சென்னை, ஜூலை.4- அருணாசலபிரதேசத்தில் உள்ள நீர் மின்சார நிலையத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டுக்கு தேவையான மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் மின்வாரியத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கையெழுத்தானது.
மின்சாரம் கொள் முதல்
அருணாசலப் பிரதேசம் மாநிலம் ஷியோமி மாவட்டத்தில் தேசிய அனல் மின்நிலையத்தின் துணை நிறுவனமாக டாட்டோ-1 மற்றும் டாட்டோ-2 ஆகிய 2 நீர்மின் திட்டங்கள் ரூ.1,750 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் டாட்டோ1 என்பது 186 மெகாவாட், டாட்டோ-2 என்பது 700 மெகாவாட் திறன் கொண்ட பெரிய திட்டமாகும். வடகிழக்கு மின்சாரக் கழகம் மற்றும் அருணாசலப்பிரதேச அரசு இடையேயான கூட்டு முயற்சியின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மின்சார விநியோகத்தை மேம்படுத்துவதையும் தேசிய மின்கட்டமைப்பிற்கு பங்களிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளன. இந்த நிலையம் வருகிற 2028-2029-ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வர உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழ்நாட்டின் தேவைக்காக கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.
சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் கூடுதல் தலைமை செயலாளர், மின்சார வாரிய தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் வடகிழக்கு மின்கழக தலைமை பொது மேலாளார் ரிப்யூன்ஜோய் புயன் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாடு மின் பகிர்மான கழக இயக்குநர் (நிதி) க.மலர்விழி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஒப்பந்தம்
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறும்போது, “அருணாசலப் பிரதேசத்தில் உள்ள நீர் மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
அங்கு உற்பத்தி செய்யப்படும் அனைத்து மின்சாரத்தையும் தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்முதல் செய்ய தயாராகஉள்ளது. ஆனால் அந்த நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது எவ்வளவு மின்சாரம் வழங்கப்படுகிறதோ? அவற்றை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.50 என்ற கட்டணத்தில் 40 ஆண்டுகளுக்கு பெறப்பட உள்ளது. இதனால் வரும் காலங்களில் போதிய அளவு மின்சாரம் தங்குதடையின்றி இருந்து கொண்டே இருக்கும்’ என்றார்.