காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம் வழக்கு விசாரணையை சிபிஅய்க்கு மாற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு அஜித்குமார் குடும்பத்தினரிடம் வருத்தம் தெரிவித்தார்

Viduthalai
2 Min Read

தமிழ்நாடு

சென்னை, ஜூலை 2  “அஜித் குமார் கொலை வழக்கில் காவல் துறையைச் சேர்ந்த 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான அய்யப்பாடும் எழுப் பப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை சிபிஅய்-க்கு மாற்றிடுமாறு உத்தரவிட்டுள்ளேன். சிபிஅய் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விசாரணை கைதி மரணம்

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், கடந்த ஜூன் 28-ஆம் தேதி அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்பவர், திருப்புவனம் காவல் நிலையத்தில் திடீரென  மரணம் அடைந்தார். விசாரணையின் போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்பதை அறிந்ததும் நான் மிகவும் வேதனையடைந்தேன். இது யாராலும் நியாயப்படுத்தப்பட முடியாத, காரணம் சொல்லித் தப்பிக்க முடியாத செயல்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்ட 6 காவலர்கள் உடனடியாகச் சம்பவம் நடந்த அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இத்தகைய வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகளின்படி, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை சிபிசிஅய்டி பிரிவுக்கும் மாற்றப்பட்டது.

இன்று சம்பந்தப்பட்ட மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப் பட்டுள்ளார். துணைக் கண்காணிப்பளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப்படி சட்டபூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

சி.பி.அய். விசாரணை

துயர மரணத்தை அடைந்துள்ள அஜித்குமாரின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு நான் பேசினேன். நடைபெற்ற துயரச் சம்பவத்துக்கு எனது வருத்தத்தை அவர்களிடம் தெரிவித்தேன். நியாயமான, ஒளிவு மறைவற்ற, எவ்வித பாரபட்சமுமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அஜித் குமாரை இழந்து வாடும் அவரது குடும் பத்தினருக்கு நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும் என்றும் உறுதி யளித்துள்ளேன்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இவ்வழக்கில் சிபிசிஅய்டி தனது விசாரணையைத் தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவத்தில் காவல் துறையைச் சேர்ந்த அய்வர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான அய்யப்பாடும் எழுப்பப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை சிபிஅய்க்கு மாற்றிடுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். சிபிஅய் விசார ணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும்.

காவல் துறையினர் தங்களது விசாரணையின்போது மனித உரிமையைக் காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை நான் பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன். இதுபோன்ற மீறல் சம்பவங்களை நான் எப்போதும் ஏற்றுக்கொள்வது இல்லை. திருப்புவனத்தில் சில காவலர்கள் செய்த செயல், மன்னிக்க முடியாதது. இனி இதுபோன்ற செயல் எக்காலத்திலும் எங்கும் யாராலும் நடந்துவிடக் கூடாது என்பதை எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன்.

தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திடும் என நம்பி காவல் துறையை நாடி வரும் பொதுமக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றிடும் வகையில் காவல்துறை எப்போதும் செயல்பட வேண்டும்,” என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *