சென்னை, ஜூலை 3- சாலையோரங்களில் உள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகள் ஆகியவற்றில் ஏற்படும் மின் கசிவுகளால் விபத்துகளும், அதனால் சில உயிரிழப்புகளும் ஏற்படுவதை அவ்வப்போது பார்க்கிறோம்.
விபத்துகள்
அதிலும் மழை காலங்களில் இதுபோன்ற விபத்துகளினால் உயிரிழப்புகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இதனை தடுக்க தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது.
சென்னையை பொறுத்தவரையில், பெரும்பாலான பகுதிகளில் மின்கசிவு ஏற்படாதபடி, மின்கம்பங்கள் இல்லாமல் புதைவட கம்பிகள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. இதுபோல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் ஆங்காங்கே சில இடங்களில் மின்சாரம் தாக்கி விபத்துகள் ஏற்படுகிறது.
‘தொடாதீர் ஆபத்து’
இதனை தடுக்கும் விதமாக தமிழ்நாடு மின்சார பகிர்மானக் கழகம் “தொடாதீர் ஆபத்து” என்ற தலைப்பில் மின்கசிவு தொடர்பாக புகார் அளிக்க எண்ணை சமூக வலைதளங்கள் வாயிலாக பிரபலப்படுத்தி வருகிறது. இதன் மூலம் புகார்தாரர்கள் தங்கள் பகுதியில் மின் இணைப்பு கம்பிகள் அறுந்து விழுந்து கிடந்தாலோ, மின்மாற்றிகளில் மின்கசிவு ஏற்படுவதை உணர்ந்தாலோ ‘9498794987’ என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில்
13 கால்நடை காப்பகம் கட்டும் பணி தீவிரம்
சாலையில் திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை
சென்னை, ஜூலை 3 சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு கால்நடை காப்பகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
காலநடைக் காப்பகம்
முதலமைச்சரின் உத்தரவின்படி, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மேயர் ஆர்.பிரியா ஆலோசனையின்படியும், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு கால்நடை காப்பகம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
ரூ.19.44 கோடி மதிப்பீட்டில்
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கால்நடை காப்பகங்கள் அமைக்கும் விதமாக, மூலதன நிதியின் கீழ், திருவொற்றியூர்-டி.பி.பி.சாலை, மணலி-செட்டிமேடு பகுதி, மாதவரம்-சி.எம்.டி.ஏ. லாரி முனையம், தண்டையார்பேட்டை-செல்லவாயல், இராயபுரம்-பேசின் பாலச் சாலை மற்றும் மூர் மார்க்கெட் பகுதி, அண்ணாநகர்-செனாய் நகர், தேனாம்பேட்டை-பீட்டர்ஸ் சாலை, கோடம்பாக்கம்-காந்தி நகர், வளசரவாக்கம்-நொளம்பூர், யூனியன் சாலை, ஆலந்தூர்-பி.வி.நகர், பெருங்குடி-வீரபாண்டிய கட்டபொம்மன் குறுக்குத் தெரு மற்றும் தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலை, சோழிங்கநல்லூர்-பயோ சி.என்.ஜி. நிலையம் என மொத்தம் ரூ.19.44 கோடி மதிப்பீட்டில் 13 கால்நடை காப்பகங்கள் அமைக்கப்படுகிறது.
இதில் இராயபுரம் மண்டலம், வார்டு-53க்குட்பட்ட பேசின் பிரிட்ஜ் சாலையில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் 33,139 ச.அ. பரப்பளவில் 18,167 ச.அ. பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்ட கால்நடை காப்பகம் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களால் 11.06.2025 அன்று திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கால்நடை காப்பகமானது பல்வேறு வசதிகளுடன் 240 கால்நடைகளை பராமரிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. மேலும், இதில் கால்நடை மருத்துவர் அறை, பராமரிப்பாளர் அறை, கட்டுப்பாட்டு அறை, மருந்துகள் வைப்பு அறை, 12 கண்காணிப்புக் கேமராக்கள், மின் வசதி, மின் விசிறி வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பராமரிப்புக் கட்டணம்
ஒரு கால்நடைக்கு நாளொன்றுக்கு ரூ.10/- பராமரிப்புக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கால்நடை காப்பகத்தினை 14,972 ச.அ. பரப்பளவில் விரிவுப்படுத்தி, கூடுதலான கால்நடைகளைப் பராமரிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதர மண்டலங்களில் நடைபெறும் கால்நடை காப்பகங்கள் கட்டும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கால்நடை காப்பகங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் நடவடிக்கையின் வாயிலாக சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் பெரிதும் கட்டுப்படுத்தப்படும்.