புயலின் தாக்கு தலுக்கு தயாராக இருப் பதற்குப் பதிலாக, அவை வேகமெடுப்பதற்கு முன்பே நிறுத்த முடிந்தால் எப்படி யிருக்கும்?
ஆஸ்திரேலிய தேசிய பல்கலை பருவ நிலை விஞ்ஞானிகள் ஒரு துணிச்சலான உத்தியை முன்வைக்கின்றனர். அதாவது, கடல் புயல்கள் நிலத்தை அடையும் முன்பே அவற்றை பலவீனப்படுத்துவது மட்டுமல்ல, தடுக்கவும் செய்யலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.
எப்படி? புயல் உருவாக அவசியமான, சூரிய ஒளியைத் தடுக்கும், நுண் துகள்களை வளிமண்டலத்தில் துாவுவதுதான் உத்தி.
இந்தத் துகள்கள், ‘ஸ்ட்ராடோஸ்பியரிக் ஏரோசல்’ என்று அழைக்கப்படுகின்றன, இவற்றை துாவினால், சூறாவளிகள் உருவாக வாய்ப்புள்ள பகுதிகளில், வளிமண்டலத்தின் மேல் அடுக்கு, சற்றே குளிர்ச்சியடையும்.
இந்த முறை, கடலின் மேற்பரப்பின் வெப்பநிலையை சற்றே குறைத்து, சூறாவளியின் ஆரம்பகால வளர்ச்சியை சீர்குலைக்கலாம் என்று, கணினி ஒத்திகைகள் (சிமுலேஷன்) காட்டுகின்றன. இது நெருப்பிற்கு ஆக்சிஜனை மறுப்பது போன்றது.
இந்த யோசனை, இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. இருப்பினும், இது ‘காலநிலை பொறியியல்’ (climate engineering) அல்லது புவி பொறியியல் (geoengineering) எனப்படும் வளர்ந்து வரும் துறையின் ஒரு பகுதியாகும். திட்டமிட்ட, மனிதத் தலையீடுகள் மூலம், தீவிர காலநிலை நிகழ்வுகளில், மாறுதல்களை ஏற்படுத்தும் உத்திகள் இவை.
வெப்பமயமாதல் காரணமாக சூறாவளிகள் மிகவும் அழிவுகரமானதாகவும் அடிக்கடி நிகழக்கூடியதாகவும் மாறி வருகின்றன. இதனால், புயல்கள் அதிக உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் நாசமாக்கும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதற்கு முன் பாதுகாப்பு உத்திகளை ஆராய்வது அவசியம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.