1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது. அய்யாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது நடந்த தகைமையாளர்கள் – மறைந்தும் மறையாதவர்களான அவர்களது வாழ்வினை இன்றைய தலைமுறையினர், இனிவரும் இளைஞர்கள் பலரும் படித்து பாடம் கற்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வரலாற்றுப் பாதை படம் பிடித்து காட்டப்படுகிறது.
- ‘‘இராவண காவியம்’’
புலவர் குழந்தை
இன்று (ஜூலை 1ஆம் தேதி)
புலவர் குழந்தை பிறந்த நாள்
தந்தை பெரியார் திருக்குறளுக்குப் பொருளுடன் உரை எழுத அமைத்த அறிஞர் குழுவில் முக்கியமானவர் புலவர் குழந்தை. திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்ட இராவண காவியம் திராவிட இயக்க வரலாற்றில் முக்கியப் பங்கு வகித்த ஓர் இன எழுச்சிக் காவியம்.
தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்ப் பண்பாடு முதலியவற்றை உயிர் மூச்சாய்க் கொண்ட புலவர் குழந்தை ஈரோடு நகரத்திற்கு அருகில் உள்ள ‘ஓலவலசு’ என்ற சிற்றூரில் 1906ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் – முத்துசாமி – சின்னம்மை.
திண்ணைப் பள்ளியில் கல்வி பயின்ற இவர் சிறு வயதிலேயே கவிபாடும் திறனைப் பெற்றிருந்தார். 1934இல் சென்னை பல்கலைக் கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார்.
இவரின் வாழ்க்கை ஆசிரியர் பணியில் தொடங்கியது. 38 ஆண்டுகள் அதில் தொடர்ந்தார். பவானி உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும் பணி செய்தார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம்
1938,1948 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகக் களம் இறங்கினார். பாடல்களாலும், மேடை பேச்சாலும் அருந்தொண்டாற்றினார். 1946ஆம் ஆண்டு முதல் 1958 வரை வேளாளர் இதழைத் தொடர்ந்து நடத்தினார்.
1948ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் இவர் ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்தது.
தந்தை பெரியார் திருக்குறளுக்கு பொருளுடன் உரை எழுத நாவலர் சோம சுந்தரம் பாரதியார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். அதில் முக்கியமானவர் புலவர் குழந்தை.
திருக்குறள்மீது புலவர் குழந்தைக்கு இருந்த ஆழ்ந்த புலமை காரணமாக இருபத்தைந்து நாட்களில் திருக்குறள் முழுமைக்கும் உரை எழுதி சாதனைப் படைத்தார். அது, ‘திருக்குறள்’ குழந்தையுரை’ என்ற பெயரில் வெளியானது.
‘யாப்பருங்கலக் காரிகை’ புரிந்து கொள்ள கடினமாகவும் இருந்ததால் அதை எளிதாக்கி ‘யாப்பதிகாரம்’ என்ற நூலை எழுதினார்.
பவணந்தி முனிவரின் நன்னூலை எளிமையாக்கி ‘இந்நூல்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். தொல் காப்பியம் பொருளதிகாரத்திற்கு இவர் எழுதிய முழு உரை தொல்காப்பியம் குழந்தை உரை நலம் தொடையதிகாரம் என்பது இவர் எழுதிய இலக்கண நூலாகும்
இராவண காவியம்
புலவர் குழந்தை அவர்களின் படைப்புகளில் முத்தாய்ப்பாக அமைந்தது இராவண காவியம். இக்காவியம் இராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டது. கம்பன் 12 ஆயிரம் பாடல்களுடன் இராமாயணத்தைப் பாடினான். அந்தப் பாடல்கள் திராவிடர்களை பழித்தும் ஆரியர்களை உயர்வாக சித்தரித்தும் அமைந்து இருந்தன.
புலவர் குழந்தை தனது பாடல்களில் ஆரியப் புரட்டை தோலூரித்துக், காட்டினார் திராவிடரை உயர்த்தி தமிழரின் இனமானத்தை புகழ்ந்துரைத்தார். இராவணனை காவியத் தலைவனாகவும் இராமனை வில்லனாகவும் மாற்றி புரட்சி ‘பா’ புனைந்தார். அய்ந்து காண்டங்களையும் 57 பாடல்களையும் 3,100 பாடல்களையும் உள்ளடக்கியதாக ‘இராவண காவியம்’ இருந்தது.
‘‘தமிழ்ப் புலவர்கள் எல்லாம் தமிழரை இழிவுபடுத்தும் புராணக் கதைகளையே பாடி வந்தார்கள். அதற்கு மாறாக இராவண காவியத்தைப் படைத்து இழிவைப் போக்கிய புலவர் குழந்தை அவர்களைப் பாராட்டுகிறேன்’’ 1971ஆம் ஆண்டு விழிப்புரத்தில் நடந்த கூட்டத்தில் தந்தை பெரியார் புலவர் குழந்தையை இவ்வாறு பாராட்டுகிறார்.
‘‘இராவண காவியம் பழமைக்குப் பயணச்சீட்டு புதுமைக்கு நுழைவுச் சீட்டு’’ என்று இராவண காவியம் நூலுக்கு அறிஞர் அண்ணா அணிந்துரை வழங்கி இருந்தார்.
1971இல் சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கட்சி நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் கருஞ்சட்டை அணிந்து வீர நடை போட்டு வந்தார்.
ஆரியர்களின் சமூக ஆதிக்கப் பண்பாட்டை தகர்த்தெறிந்த இராவண காவியம் 1948ஆம் ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.
அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இராவணன் புகழ் பாடி இராமன்மீது பொல்லாங்கு கூறுவதா? விட்டேனா பார்? என வீம்பு செய்து இராவண காவியத்தை தடை செய்து விட்டது.
காலம் மாறியது. 1971ஆம் ஆண்டு (தி.மு.க. ஆட்சியில்) ‘இராவண காவிய’த்திற்கு விதிக்கப்பட்ட அரசின் தடை நீக்கப்பட்டது.
மேலும் புலவர் குழந்தை யாப்பதிகாரம், தொடையதிகாரம் இன்னூல் இவை இலக்கணப் பாங்கில் அமைந்த நூல்கள்.
திருக்குறள் குழந்தையுரை. தொல்காப்பிய பொருளதி காரம் குழந்தையுரை, நீதிக் களஞ்சியம் ஆகியவை உரை நூல்களாகும்.
தொல் காப்பியர் காலத் தமிழர் வாழ்க்கைப் பண்பு நலன்களை ஆராய்ந்து தொல்காப்பியர் காலத்துத் தமிழர் என்ற நூலை எழுதினார்.
தமிழ் எழுத்து சீர்திருத்தம், திருக்குறளும் பரிமேலழகரும், தமிழர் வரலாறு, தீரன் சின்னமலை, சங்கத் தமிழ்செல்வம், அண்ணல் காந்தி உள்ளிட்ட பல உரைநடை நூல்களும் எழுதி உள்ளார். மொத்தம் 34 நூல்களை எழுதியுள்ளார்.
புலவர் குழந்தை அவர்களின் நூல்கள் 2006இல் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன.
‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற எழுத்துக்கான அச்சு கட்டைகளை செய்து, வேட்டி துண்டு, சேலைகரைகளில் அச்சிட்டு தமிழ்நாடு முழுவதும் பரப்பினார்.
1972ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 22ஆம் நாள் தனது 66 வயதில் காலமானார்.