சிறீவில்லிபுத்தூர் கோயிலில் ஆட்டம் போட்ட அர்ச்சகர் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் தேர்வானவரா? அண்டப் புளுகு!
தமிழ்நாடு அரசு மறுப்பு
சென்னை, ஜூலை 1- விருதுநகர் மாவட்டம் சிறீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அர்ச்சகராக பணியாற்றும் அர்ச்சகர்கள் கும்பலாக போதையில் ஆட்டம் போட்டதாகவும், கோவிலுக்கு வந்த பெண்கள் மீது விபூதி அடித்ததாகவும் ஒரு காட்சிப் பதிவு (வீடியோ) சமூகவலைத்தளங்களில் பரவியது. இது காண்போரை கடுமையான அதிருப்தியடையச் செய்தது.
இந்தநிலையில், “அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தால் அர்ச்சகர் ஆனவர்கள், போதையில் நடனமாடுவதாக” சமூக வலைத்தளத்தில் வீடியோ காட்சி பகிரப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், “இது திரிக்கப்பட்ட தகவலாகும். வீடியோவில் வரும் கோமதி விநாயகம் என்பவர் தக்கார் தீர்மானத்தின் அடிப்படையில் 20.12.2024 அன்று தற்காலிக அர்ச்சகராக நியமிக்கப்பட்டவர். தற்போது அவர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்று சிறீவில்லிப்புத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் விளக்கமளித்து உள்ளார். இவரை அனைத்து ஜாதியினர் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் வந்தவர் என்று திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகின்றனர்” என்று கூறப்பட்டு உள்ளது.