ஆசிரியர் விடையளிக்கிறார்

Viduthalai

கேள்வி 1: விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள நாட்டில் நிலத்தடி நீருக்கு வரி விதிப்பு முறையை ஒன்றிய அரசு நடைமுறைக்கு பரிசீலிப்பது சரியானதா?

– இரா.முல்லைக்கோ, பெங்களூரு

பதில் 1: தவறு, மிகப் பெரிய தவறு. மனுதர்மப்படி, ‘விவசாயம்’ பாவகரமான தொழில் அல்லவா? அதனால்தான் முந்தைய திரும்பப் பெறப்பட்ட மூன்று விவசாயச் சட்டங்கள் முதல் இன்றைய செய்தியான நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பு வரை உள்ள நடவடிக்கைகள்.

‘உழுவோர் உலகத்தோருக்கு அச்சாணி’ என்பது நமது திராவிடப் பண்பாடு ஆயிற்றே!

  • • • • •

கேள்வி 2: நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஊழியர் நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் பட்டியலின மற்றும் பழங்குடியினப் பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை  நடைமுறைப்படுத்தியுள்ள தலைமை நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் அவர்களுக்கு கையொலி எழுப்பி சபாஷ் போடலாம் அல்லவா?

– இல.சீதாபதி, மேற்கு தாம்பரம்.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 2: அதைப் பற்றி நமது அறிக்கை (4.7.2025) காண்க. S.C., S.T. பிரிவினருக்கு நன்னாள் – மிகவும் வரவேற்கத்தக்கது – சமூகநீதி முழுக் கொள்கைப்படி, OBC. MBC பிரிவினர் விடப்பட்டுள்ளனர். அதையும் இணைப்பது அவசியம்.

  • • • • •

கேள்வி 3: பொருளாதாரத்தில் நலிந்த உயர் ஜாதியினருக்கு அவசர அவசரமாக இரண்டே நாள்களில் சட்டம் இயற்றி 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கிய ஒன்றிய அரசு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தயக்கம் காட்டுவது சமூகஅநீதி அல்லவா?

– கி.கோவிந்தராஜ், வந்தவாசி.

பதில் 3: அதுதான் ஆர்.எஸ்.எஸ்.; அதன் ஆணைப்படியே செயல்படும் பிரதமர் மோடியின் பா.ஜ.க. அரசு!

  • • • • •

கேள்வி 4: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ஆகியோரின் வீட்டிற்கே நேரில் சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டத்தைத் தொடங்கியுள்ள ‘திராவிட மாடல்’ அரசை மக்கள் வாழ்த்தொலி எழுப்பி பாராட்டுவது இன எதிரிகளின் செவிகளுக்குக் கேட்குமா?

– ச.செல்லம்மாள், சிவகங்கை.

பதில் 4: மிக மிக அருமையான திட்டம்; விரைந்து ஓட்டை இல்லா (FoolProof) முறையில் அமல்படுத்துவது மக்களால் வரவேற்றுப் பாராட்டப்படுவது நிச்சயம்.

  • • • • •

கேள்வி 5: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் உள்ள மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் ஆகிய இரண்டு வார்த்தைகளையும் நீக்க வேண்டும் என்று கூறிய ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலேவிற்கு எதிராக, நாடு முழுவதும் எழுந்துள்ள கண்டனக் குரலுக்கு உரிய பலன் கிட்டுமா?

– இர.கார்த்தி, புதுடில்லி.

பதில் 5: மக்கள்தான் உண்மையான எஜமானர்கள். பலன் கிடைத்து, சர்வாதிகார ஆட்சிக் கனவு மக்களால் கலைக்கப்படுவது உறுதி.

  • • • • •

கேள்வி 6: ஏழை – எளிய கிராமப்புற மக்கள் மற்றும் சிறு-குறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொள்ளாமல், ரயில் கட்டண உயர்வை ஒன்றிய பி.ஜே.பி. அரசு உயர்த்தி இருப்பது மக்களுக்குப் பெரும் சுமையாக அமையும் அல்லவா?

– பொன்.முனுசாமி, பெங்களூரு.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 6: ஏழை, எளியவர்களின், சிறுகுறு வியாபாரிகளின் பயண வாய்ப்புகள் பெரிதும் ரயில்களை நம்பியே உள்ளன. முன்பு ரயில்வே அமைச்சர் பொறுப்புகளில் லாலு, வேலு இணைந்திருந்தபோது அந்தத் துறையில் நல்ல லாபம் சம்பாதித்துத் தந்தனர் – எந்தக் கட்டணத்தையும் ஏற்றாமலே. அதைக் கற்க மறந்த ஆர்.எஸ்.எஸ். ஆட்சி பாடம் பெறட்டும்.

  • • • • •

கேள்வி 7: ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் உயரிய நோக்கில் முதன்முறையாக சென்னையில் மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கிவைத்திருப்பது ‘போக்குவரத்துத் துறையில் ஒரு மைல்கல்’ என்று கருதலாமா?

– ஜெ.பாபு ஜனார்த்தனன், பொத்தேரி.

பதில் 7: சிறப்போ, சிறப்பு. தந்தை பெரியார் கூறிய, ‘இனிவரும் உலகம்’ தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை!

“இனி வருங்காலத்தில் மின்சாரத்தில் கார்கள் ஓடும்” – தந்தை பெரியார் (1942).

  • • • • •

கேள்வி 8: பா.ஜனதாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இணைப்பு உள்ளதே தவிர பிணைப்பு இருப்பதாகத் தெரியவில்லை என்று தொல்.திருமாவளவன் அவர்கள் கூறியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை என்று எடுத்துக் கொள்ளலாமா?

– சு.சண்முகம். மணிமங்கலம்.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 8: நிர்ப்பந்தக் காதலின் முடிவு எப்படியோ – அந்தப்படியே அடிமை ஒப்பந்தத்தின் கதியும், போகப்போகத்தான் தெரியும்.

  • • • • •

கேள்வி 9: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான திருமண முன்பணம் முன்பு இருந்ததை விட பல மடங்கு உயர்த்தி, ரூ.5 லட்சமாக வழங்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு அரசாணையாக வெளியிடப்பட்டிருப்பது – ‘அரசு ஊழியர்களின் பாதுகாப்பு அரண் திராவிட மாடல் அரசு’ என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது அல்லவா?

– ச. சாந்தி, நாமக்கல்.

பதில் 9: நிதிப் பற்றாக்குறை – ஒன்றிய டில்லி ஆர்.எஸ்.எஸ். ஆட்சியின் நிதி வஞ்சனை – ஓரவஞ்சனையாக உள்ள பல நிலைகளிலும் இப்படிப் பல சலுகைகளைச் செய்வது வரவேற்கத்தக்கது என்பதை அரசு ஊழியத் தோழர்கள் உணர்வார்களாக!

  • • • • •

கேள்வி 10:  லட்சக்கணக்கான விவசாயிகளின் நலனுக்காக, நிறுத்தி வைக்கப்பட்ட 33 சதவீத மானியம் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கூட்டத்தில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வலியுறுத்திப் பேசியது தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வில் விடியலை ஏற்படுத்துமா?

– ந.தமிழ்மணி, தஞ்சாவூர்.

பதில் 10: “உரிமைக்குக் குரல் கொடுத்து உறவுக்குக் கை கொடுப்பது”தானே ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முக்கிய கொள்கை அணுகுமுறை!

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *