நம் உரிமைகளை மீட்டெடுக்க, பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க மீண்டும் ‘திராவிட மாடல்’ அரசே தேவை! அதற்காக உழைப்பீர்! உழைப்பீர்!!

viduthalai
5 Min Read

* ‘திராவிட மாடல்’ அரசு தமது அரும்பெரும் சாதனைகளால் மக்கள் ஆதரவு என்ற பெரும்பலத்துடன் நிற்கிறது!

* இதனை வீழ்த்த தமது சூழ்ச்சிகளாலும், பண பலம் கொண்ட முதலாளித்துவம், ஊடக பலத்துடனும் துடிக்கிறது.பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.!

* 99 ஆண்டுகளுக்குமுன் நீதிக்கட்சியை ஆதரித்து தந்தை பெரியார் வாலிபர்களுக்குச் சொன்ன கட்டளைகளை நினைவு கூர்வோம்!

‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகள் மகத்தானவை. வரும் தேர்தலில், அதனை வீழ்த்த பல்வேறு சூழ்ச்சிகள், பண பலம், பத்திரிகைப் பலம் கொண்டு, பாசிச சக்திகள் முனையும் – அதற்கு இடந்தராமல், இனி ஓராண்டுக்கு தி.மு.க. ஆட்சியை மீண்டும் கொண்டு வர அயராது உழைக்கவேண்டும்  என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

‘‘வரப் போகும் தேர்தல்களில் உங்கள் சமூகத்தின் சுயமரியாதைக்குப் பாடுபடுபவருக்கு வெற்றித் தேடிக் கொடுங்கள்.

தந்தை பெரியார் கூறிய அந்தத் ‘தபசு!’

பார்ப்பன வாலிபர்கள் தேர்தலில் எவ்வளவு வேலை செய்கிறார்கள் என்பதைப் பாருங்கள். பார்ப்பன ஆதிக்கத்திற்குப் பாடுபடுபவர்க்கு அவர்கள் தங்கள் தங்கள் படிப்பை விட்டுவிட்டுக்கூட, ஓட்டு வாங்கிக் கொடுக்கப் பாடுபடுகிறார்கள். ஆதலால், நீங்களும், அவர்களைப் போலவே வீதி வீதியாய், ஊர் ஊராய்த் திரிந்து, உங்கள் சுயமரியாதைக்கு வெற்றி அளியுங்கள்.

படுக்கையிலிருந்து எழும்போது,  இன்று உங்கள் சுயமரியாதைக்கு என்ன செய்வது? என்று யோசியுங்கள்; ஒன்றும் செய்யாத நாளை, வீணாய்ப் போனதாகவும், உங்கள் வாழ்நாளில் ஒன்று குறைந்ததாகவும் நினை யுங்கள்.

ஒவ்வொரு வாலிபரும் தங்கள் கடமையை உண ருங்கள்.

உங்கள் சுயமரியாதைக்கு உங்கள் உயிரைக் கொடுக்கும் பாக்கியத்தை அடைய ‘தபசு’ இருங்கள்!!’’

– இது தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் இயக்கம் (ஜஸ்டிஸ் கட்சி) கண்ட தலைவர்களில் முக்கியமானவரான சர். பிட்டி தியாகராயர் நினைவுச் சின்னக் கூட்டத்தில் 1926, ஆகஸ்ட் மாதம் ஆற்றிய சொற்பொழிவின் இறுதிப் பகுதி (‘குடிஅரசு’, 12.9.1926.).

நம் பகுத்தறிவுப் பகலவன் (சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு) ஆற்றிய உரை இன்றும் தேவைப்படுகிறது, இல்லையா?

திராவிட இளைஞர்களே, மாணவப் பட்டாளங்களே,

நன்கு சிந்தித்துப் பாருங்கள்.

அன்று ‘சத்தியமூர்த்திகள்’ உருவகத்தில் பார்ப்பன அவாளுக்கு வால் பிடித்துக் கொத்தடிமைகளாக, மானமும், அறிவும் தேவைப்பட்ட திராவிட இனத்தின் விபீடணப் பட்டாளங்களும் தேர்தல் களத்தில் நின்றன!

இன்று காட்சிகள் மாறினாலும், புதிய கட்சிகள் வேடத்திலும், சமதர்மத்தை ஒழித்து, மனுதர்மத்தை நூற்றுக்கு நூறு உண்டாக்க, நவீன விபீடணப் பட்டாளங்களின் துணையுடன் தேர்தலில் பித்த லாட்டங்களையே பெரிதும் நம்பி, வாக்காளர்கள் ஆதரவு இல்லாவிட்டாலும், ‘‘ஜெயிப்போம்’’ என்று வடபுலத்தில் காட்டும் வித்தை தமிழ்நாட்டில் செலா வணி ஆகவில்லை என்று தெரிந்ததால், தங்களிடம் உள்ள சில அரசியல் ஆயுங்களைக் காட்டி, மடியில் கனமுள்ள கட்சிகளை மிரட்டி, தங்களது கூட்டணிக்கு வரவழைத்து, எதிர்க்கட்சியாகவும், ஆளுங்கட்சியாகவும் 34 ஆண்டுகள் இருந்த ஒரு கட்சியை அடமானப் பொருளாக்கி, தேர்தல் களம் காணத் திட்டமிடுகிறார்கள்.

எதிரிகளின் சூழ்ச்சிகள்

தன்னுடைய அரும்பெரும் சாதனைகள் என்ற பலத்தை நம்பியே, மகத்தான பேராதரவுடன் மக்கள் மத்தியில் தலைநிமிர்ந்து நிற்கிறது ‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்தும் தி.மு.க.!

மதவெறி, ஜாதி வெறி மூலதனத்தோடு  மட்டு மல்லாமல், பதவி வெறி, பலவீனம் உடையவர்களை எல்லாம் பிளந்தும், பிரித்தும், நேரிடையாகவும், மறைமுகமாகவும் தன் சூழ்ச்சி வேலைகளை செய்து வருகிறது பி.ஜே.பி.

இதனை முறியடித்து, நாசகார பாசிச சக்திகளுக்கான பீடல்ல தமிழ்நாடு என்பதை விளக்கிட, ஆயத்தமாவீர்!

இது வெறும் தேர்தல் அல்ல!

இது வெறும் அரசியல் தேர்தல் அல்ல; இனிவரும் நமது ஒடுக்கப்பட்ட சமூகங்களும், சிறுபான்மையர் என்று அழைக்கப்படும் நம் மக்களும் அவரவர் உரிமைகளைப் பெற, நமது ஒப்பற்ற முதலமைச்சர்,சாதனைகளால் மகுடம் தறிக்கும் மாமனிதரின் நல்லாட்சி மீண்டும் தொடர வேண்டாமா?

மாநிலங்களையே இந்திய அரசியல் வரைபடத்தில் அழித்து, ஒற்றை ஆட்சியாக்கிட, ஓராயிரம் சூழ்ச்சிகளை – தம்மால் அனுப்பப்பட்ட ஆளுநர்கள், அரசியல் கூலிப் பட்டாளங்களைத் தம் வயப்படுத்தியும், சகல வித்தைகளையும் செய்து பார்க்கும்  நிலைக்கு இறங்கிவிட்டனர்!

தமிழ்நாட்டு வாக்காளர்களின் வாக்குகளைப் பறிக்க முயற்சிக்கின்றனர். அவர்களது பலமோ கொஞ்ச நஞ்ச மல்ல; குறைத்து மதிப்பிடக்கூடாது.

உண்மைகளை மறைத்தும், திரித்தும் திட்ட மிட்டு களத்தில் இறங்கிடும் வேலை என்பது அவர்க ளுக்குப்பழக்கமானதே!

நம் எதிரிகள் யார்?
அவர்களின் ஆதரவாளர்கள் யார்?

  1. அவர்களிடம் பல பெருமுதலாளிகள், கார்ப்பரேட் முதலாளிகள், பண பலம் (Money Power),
  2. கலவரம், காலித்தனம், கயமைச் செயல்களில் ஈடுபட்டு, தமிழ்நாடு அரசுக்குக் களம் ஏற்படுத்த ஆயத்தம் (Muscle Power)
  3. பெருமுதலாளிகள், ஊடகச் சக்திகள் (Media Power)
  4. திரிசூலத்தின் மூன்று முனைகளைப் (ஒரு முனை, அமலாக்கத் துறை, இரண்டாவது முனை வருமான வரித் துறை, மூன்றாவது முனை சி.பி.அய்) பயன்படுத்தி, எதிர்ப்பவர்களை மிரட்டிப் பணிய வைக்கும் ஊரறிந்த ஆயுதங்கள். (Ruling Power).

ஏற்கெனவே இம்மாதிரி பட்டாளங்களுடன் முந்தைய தேர்தல்களில் ஈடுபட்டு, கூட்டணி வைத்த போதும், தமிழ் மண் – பெரியார் மண்ணான திராவிட பூமியானதால், முற்றிலும் அவற்றை நிராகரித்து, நாடாளுமன்றத் தேர்தலில் 40–க்கு 40 இடங்களில் வெற்றி பெற்றது இந்தியா கூட்டணி.

இனி, எவ்வளவு மூர்த்தன்யமான தங்களது அரசியல் போர் – தேர்தலை நடத்தி, எதைச் செய்தாவது தி.மு.க. ஆட்சியை அகற்றிட ஆரிய ஆர்.எஸ்.எஸ். சக்தி, அவர்களது அடிமைகளாகிவிட்டவர்களும் அணி திரண்டு, அவர்களுக்கு இடப்பட்ட பணியைச் செய்ய ஆயத்தமாகிவிட்ட நிலை.

99 ஆண்டுகளுக்குமுன் தந்தை பெரியார் கூறியது இன்றைக்கும் பொருந்தும்!

தந்தை பெரியார் 99 ஆண்டுகளுக்கு முன் அதே திராவிடர் ஆட்சியை, இதே நோக்கத்தோடு அன்று ஆரியம் எதிர்த்தபோது கூறியது இன்றும் பொருந்தும்.

பார்ப்பன வாலிபர்களை ஆர்.எஸ்.எஸ். கூட்டம் என்று வைத்து, எதிர் சுயமரியாதை அணி, தி.மு.க. தலைமையிலான கூட்டணி என்பது எவ்வளவு சரியான பொருத்தம் பார்த்தீர்களா?

நம் உரிமைகளை மீட்டெடுக்க, மீண்டும் பண்பாட்டுப் படையெடுப்புக்கு – தமிழ்நாடு மண் ஒருபோதும் இடந்தரக்கூடாது என்ற பணியே இன்னும் ஓராண்டிற்கு நமது பணி என்று கருதி உழையுங்கள்!

ஒருங்கிணைவோம், ஒழுங்கிணைந்த தமிழ்நாடு என்பது முக்கியம்!

‘இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே,

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்!’

என்ற புரட்சிக்கவிஞரின் கவிதை வரிகள்தான் நம் இலக்காகி, வெற்றிக் கனி பறிக்க உழையுங்கள்!

‘திராவிட மாடல்’ ஆட்சி மீண்டும் தொடர
நம் பணிகள் தொடரட்டும்!

இவ்வாட்சி இன்றேல், வாழ்வுரிமை பறிக்கப்பட்ட தமிழர்கள் நிலை  என்னவாகும்? என்ற நிலைப்பாட்டை மக்களுக்கு நன்கு விளக்குங்கள்!

நம் ‘தபசு’ இன்றைய ஆட்சியே நாளைய ஆட்சி என்ற உறுதியுடன் உழைப்பதும், மக்களை உணர வைப்பதும்தான்!

திண்ணைப் பிரச்சாரம், மக்கள் சந்திப்பு, தெருப் பிரச்சாரங்கள் பட்டி தொட்டிகளிலும் சுழன்றடிக்கும் சூறாவளியாய் பாயட்டும்!

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

 

சென்னை
9.7.2025

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *