செயற்கைக்கோள் தரவுகள் நவீன தொழில்நுட்ப அடிப்படையில் நீர்நிலைகள் பாதுகாப்பு இணையதளங்கள் தொடக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

viduthalai
2 Min Read

சென்னை, ஜூலை 4  செயற்கைக் கோள் தரவு மற்றும் ஏஅய் தொழில்நுட்பம் அடிப்படையில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை கண்டறிதல், நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் நீர்வள தகவல் மேலாண்மை அமைப்புக்கான இணையதளங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 169 உதவி பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

பணிகள் நியமன ஆணை

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வு மூலம் உதவிப் பொறியாளர் (சிவில்) பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டு, நீர்வளத் துறைக்கு ஒதுக்கப்பட்ட 169 உதவி பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (3.7.2025) வழங்கினார்.

இணையதளங்கள் தொடக்கம்

தமிழ்நாடு நீர்வள தகவல், மேலாண்மை அமைப்புக்கான (TNWRIMS) இணையதளத்தை உருவாக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த இணையதளத்தை உருவாக்க, நீரை பயன்படுத்தும் பல்வேறு பங்குதாரர்களிடம் இருந்து அனைத்து தரவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் எதிர்கால முன்மொழிவை உருவாக்க, நீர் தொடர்பான தரவு தளத்துக்கான, நம்பகத் தன்மையுடன் கூடிய ஒற்றை ஆதாரமாக இந்த இணையதள அமைப்பு(http://tnwrims.tn.gov.in) செயல்படும்.

நிகழ்நேர தகவலை அளிக்கும் இந்த அமைப்பில் நீர் வழங்கல், தேவை, தரம், பயனர்கள் போன்றவை, கிராம தண்ணீர் வரவு – செலவு, வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறை நிலவரம், நீர்வரத்து முன்னறிவிப்பு, நீர்த்தேக்க செயல்பாடு மேம்படுத்தல், நிலத்தடி நீர் தகவல், ஆற்றுப் படுகைகள் இடையே நீர் பரிமாற்றம், நீர் பாதுகாப்பு திட்டம் போன்ற 11 தொகுதிகள் உள்ளன. தமிழ்நாடு நீர்வளத் துறை இணையதளத்தில் இந்த அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில்நுட்பம், செயற்கைக் கோள் தரவுகளை பயன்படுத்தி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் நீரின் தரத்தை கண்காணிக்க இணையதளம் உருவாக்க ரூ.3.55 கோடி ஒதுக்கப்பட்டது. வருவாய் துறை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நீர்நிலைகளில் ஏற்படும் ஆக்கிரமிப்பு, அத்துமீறல் போன்றவற்றை இதன்மூலம் கண்டறியலாம்.

சென்சார் கருவி

நீர்நிலைகளின் பரப்பளவில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் கொள்ளளவு இழப்பை கண்டறியலாம். புல எண்கள் அடிப்படையில் நீர்நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விழிப்பூட்டல் தகவல்களை அனுப்பி, ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை மேற்கொள்ளச் செய்யலாம். இதன் முன்னோடி திட்டமாக, அம்பத்தூர் ஏரியில் ஆக்கிரமிப்புகளை கண்டறியும் வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள நீரின் தரத்தை கண்காணிக்க ‘சென்சார்’ கருவி நிறுவப்பட்டு, நீரின் தரம் மற்றும் இதர தரவுகள் இணையதளத்தில் (http://tnswip.tn.gov.in) நிகழ்நேரத்தில் தெரிவிக்கப்படுகிறது. பூண்டி நீர்த்தேக்கத்தில் வண்டல் மண் படிவு கணக்கீட்டுக்காக பேத்மெட்ரிக் மற்றும் ஆளில்லா விமானம் மூலம் தரவுகள் பெறப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இணையதளங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பயன்பாட்டுக்கு கொண்டுவந்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலர் முருகானந்தம், நீர்வளத் துறை செயலர் ஜெயகாந்தன், முதன்மை தலைமை பொறியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *