‘‘தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’’ புத்தகத்தினை வாங்கி, மக்கள் மத்தியில் பரப்பவேண்டும்! இது புத்தகம் வாங்குவதல்ல; புத்தி வாங்குவது – புத்தியைக் கொள்முதல் செய்வது!
சென்னை, ஜூலை 4- ‘‘தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’’ புத்தகத்தினை வாங்கி, மக்கள் மத்தியில் பரப்பவேண்டும். இது புத்தகம் வாங்குவதல்ல; புத்தி வாங்குவது. புத்தியைக் கொள்முதல் செய்வதாகும். பிரச்சாரக் களங்களுக்கான ஆயுதம் – போர் ஆயுதம் ‘மதயானை’ புத்தகம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘தேசிய கல்விக் கொள்கை
2020 எனும் மதயானை’’
கடந்த 29.6.2025 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய புத்தகத்தின் மக்கள் பதிப்பு (தமிழ், ஆங்கிலம்) மற்றும் மின்னூல் பதிப்பான ‘‘தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’’ என்ற நூலின் அறிமுக விழாவிற்குத் தலைமை தாங்கி, புத்தகத்தினை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
இன்றைக்குக் கத்திப்பாரா மேம்பாலத்தில் எந்தவித சிரமமுமின்றி பயணம் செய்கிறோம். இதனுடைய பெருமை எப்போது தெரியும்? பழைய சாலையில் பயணம் செய்தவர்களுக்குத்தான் தெரியும்.
வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும் மும்மொழிக் கொள்கைத்
திணிப்பை எதிர்க்கிறார்கள்!
இன்றைக்கு உலகம் முழுவதும் பயணம் செய்கிறோம். நம்மாட்கள் எல்லா இடங்களிலும் நம்மை வரவேற்கிறார்கள். ஜப்பானுக்கு அமைச்சர் செல்கிறார். அங்கே உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.
அண்மையில், பிரச்சாரத்திற்காக ஆஸ்திரேலி யாவிற்குச் சென்றோம். அங்கே நடைபெற்ற பெரியார் – அண்ணா விழாக்களில் பங்கேற்றோம். கூட்டம் முடிந்ததும், எங்களை அப்படியே நில்லுங்கள் என்றனர்.
எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘‘தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையைத் திணிப்பதை நாங்களோ, எங்கள் வாரிசுகளோ ஏற்கமாட்டோம்’’ என்று அங்கே உள்ளவர்கள் உணர்ச்சிவயப்பட்டு சொல்கின்றனர்.
‘‘நாங்கள் எல்லாம் இருமொழிக் கொள்கைப்படி படித்துத்தான் இங்கே வந்திருக்கின்றோம்’’ என்றனர்.
மும்மொழி என்பது என்னவென்றால், முழுக்க முழுக்க சமஸ்கிருதத் திணிப்புதான். இது வெறும் மொழிப் பிரச்சினை அல்ல நண்பர்களே! இது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு.
இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு என்பது மிகவும் ஆபத்தானதாகும்.
எனவேதான், அந்தப் பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்து இப்படிப்பட்ட பல நூல்கள் வெளிவரவேண்டும். மத யானைகளை விரட்டுவோம்; மத யானைகளுக்கு இங்கே இடம் கிடையாது. இது அரசியலுக்காகவோ, பதவிக்காகவோ அல்ல நண்பர்களே!
அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை….
இந்திய அரசமைப்புச் சட்டம், அண்ணல் அம்பேத்கர் அவர்களால் எழுதப்பட்டது. அந்தக் குழுவிலும் பார்ப்பனி யம் புகுந்தது.
அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் என்ன எழுதியிருக்கிறார்கள்,
‘‘We, the People of India’’ என்று தொடங்குகிறது. இந்திய மக்களாகிய நமக்கு நாமே வழங்கிக் கொண்டது.
‘‘அரசமைப்புச் சட்டத்திற்குத்தான்
அதிக அதிகாரம்!’’
இன்றைக்கு உச்சநீதிமன்றம் தலையில் குட்டு வைத்து, சொல்ல வேண்டியவர்களுக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லியிருக்கிறது. அது என்னவென்றால், ‘‘நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் இருக்கிறதா? அரசமைப்புச் சட்டத்திற்கு அது இருக்கிறதா?’’ என்றால், ‘‘அரசமைப்புச் சட்டத்திற்குத்தான் அதிக அதிகாரம் இருக்கிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய பா.ஜ.க. அரசைச் சேர்ந்த சிலர், அர்த்த மில்லாமல் கூறுவதற்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பதில் சொல்கிறார், ‘‘நாடாளுமன்றம் பெரி தல்ல; இந்திய அரசமைப்புச் சட்டமே பெரிது’’ என்றார்.
இந்திய அரசமைப்புச் சட்டம் இருக்கக்கூடாது; அதற்குப் பதில் மனுதர்மம் வரவேண்டும் என்று சொல்கி றார்கள். இதற்காகத்தானே போராட்டம் நடைபெறுகிறது.
ஏன் இந்தியா கூட்டணி சிதறவேண்டும் என்று நினைக்கிறார்கள் தெரியுமா?
ஏன், தி.மு.க. ஆட்சி இருக்கக்கூடாது? என்கிறார்கள்; ஏன் இந்தியா கூட்டணி சிதறவேண்டும் என்று நினைக்கிறார்கள் தெரியுமா? அவர்களுடைய நோக்க மெல்லாம், இந்த ஆட்சி இருந்தால், எல்லோரையும் படிக்கச் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, பெண்கள் படிக்கிறார்கள்.
வரலாற்றிலேயே, பெண்கள் படிப்பது என்பது அவ்வளவு சாதாரணமானதல்ல. படிக்கின்ற பெண்களை ஊக்கப்படுத்தினார்கள். படிப்படிப்படியாக வந்தது.
சொன்னதை மட்டுமல்லாமல், சொல்லாததையும் செய்கிறது ‘திராவிட மாடல்’ அரசு!
எட்டாவது வரை இலவச படிப்பு; 10 ஆம் வகுப்பு இலவச படிப்பு; கல்லூரியில் இலவச படிப்பு. இவை எல்லாவற்றையும் தாண்டி, இன்றைய நம்முடைய முதலமைச்சர் அவர்கள், சொன்னதை செய்ததோடு மட்டுமல்லாமல், சொல்லாததையும் செய்யக்கூடிய அளவிற்குச் சாதனைகளைச் செய்திருக்கின்றார்.
கல்லூரிச் செல்லும் பெண்களுக்கு மாதாமாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பது என்பது ஒருபுறம்.
மனுதர்மத்தினால் உருவாக்கப்பட்டிருந்தது!
பெண் குழந்தை பிறந்தால் என்னாவது? என்று நினைத்திருந்த காலம் இருந்தது. பெண் குழந்தையை, பெண்களே வெறுக்கக்கூடிய அளவிற்கு ஒரு சமுதாயம், மனுதர்மத்தினால் உருவாக்கப்பட்டிருந்தது. பெண்களை, அடிமைகளுக்கும் கீழே வைத்திருந்தார்கள்.
அம்பேத்கர் அவர்கள் அழகாகச் சொன்னார், ‘‘கிரேடெட் இன் இக்குவாலிட்டி’’ என்று.
தலையில் பிறந்தவன், தோளில் பிறந்தவன், தொடையில் பிறந்தவன், காலில் பிறந்தவன்; அதற்கும் கீழே பஞ்சமர். அதற்கும் கீழே ஒரு பிரிவு இருக்கிறது – அதுதான் எல்லா பெண்களும், உயர்ஜாதிப் பெண்கள் உள்பட.
பெண்களை இந்த அளவிற்குக் கொச்சைப்படுத்தும் ஒரு சமுதாயம் இருந்தது.
அந்த மனநிலையை மாற்றிய ஆட்சி, இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சி.
படிக்கும் பெண்களுக்குப் பரிசு!
பெண்கள், எட்டாம் வகுப்புவரை படித்தால், திருமணத்தின்போது பரிசு கொடுக்கிறோம் என்று கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது சொன்னார்.
கல்லூரிக்குப் போனால், அங்கே இலவசமாகப் படிப்பதோடு மட்டுமல்ல; மாதாமாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் அரசு கொடுக்கிறது. ‘‘அய்ந்து பெண்களைப் பெற்றால், அரசனும் ஆண்டியாவான்’’ என்று ஒரு பழமொழி உண்டு.
ஆனால், இன்றைக்கு அய்ந்துப் பெண் குழந்தை களைப் பெற்றால், யாரும் ஆண்டியாகவேண்டிய அவசியம் இல்லை.
‘‘மேலே ஒருவர் இருக்கிறார் அவர் பார்த்துக் கொள்வார்’’ என்று சொல்வார்கள். அவர் எங்கே இருக்கிறார் என்றால், கோட்டையில் இருக்கிறார். அவர் பார்த்துக் கொள்வார் என்பதுதான் இன்றுள்ள நிலையாகும்.
அய்ந்து பெண் குழந்தைகளுக்கும் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் மாதாமாதம் கிடைக்கக்கூடிய நிலை இருக்கிறது.
‘‘தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை
சிலைபோல ஏனங்கு நின்றாய் – நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்’’
என்று சொன்னார்.
அதே புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இன்று இருந்திருந்தால், கவிதையை மாற்றி எழுதியிருப்பார்.
ஏனென்றால், பள்ளிக்கூடத்திற்குப் போவதற்கு பெண்கள் யோசனை செய்தார்கள். சாப்பிடுவதற்கு மறுத்தார்கள். ஓடி ஓடி, அவர்களுக்கு உணவு ஊட்டி னார்கள் தாய்மார்கள்.
ஆனால், இன்றைக்கு அந்த நிலை இல்லையே!
பள்ளிக்கூடத்தில் காலைச் சிற்றுண்டி திட்டத்தால், எல்லா மாணவர்களும் அமர்ந்து சாப்பிடுகிறார்கள்.
இந்த சமுதாய மாற்றத்தைச் செய்தது எது?
திராவிட மாடல் ஆட்சி!
அதற்குக் காரணமான தலைவர் யார்?
அறிவாசான், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரி யாரால் உருவாக்கப்பட்ட அண்ணா, கலைஞர், இன்றைய முதலமைச்ர் என்று பாரம்பரியமாக வரக்கூடிய அளவிற்கு இந்த வாய்ப்புகள் பெருகிக் கொண்டிருக்கின்றன.
இதுபோன்ற நிலையை ஒழிக்கவேண்டும் என்ப தற்காகத்தான், புதிய தேசியக் கல்விக் கொள்கைத் திட்டம்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தை
ஏன் வெறுக்கிறார்கள் தெரியுமா?
இந்த நூல் – நூல் என்று சொன்னால் சிக்கல்தான். நூல்களால் ஏற்பட்ட சிக்கலை, இந்தப் புத்தகம் தீர்க்கின்ற வாய்ப்புகளை அமைச்சர் அவர்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கின்றார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏன் வெறுக்கிறார்கள் தெரியுமா? அதன் முகவுரையில்,
‘‘Sovereign, Socialist, Secular, Democratic Republic’’
ஜனநாயகக் குடியரசு என்று ஆக்கினார் அம்பேத்கர் அவர்கள். அதுவும் எப்படிப்பட்ட ஜனநாயகக் குடியரசு என்றால், சமதர்ம, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு.
மேற்கண்ட இரண்டையும் (சமதர்ம, மதச்சார்பற்ற) தூக்கி எறியவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார்கள்.
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி முட்டுக் கொடுக்கப்படுவதால்தான் தொடர்கிறது!
நல்ல வாய்ப்பாக, ஒன்றியத்தில் பா.ஜ.க.விற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி நாற்காலியில் இரண்டு கால்களாக பீகாரில் நிதிஷ்குமாரும், ஆந்திரா வில் சந்திரபாபு நாயுடுவும் முட்டுக் கொடுத்துக் கொண்டி ருக்கிறார்கள்.
இந்தியாவிற்கே விழிப்புணர்வுக் கொடுக்கின்ற ஒரே ஆட்சி, தமிழ்நாட்டில் நடைபெறும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான்.
இந்த ஆட்சிதான், ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியினருக்குச் சவாலாக இருக்கிறது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் எழுதிய இந்தப் புத்தகத்தை, முதலமைச்சர் வெளியிடுகிறார்.
நோயைக் கண்டுபிடிப்பதற்கு, மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று சொல்வார்கள். ஆனால், இப்போது நம்மாட்களே, ‘‘டாக்டர், என் உடலில், என்ன பிரச்சினை என்று கண்டுபிடித்துவிட்டீர்களா? எதற்கும் ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்க்கலாமா?’’ என்று நோயாளியே சொல்கிறார்.
அதுபோல, ஒன்றிய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஸ்கேன் செய்த டாக்டர் (அமைச்சர்) இங்கே இருக்கிறார்.
இதை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லக்கூடிய வாய்ப்பை உருவாக்கவேண்டும்.
திராவிடத்திற்கும் – ஆரியத்திற்கும் உள்ள வேறுபாடு!
எனவே, இந்த ஆட்சி பாதுகாக்கப்படவேண்டும். அது முதலமைச்சர் ஸ்டாலினுக்காக அல்ல; திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக அல்ல; திராவிட இயக்கத்திற்காக அல்ல; எங்களுக்காக அல்ல. உங்கள் பேரப் பிள்ளைகளின் மான வாழ்வுக்கும், உரிமை வாழ்வுக்கும்தான்.
கல்வி தானே கண் போன்றது. அதை எல்லோ ருக்கும் கொடுக்கவேண்டும் என்பதுதானே திராவிட இயக்கம்.
அந்தக் கல்விக் கண்ணே கூடாது என்று சொல்வதுதானே ஆரியம் – அதுதானே வைதீகம் – அதுதானே மனுதர்மம்.
ஆகவேதான், இவற்றை மாற்றவேண்டுமானால், துணிந்து இந்தப் புத்தகத்தை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு செல்லவேண்டும்.
‘மத யானை’ புத்தகம் ஒரு போர் ஆயுதம்!
ஊடகங்கள் அவர்களின் வசம் இருக்கலாம்; அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். மக்கள் மத்தியில் சொல்லவேண்டும். அதற்குரிய ஆயுதங்கள் வேண்டும் என்றால், அதுதான் மதயானை – இதுதான் போர் ஆயுதம்.
பிரச்சாரக் களங்களுக்கு ஆயுதம் இது.
எனவே, இது புத்தகம் வாங்குவதல்ல; புத்தி வாங்குவது.
புத்தியைக் கொள்முதல் செய்யுங்கள்.
பாராட்டு, நன்றி!
சில பேர் யுக்தியைக் கையாளுகிறார்கள். இது முழுக்க முழுக்க புத்தியை நம்பிக் கொண்டிருக்கிறது. ஆகவே, அந்த யுக்திகளை எடுத்துச் சொல்லி, புத்தியை மக்கள் மத்தியில் பரப்பிய, மூன்றாவது தலைமுறையான நம்முடைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கும், அவருக்குத் துணை நிற்கின்ற தோழர்களுக்கும், அவரை இவ்வளவு தைரியப்படுத்தி, ஆளாக்கியவர், தன்னுடைய ஆசான் என்று அன்பில் மகேஸ் அவர்கள் என்றும் நன்றி உணர்ச்சியோடு, தவறாமல் சொல்லக்கூடிய அளவில் இருக்கக்கூடிய ஒருவர், நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர், நாள்தோறும் தன் உழைப்பைக் கொண்டிருக்கக் கூடிய முதலமைச்சர், வேறு எந்த மாநிலத்திலும் காண முடியாத முதலமைச்சர் அவர்களுக்கும் நமது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அண்மையில்கூட ஒரு புத்தகம் வெளிவந்திருக்கிறது நண்பர்களே, ‘Unequal’ என்ற தலைப்பில், மிகப்பெரிய அளவிற்கு ஆய்வு செய்து எழுதியிருக்கின்றார் ஓர் அம்மையார்.
இந்தியாவை, மற்ற நாடுகளோடு ஒப்பிட்டு இருக்கிறார். இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா, பின்தங்கி இருக்கிறது. ஆனால், இதற்கு விதிவிலக்காக இரண்டே இரண்டு மாநிலங்கள் இருக்கின்றன.
ஒன்று, தமிழ்நாடு.
இன்னொன்று கேரளா.
காரணம் என்னவென்று சொன்னால், இந்த ஆட்சி யைப்பற்றி ‘‘சூப்பர் மாடல்’’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்.
கல்வியில், தமிழ்நாடுதான் முன்னணியில் இருக்கிறது.
மருத்துவத்தில் முன்னணியில் இருக்கிறது.
சமூகநலத்தில் முன்னணியில் இருக்கிறது.
ஜாதி ஒழிப்பிலும் முன்னணியில் இருக்கிறது.
அண்மையில்கூட, திருவில்லிபுத்தூரில், சில அர்ச்சகர்கள் குடித்துவிட்டு, ஆடுகிறார்கள் என்ற செய்தி வெளிவந்தது.
முருக பக்தர்கள் மாநாடு பயன்படவில்லை என்பதால், இரண்டு நாள்கள் கழித்து, யோசனை செய்து என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
பொய்ப் பிரச்சாரத்தினை செய்தனர்!
‘‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் திட்டத்தில் பயின்று, யாருக்குப் பணி நியமனம் வழங்கினார்களோ, அவர்கள்தான் குடித்துவிட்டு, ஆடினார்கள்’’ என்று பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள்.
ஆடிய நான்கு பேரில், மூன்று பேர் ‘மேற்படியான்’ என்பதில் சந்தேகமேயில்லை.
நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன், நான்கு பேருமே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் திட்டத்தால் பணியானை வாங்கியவர்களாகவே கூட இருக்கட்டும்.
காஞ்சிபுரம் தேவநாதன்!
உங்களுக்கெல்லாம் காஞ்சிபுரம் நினைவில் இருக்கிறதா? அங்கே மச்சேச பெருமாள் கோவில் ஞாபகம் இருக்கிறதா? அதில் தேவநாதன் ஒருவர் இருந்தாரே, அவர் என்ன செய்தார்?
அவர் யாரால், நியமிக்கப்பட்டவர்?
அப்போது மு.க.ஸ்டாலின் ஆட்சியா இருந்தது? அப்போது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியா இருந்தது?
ஏண்டா, எங்களிடம் கேள்வி கேட்கிறாயே, இந்த நாட்டில் கேள்வி கேட்கக்கூடிய அறிவைச் சொல்லிக் கொடுத்ததே, இந்த இயக்கம்தான்.
ஆகவே, அப்படிப்பட்ட ஓர் இயக்கம், மக்கள் மத்தியிலே இந்தக் கருத்தைப் பரப்பிக் கொண்டிருக்கின்றது.
திராவிடம் வெல்லட்டும் – என்றைக்கும் வரலாறு அதைச் சொல்லட்டும்!
எனவேதான், இந்தப் பணி ஓங்கட்டும்!
இந்தப் பிரச்சாரம் நாடெங்கும் பாயட்டும்!
புயல்போல், சூறாவளியாக நிற்கட்டும்!
திராவிடம் வெல்லட்டும்!
என்றைக்கும் வரலாறு அதைச் சொல்லட்டும், சொல்லட்டும்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.