சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – “குடிஅரசு” இதழ் நூற்றாண்டு திறந்தவெளி மாநாடு – ‘‘கொள்கை வீராங்கனைகள்” நூல் வெளியீடு – முப்பெரும் விழா!
இது போன்ற நூல்களை வெளியிட வெளியிடத்தான் ‘நூல்’களின் ஆதிக்கம் ஒழியும்!
மன்னை, ஜூலை 7 ’ஜாதி ஒழிப்பு, பெண்ணடி மைத்தனம் ஒழிப்பு – இவைதான் தந்தை பெரியாரின் இலக்கு. இந்த இரண்டுக்குள் எல்லாமே அடங்கி விட்டன’ என்று மன்னார்குடி யில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மன்னார்குடியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – “குடிஅரசு” இதழ் நூற்றாண்டு திறந்தவெளி மாநாடு – கொள்கை வீராங்க னைகள் நூல் வெளியீடு – முப்பெரும் விழா மன்னார்குடி மாவட்டக் கழகம் சார்பில், மன்னை கீழராஜ வீதியில் பந்தலடிப் பகுதியில், சியாமளா தேவி அம்மன் கோயில் அருகில் நேற்று (6.7.2025) மாலை 5.30 மணி முதல் 10 மணி வரை மாநாடு போல் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கழகப் பொதுக்குழு உறுப்பினர்
ஆர்.எஸ்.அன்பழகன் அனைவரையும் வரவேற்றார். மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் தலைமையேற்று உரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், மன்னார்குடி மாவட்டச் செயலாளர் கோ.கணேசன், ப.க. மாநில அமைப்பாளர் சி.இரமேஷ், மன்னை ஒன்றியத் தலைவர் மு.தமிழ்ச்செல்வன், மன்னை நகரத் தலைவர் எஸ்.என்.உத்திராபதி, மன்னைக் காப்பாளர் ப.சிவஞானம், மன்னை மாவட்ட துணைச் செயலாளர் வீ.புட்பநாதன், ப.க. மாவட்டத் தலைவர் வை.கவுதமன், நீடாமங்கலம் ஒன்றியத் தலைவர் தங்க.பிச்சைக்கண்ணு, மன்னை மாவட்ட துணைத் தலைவர் ந.இன்பக்கடல், சு.சிங்காரவேலர், கோட்டூர் ஒன்றியத் தலைவர் ஆர்.நாராயணசாமி ஆகியோர் முன்னிலை ஏற்று சிறப்பித்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் இணைப்புரை வழங்கினார். 54 கழக வீராங்கனைகளை நேரில் சென்று நேர்காணல் செய்து அதை ஒரு புத்தகமாகக் கொண்டு வந்த எழுத்தாளர் வி.சி.வில்வம் தன்னுடைய அனுபவங்களைச் சுருக்கமாக வழங்கினார். தொடர்ந்து கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி தொடக்க உரை ஆற்றினார். முன்னதாக, ‘பாவேந்தர் கலைக்குழு’ சார்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தெற்கு நத்தம் சித்தார்த்தன் இயக்கத்தில் ப.க. மாநில அமைப்பாளர் கோபு பழனிவேல், பாவலர் பொன்னரசு, தேன்மொழி, கவிஞர் சிங்காரவேலர் ஆகியோர் பெரியார், ஆசிரியர், விடுதலை நாளிதழ் குறித்தும் தமிழு ணர்வு, இன உணர்வு பாடல்களையும் பாடினர்.
மாநாட்டின் மாட்சிகள்!
நிகழ்வில் மேடை தி.மு.க. மேனாள் அமைச்சர் மன்னை நாராயணசாமி, கழக மேனாள் மாவட்டத் தலைவர் ஆர்.பி.சாரங்கன் ஆகிய சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவு மேடையாக அமைக்கப்பட்டிருந்தது. அத்து டன் அங்கு சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை நினைவூட்டும் வண்ணம் வைக்கப்பட்டிருந்த இயக்கத்தின் அடி நாள் தோழர்களான சுயமரியாதைச் சுடரொளிகள் 250– க்கும் மேற்பட்டோரின் பெயர்ப்பட்டியல் அடங்கிய மிகப்பெரிய பதாகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும் கோபாலசுவாமி கோயிலின் கீழராஜவீதியே கருப்பு சிவப்புக் கொடிகளின் ராஜவீதியாக மாறி கண்களையும், கருத்தையும் கவர்ந்தது. ஜப்பான் நாட்டில் வசிக்கும் தோழர் இரா.செந்தில்குமார், அங்கி ருந்தவாறே இந்த நிகழ்ச்சி குறித்த விளம்பரத்தை இரண்டு இடங்களில் பெரிய அளவில் பிளக்ஸ் வைக்க ஏற்பாடு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கொள்கை வீராங்கனைகள்!
தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலம் என்று மொத்தம் 54 கொள்கை வீராங்கனைகளில் 34 மகளிர் வருகை தந்து, முன் வரிசையில் அமர்ந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அமைச்சர் நூலை வெளியிட்டுச் சிறப்பு செய்தார். மருத்துவர் அருமைக்கண்ணு, செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிரணி துணைச் செயலாளர் பெரியார் செல்வி ஆகியோரும், திராவிட மாணவர் கழகம் சார்பில் மாநில துணைச் செயலாளர் மு.இளமாறன், மாவட்டத் தலைவர்கள் சார்பில் வழக்குரைஞர் அமர்சிங், இளைஞரணி சார்பில் மாநில செயலாளர் நாத்திக. பொன்முடி, சொற்பொழிவாளர்களின் சார்பில் தஞ்சை இராம.அன்பழகன், கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கலந்து கொண்ட கொள்கை வீராங்கனைகள் அனைவருக்கும் அமைச்சர் சால்வை அணி வித்து மரியாதை செய்தார். மாவட்டக் கழகம் சார்பாக மேடையிலிருந்து பெருமக்கள் அனைவருக்கும் ஆடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அமைச்சர் உரைக்குப் பின், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார்.
நூல்களின் ஆதிக்கம் ஒழியும்!
துணைத் தலைவர் தனது உரையில், நிகழ்ச்சியின் எழுச்சியை குறிப்பிட வந்தவர், “நாம் நூல்களை வெளியிட வெளியிடத்தான் நூல்களின் ஆதிக்கம் ஒழியும்” என்றே தொடங்கி னார். தொடர்ந்து, கழகத் தோழர்களின் சிறப்பை சொல்ல வந்தவர், ”உயிருடன் இருக்கும் போதே ‘மரண சாசனம்’ எழுதி அதை படமாக வீட்டில் மாட்டி வைத்திருப்பார்கள் கழகத் தோழர்கள். காரணம், “உயிருடன் இருக்கும் போது மட்டுமல்ல, இறந்த பிறகும் தனது உடல் அவமானப்படுத்த படக் கூடாது என்பதால்தான்” என்று கூறிவிட்டு, “இப்படியொரு இயக்கத்தையும், தொண்டர்களையும் வேறு எங்கேயாவது பார்த்ததுண்டா?” என்று கேள்வி கேட்டு, இல்லை என்பதைப் போல பலத்த கைதட்டல்களையே பதிலாகப் பெற்றார். அடுத்த சிறப்பாக அவர் கழகத் தோழர்களின் உடற்கொடையைக் குறிப்பிட்டார். அதற்கு ‘‘மேலமெய்ஞானபுரத்தில் இறக்கும் அத்தனை பேரின் உடல்களும் மருத்துவமனைகளுக்குக் கொடையாக வழங்கப்படுகின்றன” என்று எடுத்துக்காட்டும் தந்தார். தொடர்ந்து, கொள்கை வீராங்கனைகள் புத்தகத்தின் சிறப்பைப் பற்றி கூறியதோடு, இதற்கு முன்பும் இது போன்ற பணிகள் நடைபெற்றிருப்பதை சுட்டிக்காட்டி, யார் யாரையோ ‘தமிழ்த் தாத்தா, என்கிறார்கள். நம் இயக்கத்தில் அப்படி உள்ள ஒருவர் வி.சி.வில்வம். கழகக் கொள்கை வீராங்கனைகளைத் தேடித் தேடிச் சென்று பேட்டி கண்டிருக்கிறார்” என்று பாராட்டினார்.
இந்த இரண்டில் எல்லாமும் அடங்கிவிட்டன!
மேலும் அவர், “ஜாதி ஒழிப்புப் போரில் 10,000–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறை சென்றது வேறு எங்கும் காணாதது. காரணம் ஜாதி ஒழிப்பும், பெண்ணடிமைத்தனம் ஒழிப்பும் தான் தந்தை பெரியாரின் இலக்கு. இதில் அனைத்தும் அடங்கிவிட்டன” என்று சட்ட எரிப்புப் போராட்டத்தின் பின்னணியில் சிறைப்பட்ட இருபால் கழகத் தோழர்களின் தியாகங்களை விலாவரியாக விவரித்துவிட்டு, ‘‘இந்த அனைத்துக்கும் பின்னணியாக இருப்பது திராவிட – ஆரிய சித்தாந்தப் போர்தான்” என்று முத்தாய்ப்பாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து, தேர்தல் காலம் நெருங்குகிறது என்று கூறி, அ.தி.மு.க. தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையச் சட்ட திருத்தம் தொடங்கி, நீட் விலக்கு வரையில் என்னென்ன துரோகங்களை செய்தது என்றும், இன்றைய சமூகநீதிக்கான சரித்திர நாயகரின் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் என்னென்ன முன்னேற்றங்களை தமிழ்ச்சமூகம் பெற்றுள்ளது என்பதையும் கூறி, மறுபடியும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் முதலமைச்சராக வரவேண்டும். அதற்கு உங்கள் அத்தனை பேரின் ஆதரவும் தேவை. இது எங்களுக்காக அல்ல, தமிழர்களின் எதிர்கால சந்ததிகளுக்காக நீங்கள் இதைச் செய்ய வேண்டும்’’ என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். கழகத் துணைத் தலைவர் உரைக்குப் பின், கொள்கை வீராங்கனைகள், கழகத் துணைத் தலைவர் மற்றும் அமைச்சர் அவர்களுடன் குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர்.
கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்கள்!
நிகழ்வில் தஞ்சை மாவட்டக் காப்பாளர் மு.அய்யனார், திருவாரூர் மாவட்டத் தலைவர் பெ.வீரையன், கும்பகோணம் மாவட்டச் செயலாளர் சு.துரைராஜ், திருவாரூர் மாவட்டக் காப்பாளர் வீர.கோவிந்தராசு, திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் தே.நர்மதா, மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீ.மோகன், நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மாநில ப.க.பொதுச்செயலாளர் வி.மோகன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன், பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர் வை.சிதம்பரம், மாநில ஊடகப்பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, தலைமைக் கழக பேச்சாளர் இராம.அன்பழகன், மாவட்ட ப.க.செயலாளர் தங்க வீரமணி, மேனாள் மாவட்ட இளைஞரணி தலைவர் மன்னை சித்து, மாவட்ட இளைஞரணி செயலாளர் க.இளங்கோவன், திராவிடர் கழக சிவா.வணங்காமுடி, மாவட்ட ப.க.அமைப்பாளர் இரா.கோபால், மன்னை நகர் ப.க.தலைவர் கோவி.அழகிரி, ப.க.ச.அறிவானந்தம், நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் சதா.அய்யப்பன், கொரடாச்சேரி ஒன்றிய தலைவர் சி.ஏகாம்பரம், கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் மு.சரவணன், மாவட்ட ப.க.துணைத் தலைவர் சா.முரளிதரன் மகளிரணிப் பொறுப்பாளர்கள் மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர்கள் அம்பிகா கணேசன், பாக்கியலட்சுமி, தஞ்சை மாவட்ட மகளிரணி தலைவர் அ.கலைச்செல்வி, திருவாரூர் மாவட்ட மகளிரணி தலைவர் இரா.மகேஸ்வரி, தஞ்சை மாவட்ட மகளிரணிச் செயலாளர் இ.அல்லிராணி, மன்னார்குடி மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜோதி அறிவழகன், கும்பகோணம் மாவட்ட மகளிரணி தலைவர் எம்.திரிபுரசுந்தரி, தஞ்சை மாவட்ட மகளிரணிச் துணைச் செயலாளர் தெ.மலர்க்கொடி மற்றும் அனைத்துக் கட்சி, கட்சி சேராத பொதுமக்கள் என ஏராளமானோர் வருகை தந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிறைவாக மன்னை நகர செயலாளர் வே.அழகேசன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
புத்தக வெளியீடு அமைச்சருக்குள் ஏற்படுத்திய தாக்கம்!
கொள்கை வீராங்கனைகள் நூலை எழுதிய வி.சி.வில்வம் திராவிடர் கழகத் தகவல் தொழில்நுட்பக் குழு மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார், நானும் திமுக தகவல் தொழில்நுட்பக் குழுவில் இருக்கிறேன். இரண்டும் பொருத்தமாக அமைந்துள்ளது. இந்தப் புத்தகத்தை குறித்து நிறைய பேசலாம் என்று வந்தேன். இதில் ஒரு நேர்காணலில் ஒரு பெண் மூன்று மாதம் கருவுற்று இருந்த போது சிறைப்பட்டார் என்று வருகிறது. என்னுடைய அம்மா கருவுற்று இருந்த போது என்னுடைய அப்பாவை மிசா சிறையில் அடைத்தார்கள். திராவிடர் கழகத்திற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் என்றென்றும் ஏதோவொரு தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட மாபெரும் தியாகங்களைச் செய்த இயக்கம் இது. தந்தை பெரியார் காலம் தொட்டு; இன்றுவரை திராவிடர் கழகக் கூட்டங்களில் அதுவும் மேடைகளில் புத்தகங்களுக்கு கொடுக்கும் அந்த முக்கியத்துவம்; படிப்புக்கும் நாம் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம்.
இதைப்பற்றி நான் எங்கு சென்றாலும், ‘எல்லா திறன்களையும் பெற்றிருக்கும் தமிழ்நாடு ஒரு நாடாக இருந்திருந்தால் உலகில் சிறந்த 50 நாடுகளின் பட்டியலில் முதன்மையானதாக இருந்திருக்கும்’ என்று பேசுவதுண்டு. இதற்கு அடித்தளம் இட்டவர்கள் யார்? நம்மைப் படிக்க வைத்தவர்கள் யார்? படிக்க விடாமல் செய்தவர்களை எதிர்த்து நின்றவர்கள் யார்? இவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்த பிறகும் இந்தப் போராட்டம் தொடர்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்னால் ஒற்றை மனிதராகத் தந்தை பெரியார் செய்திருக்கிறார் என்பதை எண்ணும் போதே மலைப்பாக இருக்கிறது. நான் தந்தை பெரியாரைப் பார்த்ததில்லை; அண்ணாவைப் பார்த்ததில்லை. ஆனால் இருவரும் கலந்த கலவையாக இருந்த எனது தாத்தா கலைஞரைப் பார்த்து வளர்ந்தவன் நான். அதன் பிறகு எல்லோராலும் பாராட்டப்படும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தம்பியாக, இதுவரையிலும் மன்னையில் வேறு யாரும் செய்யாத செயல்களை செய்ய வேண்டும் என்கிற முனைப்புடன் நான் இருக்கிறேன்.
இந்த மேடையில் புத்தகங்களை வாங்குவதற்கு நடந்த அந்த போட்டி இருக்கிறதே, அதை எப்படி விட்டோம் என்பது தான் எனக்கு உண்மையாகவே புரியவில்லை. அந்த போட்டியை இங்கேதானே தொடங்கினோம்? நாங்கள், சால்வைக்கு பதிலாக முதலமைச்சருக்குப் புத்தகங்களை கொடுக்கிறோம். ஆனால், ஏதோ ஒரு இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. என்றைக்கு திராவிடர் கழக மேடைகளில் புத்தகங்களை வெளியிடுவதைப் போல் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் செய்கிறோமோ அன்றைக்கு வரையிலும் ஓயமாட்டோம். இதைத்தான் எங்கள் இளம் தலைவர் நமது துணை முதலமைச்சர் அவர்கள், தனி பதிப்பகத்தின் மூலம் அனைத்து புத்தகங்களையும் பதிப்பிக்க வைத்து, பல நூலாசிரியர்களை உருவாக்கி வருகிறார். அதே போல் பேச்சாளர்களையும் உருவாக்கும் வேலையில் அவர் ஈடுபட்டு வருகிறார். அந்தப் பணி எவ்வளவு முக்கியம் என்பது ஒவ்வொரு முறையும் திராவிடர் கழக மேடைகளில் ஏறும்போதும் எனக்குத் தெரிகிறது. இந்த கூட்டத்தில் எனது மனதில் மிகவும் ஆழமாக பதிந்தது இதுதான். எதிர்பார்த்ததை விட அதிகமாக விற்பனை ஆனது என்று சொன்னார்கள். அதைவிட இந்த புத்தக வெளியீடு எங்கள் மீதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மதிகெட்ட கும்பல் இந்த மதியுள்ள இயக்கத்தை வீழ்த்த நினைக்கிறது. நமது திராவிட நாயகன் தலைமையில் நாம் அதில் வெற்றி பெறுவோம்.
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா,
மன்னார்குடி பொதுக்கூட்டத்தில், 6.7.2025