்டு ஜூலை 8 வரையிலான ஓராண்டில் 1,002 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, குண்டர் தடுப்பு சட்ட அலுவலகப் பிரிவில் பணிபுரிந்து வரும் கண்காணிப்பாளர் அய்யப்பன் உள்ளிட்ட காவல் குழுவினரை காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி அளித்தார்.
முன்னதாக, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி நாகேந்திரன் உள்ளிட்ட 26 பேர் மீதும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.