மானத்தையும், அறிவையும் தந்த தலைவருக்கு உருவாக்கப்படும்  ‘‘பெரியார் உலகத்திற்கு’’ நிதியைத் தாரீர்! நிதியை திரட்டுவீர், தோழர்களே!

viduthalai
3 Min Read
* வண்டிக்கார மகனாகப் பிறந்து – மண்டிக்கார தனயனாக வளர்ந்து – திரண்ட சொத்துகளை நாட்டுக்கே அளித்துச் சென்றவர் தந்தை பெரியார்!
* காலத்தை வென்று நிலைத்து நிற்கும் ‘‘பெரியார் உலகத்தை’’ உருவாக்கிட
பல திசைகளிலிருந்தும் நிதிகள் வருவது மகிழ்ச்சிக்கும், நன்றிக்கும் உரியது!
ஆசிரியர் அறிக்கை

தனது சொத்தையெல்லாம் மக்களுக்கே அளித்ததுடன், மான உணர்வையும், அறிவையும் நமக்கு வழங்கிச் சென்ற தந்தை பெரியாருக்கு, காலத்தை வென்று நிலைக்கக் கூடிய ‘‘பெரியார் உலக’’த்திற்கு நன்றி உணர்வுள்ள மக்கள் நிதியைக் குவிக்கின்றனர்.  மேலும் மேலும் நிதி தேவை என்ற நிலையில், நிதியைத் தாரீர்! நிதியை திரட்டுவீர்!! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பெரியார் உலக நிதி திரட்டலில் நாளும், நாளும் நமக்கு உற்சாகமும், உவகையும் பெருகுகிறது.

மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம்!

காரணம், நாம் சற்றும் எதிர்பாராத திக்குகளிலிருந்து அறிவு ஆசானின் அப்பழுக்கற்ற தொண்டறத்தின் விழுமிய பயனை நுகர்ந்தோர், ‘நன்றிக் காணிக்கை’ என்று எண்ணி, தத்தம் பங்களிப்பை –  கொள்கைக் குடும்பத்தினர் அள்ளி அள்ளித் தந்து, பெரியார் உலகத்தின் அடிக்கட்டுமானமாய் தருவது கண்டு, மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம்.

இன்னும் ஓரிரு மாதங்களில் ‘இரண்டு கோடி ரூபாய் இலக்கு’ என்ற திட்டத்தைத் தந்து, பெரியார் உலகத்தின் நிறைவேற்றத்திற்கான பெரும்பணி, எவ்வித சுணக்கமும் இன்றி, வீரநடை போடவேண்டும்.

‘‘‘நன்றி’ என்பது பயனடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பு’’ என்றாரே, அய்யா!

அதை அவரது நன்றிக்குரியவர்கள் காட்ட ஓர் அரிய தருணம் அல்லவா?

தருபவரின் மகிழ்ச்சி, பெறுபவரின்
மன மகிழ்ச்சியைவிட மிக அதிகம்!

கருநாடக மாநில அரசின் குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளராக பல ஆண்டுகள் பணியாற்றி, ஓய்வு பெற்ற பெரியவர் அய்யா கமலக்கண்ணன் அவர்களும், அவருடன் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சக நண்பர்களும் பெரியார் திடலுக்கு இதற்கென வந்து, என்னைச் சந்தித்து மகிழ்ந்து, நம் பணியை மிகவும் ஊக்கப்படுத்தி உரையாடி, 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையைத் தந்து மகிழ்ந்தனர்.

ஈகையில் தனிச் சிறப்பு என்ன தெரியுமா?

ஈதல் இசைபட வாழ்தலையும் தாண்டி, தருபவரின் மகிழ்ச்சி, பெறுபவரின் மன மகிழ்ச்சியைவிட மிக அதிகம்.

ஆசிரியர் அறிக்கை

இதை வள்ளுவரும், மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார்.

தனது சொந்த சொத்து, தனக்கு வந்த சொத்து, பெருக்கிய சொத்து எல்லாவற்றையும் பாதுகாத்து, எதையும், தனக்கோ, தன் குடும்பத்திற்கோ விட்டு விட்டுச் செல்லாமல், அதனை அறக்கட்டளையாக்கிய தந்தை பெரியார், ஈகையின் இமயம்!

‘‘மானமும், அறிவும்’’ அளப்பரிய நிரந்தர சொத்து!

அவர் தந்த பொருள் – சொத்தைவிட, ‘‘மானமும், அறிவும்’’ அளப்பரிய நிரந்தர சொத்து அல்லவா, மனித குலத்துக்கு?

சுயமரியாதை இயக்கம், ‘குடிஅரசு’ போன்ற ஏடுகள் தொடக்கம் – அந்நாளை இயக்கச் செயல்பாடுகள் எல்லாம் – வண்டிக்கார வெங்கட்ட நாயக்கரின் மக னாகப் பிறந்து, மண்டிக்கார தந்தையின் தனயனாகிய பின், தானே சம்பாதித்த பொருள், எதற்காக, யாருக்காகப் பயன்பட்டது என்பதை எண்ணிப் பாருங்கள் தோழர்களே, பெருமக்களே!

அவருக்கோ, அவரது வாழ்க்கை வாரிசாக தன்னையே தியாகம் செய்த அன்னை மணியம்மை யாருக்கோ அல்ல!

நிரந்தர சொத்து!

மக்களுக்காக, மக்களுக்காகவே! அதனால், பெரும் முதுபெருங்குடி மக்கள்முதல் பள்ளி, கல்லூரி செல்லும் பள்ளி மாணவர் (மதுரையிலிருந்து ஒரு கடிதம் 2 ஆம் பக்கம் காண்க) வரை நன்றியின் நனி நாயகத்தை மழையாய்ப் பொழிந்து, நாளைய வரலாற்று இலட்சியப் பயிர் விளையும் கழனியின் வெற்றிச் சின்னமாம் ‘பெரியார் உலகம்’ அமைந்திட, தங்களது நன்றியை காணிக்கையாக்கி, நம் கண்களை மகிழ்ச்சி ஊற்றுகளாக்குகின்றன!

நம் தந்தை அறிவாசான் கேட்டபோது, அவரது இலக்கைத் தாண்டி தந்த மக்களுக்கே அவற்றைப் பாதுகாத்துத் தந்தார் – சென்றார் – வென்றார்!

அதே உணர்வால், அவரது எளிய தொண்டர்கள் அள்ளிக் கொடுத்து, துள்ளி மகிழ்கின்றனர்; என்னைப் போன்ற இயக்கப் பொறுப்பாளர்கள் மக்களுக்குக் கடன்பட்டுள்ளோம்.

மனிதனை அளக்கும் கருவி நன்றியே!

மானம் பாரா கடமையாற்றி, கடனைத் தீர்ப்போம்!

வளரட்டும் ‘பெரியார் உலகம்’ –

குவியட்டும் அதற்கான நிதி!

பெருகட்டும் நன்றி உணர்வு!

கழகப் பொறுப்பாளர்களே, மேலும் உழையுங்கள்!

சிறந்த மனிதர்களை அளக்கும் கருவி – அவர்களது நன்றி உணர்வுதானே!

நமது நன்றி! நன்றி!!நன்றி!!!

 கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

 

சென்னை  
3.7.2025     

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *