இந்த வாரம் வெளிவந்த ‘துக்ளக்’ ஏட்டில் முருக பக்தர்கள் மாநாடு குறித்து முகப்பு அட்டை கேலிச் சித்திரம் வெளியிடப்பட்டுள்ளது. முகப்பு அட்டையின் அடிக்குறிப்பாக ‘முருகர் மாநாட்டில் துக்ளக்’ என்னும் செய்திக் கட்டுரை ஏட்டின் உள்ளே இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல் பகுதியில் ‘முருகன் எங்களோடுதான் இருக்கிறார்…’ என்று தி.மு.க. அமைச்சர்கள் கூறியதாக செய்தி உள்ளது.
நடைமுறையில் ’முருகன்’ என்றே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் கூறி வருகிறார்கள். அதே நேரம் சூத்திரர்க்குரிய கடவுளாகக் கருதி நாட்டின் வடபுலத்திலே முருகனுக்கு கோயில் கிடையாது; வழிபாடு கிடையாது என ஆரிய பார்ப்பனர் செய்து விட்டனர். ஆனால் இன்று தமிழ் மக்களின் ஓட்டுகளைக் கபளீகரம் செய்திட முருகனை முன்னிலைப்படுத்தி மாநாடு நடத்திட முன் வந்து விட்டனர். இந்த வார ஏட்டின் முகப்பு அட்டையிலேயே அவர்களின் உள்ளார்ந்த எண்ணம் அம்பலப்பட்டுப் போய் விட்டது.
1960களில் வெளிவந்த பிரபல இயக்குநர் சிறீதரின் ‘காதலிக்க நேரமில்லை’ படம் பார்த்தது நினைவுக்கு வருகிறது. பலரும் ரசித்துப் பார்த்த படம்; இப்பொழுதும் பார்க்கின்ற படம். முதுபெரும் நடிகர் டி.எஸ். பாலையா, கதாநாயகிகளின் தந்தையாக, பெரிய எஸ்டேட் அதிபராக நடித்திருப்பார். ‘அசோக்’ என்னும் பெயருடைய கதாநாயகன் அவரிடம் வேலைக்கு வருவதாக கதை. தன்னை வேலையிலிருந்து நீக்கிய பாலையாவை மிரட்ட நண்பனுக்கு பணக்காரர் வேடமிட்டு அழைத்து வருவார் நாயகன். அவரை உண்மையான பணக்காரத் தந்தை என்று கருதி, அதுவரை ‘போக்கிரிப் பயல் அசோக்’ என கூறி வந்த எஸ்டேட் அதிபர், உடனே தனது தோரணையை தாழ்மைப்படுத்திக் கொண்டு தந்தையாக வந்தவனைப் பார்த்து ‘அசோகர், உங்க மகரா?’ என்று கேட்டவுடன் படம் பார்க்கும் திரையரங்கமே நகைச்சுவை மழையில் நனைந்திடும்.
‘முருகன்’ எனும் சொல் மரியாதைக் குறைவென்பது அல்ல ‘அப்பா முருகனே!’ என பக்தர்கள் கூறுவது நடைமுறையே. திரைப்படத்தில் வந்த எஸ்டேட் அதிபர் கூறியதைப் போல ’முருகர் மாநாடு’ என ‘மரியாதையுடன்’ அட்டைப் படத்தில் குறிப்பிட்டு அட்டகாசம் செய்து விட்டார் கோயங்கா வீட்டு கணக்குப் பிள்ளை குருமுர்த்தி.
‘முருகர் மாநாடு’ என அவர் கூறுவது போலித்தனம் என்பதை உள்ளேயுள்ள செய்திக் கட்டுரையில் முருகன் மாநாடு என்றே குறிப்பிடப்படுகிறது. ஏனிந்த போலித்தனம்? ஏட்டில் ‘முருகர் மாநாடு’ என்று சொல்ல வருவதிலேயே மாநாடு நடத்த முன்வந்த ஆரியக் கூட்டத்தின் அஜெண்டா அம்பலப்பட்டு விட்டதே! நடிப்பதைக் கூட சரியாக செய்ய முடியவில்லையா?
– திருப்பரங்குன்றத்தான்