மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி
குளு, குளு குன்னூரை நோக்கிக் கூட்டம், கூட்டமாக மக்கள் வெள்ளம் படையெடுத்து வரும் வேளையில், கடமையின் அழைப்பால் கதிரவன் வாட்டி வதைக்கும் கடற்கரை நகரம் சென்னைக்குச் செல்ல வேண்டிய நிலை. என் மைத்துனர் இதய நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவத்திற்காக தமிழ்நாடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு இதயத் தமனி மாற்று அறுவை மருத்துவம் (Coronary artery bye pass surgery) செய்யப்பட்டது. அவரை கவனித்துக் கொண்ட ஓர் அன்பான செவிலியரை அங்கு சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் பெயர் அன்னலட்சுமி. மிகவும் சிறப்பாக அந்த செவிலியர் பணியாற்றியதைப் பார்த்து வியந்தேன். தன்னலம் கருதாத, நேரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அவர் ஓர் அன்பான அன்னையைப் போல், அந்த அவசர நோய்ப் பகுதியில் இருந்த அனைத்து நோயாளிகளையும் அவர் கவனித்த பாங்கு என்னைக் கவர்ந்தது. அவரிடம் பேச வாய்ப்புக் கிடைத்தது.
அவர் விருதுநகர் மாவட்டம், கரியாப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், அரசு பள்ளியில் படித்து, சென்னை மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பயிற்சியை முடித்ததாகக் கூறினார். “திருமணமாகி விட்டதா?” என்று நான் கேட்டதற்கு, “இல்லை” என்பதே பதிலாக வந்தது. “வயது என்ன?” என்று கேட்டதற்கு, “வயது 29” என்று பதில் வந்தது. “ஏன் திருமணம் ஆகவில்லை?” இது நான். “எங்க சார், எத்தனையோ பேர் வந்து, வந்து போகிறாங்க! எல்லோரும் என் மூஞ்சப் பார்த்து விட்டு போறவங்கதான். அதற்கு பின்னே சத்தமே இருப்பதில்ல” என்றார். அவர் மனம் அழகாய் இருப்பது போல் முகம் அழகாயில்லைதான். மேல் நாடி நீண்டு, மேல் நாடி முன் பற்கள் எல்லாம் உதட்டிற்கு வெளியே நீண்டிருந்தன. முகம் அழகில்லாமல் இருப்பதால் எந்த வரணும் அமையவில்லை என்ற உண்மையை அவர் சொன்னதும், அவருக்கு நாம் ஏன் உதவக் கூடாது என்று எண்ணினேன். அவரிடம் நான், “நீங்கள் குன்னூர் வர்ரீங்களா? ஆபரேஷன் செஞ்சு சரியாக்குகிறேன்?” என்றேன். “எவ்வளவு செலவாகும் சார்?” இது அவர். “ஒரு செலவும் இல்லம்மா, அரசு மருத்துவமனையில் இலவசமாக செஞ்சு விடுறேன்” என்றேன். அவர் மகிழ்ச்சியுடன் விடுமுறை எடுத்துக் கொண்டு வருவதாகக் கூறினார். சொன்னபடியே 15 நாள்களில் அன்னலட்சுமி குன்னூர் வந்தார். அவர் அண்ணனும் உடன் வந்தார். அவருக்கு நிறைய சந்தேகங்கள். ஏற்கெனவே தங்கையின் முகம் அழகாயில்லை. “ஆபரேஷன் செய்வதால் மேலும், முகம் அசிங்கமாயிடுமோ” என்பதே அவர் கேட்ட முதல் கேள்வி. அவருக்கு இருந்த பயம் இயல்பானதே.
முக அறுவை மருத்துவம் பற்றி பொதுவாக யாருக்கும் தெரியாது. பல மருத்துவர்களுக்கே இந்தத் துறைப் பற்றித் தெரியாது. முகத்தில் செய்யும் அறுவை மருத்துவத்தால் முகம் கோணி விடுமோ அல்லது ஏதாவது குறை ஏற்பட்டு விடுமோ, முகத்தில் செய்யும் அறுவை மருத்துவத்தால், தையல் போட்ட இடத்தில் வடு ஏற்பட்டு முகத்தின் அழகு பாதிக்கப்பட்டு விடுமோ என்ற பல சந்தேகங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று. இயற்கையில் உள்ள இந்தக் குறைபாட்டை, அவ்வளவு எளிதாக குணமாக்க முடியுமா? என்ற சந்தேகம் அன்னலட்சுமியின் அண்ணனுக்கு. ஆனால் அன்னலட்சுமி துணிவோடு இருந்தார். அவர் அண்ணனை அமரவைத்து, அவரது ஒவ்வொரு சந்தேகங்களையும் தெளிவாக்கினேன். முதலாவதாக அவர் கேட்டது, “சார், மூஞ்சி அவ்வளவு சரியில்லாம ஏற்கெனவே இருக்கு, ஆபரேஷனால மேலும் மோசமாகி விடாதில்ல?” இது அவர் சந்தேகம்.
“நிச்சயம் முகம் அசிங்கமாகாது. இப்ப இருக்கிறத நல்லா நிச்சயம் பண்ணி விடுவேன். பயப்பட வேண்டாம். ஆபரேஷன் முடிஞ்சு, அறுவை அரங்கத்தை விட்டு வெளியே வரும் பொழுது அவர் வேறு அன்னலட்சுமியாக வருவார். நீங்களே அதிசயப்படுவீர்கள்!” என்று அவருக்கு தெளிவுபடுத்தினேன். அடுத்து அவர், “சார் மூஞ்சிலே வடு ஏதாவது வந்து விடுமா?”. நான் “மூஞ்சிலே எந்த வடுவும் இருக்காது. வாயின் உள்ளேதான் இந்த ஆபரேஷனை செய்யப்போறேன். அதனால் மூஞ்சிலே ‘வடு’ என்ற பேச்சுக்கே இடமில்ல, கவலைப்படாதீங்க” – இது நான்.
இதுபோன்ற பல சந்தேகங்கள் அவருக்கு. அனைத்து சந்தேகங்களுக்கும் பொறுமையாக பதில் அளித்து, அவைகளைப் போக்கினேன். ஆனால், அன்னலட்சுமியோ, துணிவாகவும், தெளிவாகவும் இருந்தார். செவிலியராக இருக்கும் காரணத்தால், அறுவை மருத்துவத்தைப் பற்றி பயமோ, குழப்பமோ ஏதும் இல்லாமல் இருந்தார். இறுதியாக அவர் அண்ணன், “சார் உங்கள நம்பி வந்திருக்கிறோம், நல்லபடியா செஞ்சு கொடுங்க” என்று கூறினார். நான் அவருக்கு மீண்டும், “அஞ்ச வேண்டாம், எல்லாம் நல்லபடியா நடக்கும்” என்று கூறினேன்.
மருத்துவமனையில் சேர எல்லா ஏற்பாடுகளோடும் அவர்கள் வந்திருந்தனர். அன்னலட்சுமியை மருத்துவ மனையின் சிறப்புப் படுக்கைப் பகுதியில் (Special Ward) சேர்த்தேன். அடுத்த நாள் அறுவை மருத்துவத்திற்கு முன் ஆய்வுகள் நடத்தப்பட்டன. உடலின் மற்ற பாகங்களின் இயக்கம் சீராக இருக்கிறதா என்பதையறிய இரத்தம், சிறுநீர், இதய மின் அலைப் பதிவு (ECG), ஊடுகதிர் படம் எடுக்கப்பட்டது. அனைத்தும் சீராக இருந்தது. முக எலும்புகள் ஊடுகதிர் எடுத்து அளவுகள் ஆய்வு செய்யப்பட்டன. மேல் நாடி, கீழ்நாடிகளின் பதிப்புகள் எடுக்கப்பட்டன. அவை பிளாஸ்டர் ஆப் பாரிஸில் அச்சு எடுக்கப்பட்டன. அந்த அச்சுக்களை ஆய்வு செய்து, எவ்வளவு அளவுக்கு மேல்தாடை எலும்பினை நீக்க வேண்டும், புதிய நிலையில் பொருத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
தலை, முக அளவு (Cephalometry) எடுத்துதான் இதை வழமையாக பெரிய மருத்துவமனையில் முடிவு செய்வார்கள். எங்கள் சிறிய மருத்துவமனையில் அந்த வாய்ப்புகள் எல்லாம் இல்லை. அதனால் இருக்கின்ற ஒரு சில வசதிகளை மட்டுமே பயன்படுத்தி அறுவை மருத்துவத்தைப் பற்றி முடிவு செய்ய வேண்டிய கட்டாயம். அதனால் எல்லா ஆய்வுகளின் முடிவுகளும் வந்தன. அனைத்தும் சீராக இருந்தன. எந்த அளவு எலும்பை உள்ளே தள்ள வேண்டும் என்பதும் தாடையின் அச்சுக்களை வைத்து முடிவு செய்யப்பட்டது.
மயக்குநரின் (Anaesthetist) ஆய்வுக்கு அன்னலட்சுமி அனுப்பப்பட்டார். அவரும் எல்லா ஆய்வுகளையும் பார்த்து, அறுவை மருத்துவத்திற்கு அனுமதி அளித்தார். நோயாளியின் அண்ணனிடம் ஒப்புதல் (Concern) பெறப்பட்டது. அறுவை மருத்துவத்திற்கும் நாள் குறிக்கப்பட்டது. அந்த நாளும் வந்தது. நோயாளி அறுவை அரங்கிற்கு மாற்றப்பட்டார். மயக்குநர் மயக்கம் கொடுக்க ஆயத்தமானார். வாயில் அறுவை மருத்துவம் செய்ய வேண்டியிருந்ததால், மூக்கு வழியாக மயக்க மருந்துக்குழாயை (Naso endo tracheal) மூச்சுக் குழாயில் செலுத்தி நோயாளி மயக்க வைக்கப்பட்டார். நான் அறுவை மருத்துவத்தைத் துவக்கினேன். முதலில் வாயைத் திறந்து வைக்கும் கருவியை பொருத்தினேன். வாயின் முன்பகுதிகளை ஆய்வு செய்து, முன் கடைவாய்ப் பற்களில், முதலில் இருக்கும் பற்களை (I Pre-Molars) நீக்கிவிட்டு, அந்த இடத்திற்கு மேல் தாடையை தள்ளி பொருத்துவதாக அறுவை மருத்துவம் செய்வதாக (Treatment Planning) முடிவு செய்யப்பட்டிருந்தது.
அந்த முடிவின்படி, இரண்டு புறமும் இருக்கும் முதல் முன் கடைவாய்ப் பற்களை அகற்ற ஆயத்தமானேன். முன்புறத்தில் இருந்து, கடைவாய் முதல் பல் (I Molar) வரை, மேல் தாடையின் சவ்வுப் படலத்தை (Mucous membrane) ஒதுக்கினேன். அதேபோல் அன்னத்திலும் அந்தப் பகுதியை பின்புறம் ஒதுக்கினேன். இப்பொழுது வாயின் மேல் நாடியில் உள்ள எலும்பு பற்களின் மேல் பகுதியிலும், அன்னப் பகுதியிலும் (Palatal side) முமுமையாக வெளிப்பட்டது. முன் பற்களின் மேல் உள்ள சவ்வுப் படலத்தை மூக்கு வரை ஒதுக்கினேன். இரண்டு புறமும் முதல் முன் கடைவாய் பற்களை இணைப்பு எலும்போடு (Alveolar bone) சேர்த்து அகற்றினேன். இப்பொழுது இருபுறமும் ‘V’ வடிவில் இடைவெளி ஏற்பட்டது. அந்த இடைவெளியின் மேல் பகுதியிலிருந்து மூக்கின் பக்கவாட்டில் உள்ள மேல் தாடை எலும்பு வரை இடைவெளியை விரிவாக்கினேன். இப்பொழுது மேல்தாடையின் முற்பகுதியில் எலும்பு துண்டாகி விட்டது. பிறகு அன்னப் பகுதிக்கு வந்தேன். முன் கடைவாய்ப் பற்களை எடுத்தப் பகுதிகள் இரண்டிற்கும் சமமான அன்ன எலும்பை குறுக்காக வெட்டி அகற்றினேன். இப்பொழுது மேல் தாடையின் முற்பகுதி (Pre-maxilla) முழுமையாக துண்டாகி பின் எலும்பிலிருந்து தனியாக்கப்பட்டிருந்தது. துண்டான அந்த முன் மேல் தாடை எலும்பை, எச்சரிக்கையாக பின் பகுதி மேல்தாடை எலும்புப் பகுதிக்கு நகர்த்தினேன்.
பின்னால் நகர்த்தப்பட்ட அந்த மேல் தாடை முற்பகுதி சரியாகப் பின் பகுதி மேல் தாடை எலும்போடு பொருந்தியது முன்புறப் பகுதியையும், பின்புறப் பகுதியையும் எவர் சில்வர் கம்பிகளை வைத்துக் கட்டி இணைத்தேன். துண்டான மேல்தாடை முன்னெலும்பு, தாடையின் பின் எலும்போடு கெட்டியாக இணைக்கப்பட்டது. பின் முற்பகுதி, பிற்பகுதி சவ்வுப் படலம் சிறிய பகுதிகள் அகற்றப்பட்டு, எலும்பின் மேல் வைத்துத் தையல் மூலம் இணைக்கப்பட்டது. பின் நோயாளியின் உடல் நிலை சீராக இருப்பதை ஆய்ந்து, மூச்சுக் குழாயிலிருந்த மயக்க மருந்துக் குழாய் அகற்றப்பட்டது.
நோயாளி மாறிய முகத்தோடு, புதிய பொலிவுடன் படுக்கைப் பகுதிக்கு மாற்றப்பட்டார். ஒரு வாரம் கழித்து தையல்கள் அகற்றப்பட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடன் (எனக்கும், அவருக்கும்) மருத்துமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அடுத்த இரண்டு நாள்களில் பணியிலும் சேர்ந்து விட்டார்.
திராவிடர் கழக மாநாட்டிற்காக நான் சென்றபொழுது, நான் தங்கியிருந்த இடத்திற்கு (அருப்புக்கோட்டையில்) என்னைப் பார்க்க அன்னலட்சுமி, தன் கணவரோடும், குழந்தைகளோடும் வந்தார். இப்பொழுது அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றுவதாகவும், கணவரும் அதே மருத்துவமனையில் பணியாற்றுவதாகவும், குழந்தைகள் நான்காம், ஆறாம் வகுப்பில் படிப்பதாகவும் மகிழ்ச்சியோடு கூறினார். எனக்கும் மனம் கொள்ளாத மகிழ்ச்சி.
தந்தை பெரியார், தான் பொதுத் தொண்டாற்றுவதுகூட தனக்கு மகிழ்ச்சி ஏற்படுவதால், அதுவும் கூட ஒருவகை சுயநலம்தான் என்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார். நான் அறுவை மருத்துவம் செய்து, அன்னலட்சுமியைப் பொலிவாக்கினாலும், அந்த வெற்றி கொடுத்த “மகிழ்ச்சி” என்பது “என் சுயநலம்” என்ற எண்ணத்தோடு செவிலியர் அன்னலட்சுமிக்கு விடை கொடுத்தேன்.