மதுரை, ஜூலை 5- மதுரை யில் 23-6-2025 திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு திராவிடர் கழகத்தின் சார்பாக பட்டுக் கோட்டை கே.வி.அழகிரி அவர்களின் 125ஆவது பிறந்த நாள்,முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்த நாள், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா என்னும் முப்பெரும் விழாக்களும் இணைந்த பொதுக்கூட்டம் மகபூப்பாளையம் ஜின்னா திடலில் எழுச்சியுடன் தொடங் கியது. ’தமிழ் நாட்டிற்குத் தேவை அடிமைச் சேவகனா? ஆளுமைத் தலைவரா?‘ என்னும் தலைப்பில் நடந்த திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்திற்கு தலைமைச் செயற்குழு உறுப் பினர் வே.செல்வம் தலைமை ஏற்று உரையாற்றினார்.
மந்திரமா? தந்திரமா?
அனைவரையும் வரவேற்று மாவட்ட செயலாளர் இரா லீ.சுரேஷ் உரையாற்றினார். தி.மு,க.வின் மதுரை மாநகர் இளைஞரணி ஜெ.ரகுவரன் தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து மந்திரமா தந்திரமா நிகழ்வினை பேரா சுப.பெரியார் பித்தன் நிகழ்த்தினார்.அவர் தன்னுடைய நகைச்சுவையான பேச்சால் பகுதி மக்களை ஈர்த்தார்.அவருக்கே உரித்தான கிராமத்துத் சொல்லாடலில் தந்தை பெரியாரின் பெரும் பணியையும் ஆசிரியர் அவர் களின் அரும்பணியையும் ,திராவிட இயக்கம் கல்விக்கு ஆற்றிய தொண்டறத்தையும் எடுத்துச்சொல்லி உரையாற்றி னார்.
அவரைத் தொடர்ந்து ‘அறி வியலே உனக்கு இந்த நிலையா?’ என்ற பொருளில் தலைமைக் கழகச் சொற்பொழிவாளர் அ. வேங்கைமாறன் உரையாற்றினார்.அரசு பொறுப்பில் இருக்கும் பிஜேபி ஆட்சியாளர்கள் சட்டத்திற்கும் அறிவியலுக்கும் விரோதமாகச் செய்யும்,பேசும் மோசடித்தனங்களை மக்கள் மொழியில் பேசித் தோலுரித்தார்.
பட்டுக்கோட்டை அழகிரி
– கலைஞர் படம் திறப்பு
தொடர்ந்து தலைவர்களின் படத்திறப்பு நிகழ்வு நடைபெற்றது.திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்மட்ட செயல் திட்டக் குழு உறுப்பினர் மேனாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் உருவப்படத்தையும், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் படத்தை பிரின்சு என்னாரெசு பெரியாரும் திறந்து வைத்தனர்.வாழ்த்து முழக்கங்களை தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.செல்வம் முழங்க, மற்றவர்களும் திருப்பி முழக்கமிட்டனர்.படத்திறப்பு உணர்வுப் பூர்வமாக இருந்தது.
தொடர்ந்து மதிமுக தொழி லாளர் அணி இணைப்பொதுச் செயலாளர் மகபூப்ஜான், மனிதநேய மக்கள் கட்சி பொறுப்பாளர் முபாரக், திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் இராம வைரமுத்து ஆகியோர் உரையாற்றினர். இராம.வைரமுத்து தன் உரையில் கானாடு காத்தான் திருமண விழாவில் நாதசுவர வித்தகர் சிவக்கொழுந்து தன் தோளின்மேல் போட்ட துண்டால் வந்த பிரச்சனையைத் தந்தை பெரியார் தீர்த்து வைத்த தையும், பட்டுக்கோட்டை அழகிரி நடத்திய சம்பவத்தையும் எடுத்துச் சொன்னதோடு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் அரிய பணிகளைப் பட்டியலிட்டார்.
திராவிட மாடல் அரசின் சாதனைகள்
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு, வர்ணம் என்னும் பெயரால் நமது முன்னோர்கள் படிக்கவிடாமல் தடுக்கப்பட்டதையும்,இன்றைக்கு நாம் பெற்றிருக்கும் கல்விக்குத் தந்தை பெரியாரும் திராவிட இயக்கமும் காரணம் என்பதைக் குறிப்பிட்டு உரையாற்றினார்.
முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் தன்னுடைய உரையில், நம் தமிழ் நாட்டில் எல்லோரும் ஒற்றுமையாக வாழும் நிலையை மாற்றி,மதவெறிக்காடாக மாற்றுவதற்காக இந்துத்துவா அமைப்புகள் தொடர்ச்சியாக முயல்வதையும்,அதன் ஒரு பகுதியே மதுரையில் நடத்தப்பட்ட மாநாடு என்பதையும், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் எழுத்தாற்றல்,ஆட்சியில் அவர் செய்த மகத்தான சாதனைகள், இன்றைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சி எப்படி எடுத்துக்காட்டான ஆட்சியாக இருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் எடுத்துரைத்து மத நல்லிணக்க பூமியான தமிழ் நாட்டில் எப்படியாவது கலவரம் ஏற்படுத்த இந்துத்துவாவாதிகள் முயற்சி செய்கின்றனர். அதை முறியடிப்போம் என்று உரையாற்றினார்.
முருகன் பெயரில்
அரசியல் மாநாடு
நிறைவுரையை திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தன்னுடைய கணீர் என ஒலிக்கும் குரலோடு தொடங்கினார். பட்டுக் கோட்டை அழகிரி பற்றியும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் சாதனைகளைப் பற்றியும் பட்டியலிட்டார். திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் இடைவிடாத உழைப் பினை எடுத்துரைத்தார். முருக பக்தர்கள் மாநாடு என்ற பெயரில் அரசியல் மாநாட்டை அவர்கள் நடத்தியிருக்கிறார்கள். மதுரை மக்கள் அந்த மாநாட்டைப் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.உள்ளூர் மக்கள் கலந்து கொள்ளாத,வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஆட்களை கொண்டு வந்து நடத்தியிருக்கிறார்கள். மொத்தத்தில் பல்பு வாங்கிய முருகபக்தர் மாநாடாக அது மாறிவிட்டது என்று சொல்லி திராவிட மாடல் அரசின் சாதனைகளையும்,ஒன்றிய அரசு செய்யும் பிரிவினைவாத அரசியலையும் மிக விளக்கமாக எடுத்துரைத்து சுமார் ஒருமணி நேரம் உணர்ச்சியும் எழுச்சியும் மிக்க உரையை நிகழ்த்தினார். அவரின் கருத்தியல் தெளிவும், நயமுற கருத்துகளை மக்கள் மத்தியில் எடுத்து வைத்து வாதிட்ட திறனும் அனைவரும் பாராட்டும் வண்ணம் இருந்தது. திராவிடர் கழக கூட்டத்திற்கான விரிவான ஏற்பாடுகளை திராவிட முன்னேற்ற கழக இளைஞர் அணி தோழர்களான ஜே.ரகுவரன், ஆதவன்ராசா மற்றும் அவர்களுக்குப் பக்க பலமாக தி.மு.க.வின் பல்வேறு தோழர்கள் ஒருங்கிணைந்து நிகழ்ச்சியை நல்ல வண்ணம் நடத்துவதற்கு திராவிடர் கழகத்திற்குத் துணை நின்றனர் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் பயனாடை அணிவித்து, மரியாதை அளித்து தோழர்கள் மகிழ்ந் தனர். பொதுக்கூட்ட முடி வில் அனைவருக்கும் திராவிட மாணவர் கழக மாநிலத் துணைச் செயலாளர் சீ.தேவராஜ்பாண்டியன் நன்றி கூறினார்.